வேர்கள் (Roots)

ஏழு தலைமுறையின் பூர்வீகம் நோக்கிய மாபெரும் பயணம்.....


அமெரிக்க கண்டத்தின் பூர்வகுடிகளான செவ்விந்திய மக்களை இனஅழிப்பு செய்து அங்கே ஆக்கிரமிப்பை அரங்கேற்றி நிலங்களை கைப்பற்றியது பிரிட்டிஷ் அரசு.அதேபோல் அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் தவிர பிற ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ்,போர்ச்சுகல்,ஸ்பெயின் போன்ற நாடுகளும் தங்கள் பங்கிற்கு செவ்விந்தியர்களை அழித்து அவர்களின் பூர்வீக பகுதியில் தங்கள் தேச மக்களை குடியமர்த்தினர்.

பிரிட்டிஷ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தங்கள் மக்களை குடியமர்த்திய பின்னர்,செவ்விந்திய மக்களிடம் அபகரித்த வளம் மிகுந்த நிலங்களில் பணியாற்ற ஆப்பிரிக்க கண்டங்களில் இருந்து கடத்தி வந்து அன்றைய அமெரிக்காவின் அடிமைச் சந்தைகளில் அடிமைகளாக விற்கப்பட்ட கறுப்பின மக்களின் துயரம் தோய்ந்த வரலாற்றைப் பேசுகிறது வேர்கள் என்னும் இந்த நூல்.ஏழு தலைமுறைகளுக்கு முன்னால் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்டு அடிமையாக்கப்பட்ட தன்னுடைய முப்பாட்டனின் முப்பாட்டனுடைய வேர்களை கண்டறிய முற்பட்ட ஒரு மாபெரும் மனித சாகசமே இந்த புத்தகம்.

காம்பியாவின் இயற்கையான சூழலில் இருக்கும் அழகான இஸ்லாமிய கிராமமான ஜுஃபூர் என்ற ஊரிலிருந்து தொடங்குகிறது வேர்கள் என்ற புதினம்.அதிகாலையின் பாங்கொலிக்குப் பிறகு அதிகாலை வணக்கத்தை முடித்த பின்னர் தங்களுடைய பணிகளைத் தொடங்கும் மக்களின் வாழ்வியலை அழகாக கண்முன் காட்சிகளாக விவரிக்கிறது இந்த புத்தகம்.அந்த கிராமத்தில் வசிக்கும் குண்டா கிண்டே என்ற மனிதன்தான் இந்த புத்தகத்தின் நாயகன்.

கதையின் நாயகன் குண்டா கிண்டே தன் பாசமிகு பெற்றோர்களுடன் அமைதியுடனும், அல்லாஹ்வின் மீதான ஆழ்ந்த பக்தியுடனும் வாழ்ந்து வருகிறான்.அவனுடைய வளர்ச்சியைக் கண்டு பெரியவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.பதினாறு வயது  நிரம்பியதும் அந்தச் சமூகத்தின் வழக்கப்படி அவனுக்கான பயிற்சிகளையெல்லாம் கொடுத்தபின் தனியாக நிலம் கொடுத்து வாழ்வைத் தொடங்கச் சொல்கின்றனர்.

அப்படி வாழ்வைத் தொடங்கும் போது, அடர்ந்த காடுகளில் வைத்து மனிதர்களை பிடித்துக் கொண்டு கடத்திச் செல்லும் பரங்கியர்களை(வெள்ளையர்கள்) குறித்து எச்சரிக்கவும் செய்கின்றனர்.குண்டாவும் மிக எச்சரிக்கையுடனேயே வாழ்கிறான்.

அப்படி இருந்தும் ஒரு நாள் மத்தளம் செய்யத் தேவையான மரத்தை வெட்டுவதற்காக குண்டா காட்டுக்கு செல்கிறான்.அவன் சற்றும் எதிர்பாராத தருணத்தில் நான்கைந்து வெள்ளையர்கள் உள்ளூர் கறுப்பர்களின் உதவியுடன் குண்டாவை அடித்து குண்டுக்கட்டாகக் கட்டித் தூக்கிச் செல்கின்றனர்.கடற்கரையில் தயாராக நிற்கும் கப்பலில் ஏற்றுகின்றனர்.அந்தக் கப்பலில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என கிட்டத்தட்ட நூறு கறுப்பின மக்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இங்கிருந்து ஆரம்பிக்கும் குண்டா கிண்டேயின் பயணம்,இனி ஒரு போதும் தன் கிராமத்திற்கு திரும்பி வரப் போவதில்லை என்பதை அறியாத குண்டாவின் பயணம் நமக்கு கறுப்பின மக்களின் அடிமைப் பயணத்தை ரத்தமும்,சதையுமாக துயரத்தை தருகிறது.அந்தக் கப்பலில் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் அடிமைகளின் துயரமும்,அவர்கள் மீது கொடூரங்களை கட்டவிழ்த்து விடும் வெள்ளையர்களின் வெறியும் வாசிக்கும் போது கண்களில் கண்ணீர் வர வைக்கும்.

அமெரிக்கா என்னும் தேசம் முழுக்க முழுக்க ரத்தம் தோய்ந்த வரலாறுகளினால்தான் உருவாக்கப்பட்டது என்பதை இந்த புத்தகத்தை வாசிக்கும் போது அழுத்தமாக உணரலாம்.குண்டா அடிமையாக விற்கப்பட்ட பின்னர் ஒரு பண்ணையில் கொத்தடிமையாக்கப்படுகின்றான்.அங்கிருந்து இரண்டு முறை தப்பிக்கும் போது பிடிக்கப்பட்டு கால் நரம்புகள் துண்டிக்கப்பட்டு அங்கேயே இருக்கிறான்.பின் தன்னுடைய வரலாற்றை எப்படி எல்லாம் தனக்குப் பிறகான தலைமுறைக்கு கொண்டு சேர்த்தான் என்பதுதான் புத்தகத்தின் சுவாரசியமான பக்கங்கள்.அதோடு பண்ணைகளில் அடிமைகளாக்கப்பட்ட கறுப்பின மக்களின் வேதனைகளையும்,வலிகளையும்,அவர்கள் மீதான கொடூரங்களையும் விவரிக்கிறது இந்த புத்தகம்.

அமெரிக்காவின் கறுப்பின மக்களின் விடுதலைக்கான நாயகனான மால்கம் எக்ஸ் தான் கலந்து கொள்ளும் எல்லா கூட்டங்களிலும் கறுப்பின மக்களிடம் தங்களுடைய பூர்வீகம் அமெரிக்கா அல்ல,ஆப்பிரிக்கா கண்டம்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வார்.அப்பொழுது அவர் உடனேயே இருக்கும் அவரின் நடவடிக்கைகளை உடன் இருந்து பதிவு செய்யும் அலெக்ஸ் ஹேலி என்பவருக்கு இந்த தகவல் ஒரு ஆர்வத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்துகிறது.அலெக்ஸ் ஹேலி கடற்படையில் பணிபுரிந்து பின்னர் அங்கிருந்து வெளியேறி சில காலம் அமெரிக்காவின் முக்கியமான சில பத்திரிக்கைகளில் பணிபுரிந்தார்.மால்கம் எக்ஸ் கூறிய தன்னுடைய பூர்வீகத்தை தேடும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆகவே, தன்னுடைய வேர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபடும் அலெக்ஸ் ஹேலி தான் கண்டறிந்த உண்மைகளையும்,வரலாற்றுத் தகவல்களையும் கொண்டு தன்னுடைய ஏழு தலைமுறைப் பாட்டனார் குண்டா கிண்டேதான் என்பதை சொல்லும் புத்தகமே இந்த வேர்கள்.அமெரிக்காவில் பல லட்சங்களுக்கும் மேல் விற்கப்பட்டு சாதனைப் பட்டியலில் இன்றும் இருக்கும் புத்தகம் இது.

ஆயிரம் பக்கங்களுக்கு மேல் ஆங்கிலத்தில் இருக்கும் " ரூட்ஸ் " என்ற இந்த புத்தகத்தை முடிந்த அளவு சுருக்கி வாசிப்பவர்களுக்கு எந்த அலுப்பும் தெரியாமல் புத்தகத்தின் வரலாற்றோடும்,குண்டா கிண்டேயின் வாழ்க்கையோடு  நம்மையும் பயணிக்கச் செய்கிறார் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் M.S.அப்துல் ஹமீது அவர்கள்.இலக்கியச் சோலை வெளியீடாக வந்திருக்கும் இந்த நூல் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.