உடற்பலம்...!

இஸ்லாம் கூறும் உடற்பலமும் தனிமனிதனும்!

ஆரோக்கியமான உடல் மிகப்பெரும் ஒரு அருளாகும்.இதனை அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு வழங்குகின்றான்.உடல் நோயற்று ஆரோக்கியமாக இருப்பதுடன், உடல் பலமாகவும் இருத்தல் அவசியமானது என்பது இதன் கருத்தாகும்.

உண்மையில் உடல் பலத்தை காட்ட கூடிய முக்கியமான அடையாளங்களில் நோயற்ற உடலும் ஒன்றாகும்.ஆரோக்கியமான உடல் கொண்டவர்களால் தான் தொடர்ந்தாற் போல் உழைக்கவும்,இபாதத்களை முழுமையாக நிறைவேற்றவும் முடியும்.

தனிமனித உருவாக்க முயற்சிகளில் மற்றொரு முக்கியமான செயல் உடல் பலம் உள்ள மனிதர்களை உருவாக்குவது.இஸ்லாம் எதிர்பார்க்கும் தனிமனிதன் பலமான உடல் கொண்டவனாக இருக்க வேண்டும்.ஏனெனில், அவனிடத்தில் இஸ்லாம் எதிர்பார்க்கும் பணிகளும் கடமைகளும் இத்தகைய ஒரு பண்பை அவனிடத்தில் வேண்டி நிற்கின்றன.அந்த வகையில் ஒரு மனிதனின் உருவாக்கம் முழுமை பெறவும்,சமநிலை பேணவும் உடற்பலம் என்னும் விஷயத்திலும் போதிய கவனம் செலுத்த வேண்டும்.எனவே தனிமனித உருவாக்க செயற்பாட்டில் உடல் பலம் எனும் கருதுகோள் மிக மிக முக்கியமானது.

நபியவர்கள் கூறுகின்றார்கள், 

" பலவீனமான முஃமினை(நம்பிக்கையாளர்) விட பலமான முஃமின் சிறந்தவனும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவனும் ஆவான்.அனைத்திலும் நன்மை இருக்கின்றது.உனக்கு பயனுள்ளதை செய்வதில் அதிக கவனம் செலுத்து.முடியாது என்று நினைத்து விடாதே "

(முஸ்லிம்)

உடற்பலம் என்பதை தனிமனித உருவாக்க கண்ணோட்டத்தில் நோக்கும் போது, கீழ்வரும் மூன்று முக்கிய கருத்துகளின் மூலம் அதனை விளங்கிக் கொள்ள முடியும்.

1.ஆரோக்கியம் என்னும் கருத்து.

2.உடலின் நெகிழ்ச்சித் தன்மை மற்றும் விரைவாகவும் தொடராகவும் செயல்படக் கூடிய ஆற்றல் என்னும் கருத்து.

3.சொகுசான வாழ்க்கைக்கும் மட்டுமில்லாமல் கரடுமுரடான வாழ்க்கைக்கும் பழக்கப்படுத்தல் வேண்டும் என்ற கருத்து.

1.ஆரோக்கியம் என்னும் கருத்து.

நபியவர்கள் கூறினார்கள், " ஒருநாள் விடிகின்ற பொழுது ஒருவன் ஆரோக்கியமான உடலுடனும்,தனது வீட்டில் பாதுகாப்பாகவும் ,அன்றைய நாள் உணவுடனும் காணப்படுகின்றானோ அவன் இந்த உலகத்தை அதன் அனைத்து பாகங்களுடன் பெற்றுக் கொண்டவனாவான் " என்றார்கள்.

அதுபோல் தொழுகையின் போதும் பல இடங்களில் கேட்கின்ற துஆக்களில் உடல் ஆரோக்கியத்தை தருமாறு துஆ(பிரார்த்தனை) கேட்கப்படவதை காண்கிறோம். இந்த பின்புலத்தில்தான் இஸ்லாம் சுத்தத்தை பேணல், முறையான உணவு பழக்கவழக்கம் ,உடம்புக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவைகளை தவிர்த்தல் போன்ற வழிகாட்டல்களை வழங்கி இருப்பதை காணலாம்.

2.உடலின் நெகிழ்ச்சித் தன்மை மற்றும் விரைவாகவும் தொடராகவும் செயல்படக் கூடிய ஆற்றல் என்னும் கருத்து.

இது ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை மிகவும் இன்றியமையாததாகும்.ஏனெனில் இஸ்லாத்தின் கடமைகளை பொறுத்தவரையில் அவற்றை நிறைவேற்றுவதற்கு கண்டிப்பாக ஒரு மனிதனின் உடல் வளைந்து நெளிந்து செல்லக்கூடிய இயல்புடனும் விரைந்து செயல்பட கூடிய இயல்புடனும் தொடர்ந்து செயல்படக்கூடிய இயல்புடனும் காணப்படல் வேண்டும்.

தொழுகை, நோன்பு, ஹஜ்ஜு, ஜிஹாத், சமூகப்பணிகள், இஸ்லாமிய தாஃவா என்ற எந்த கடமையை எடுத்தாலும் இந்த பண்புகளின் அவசியத்தை உணரலாம்.இதனால்தான் நபியவர்கள் குதிரையேற்றத்தையும் அம்பெறிதலையும் வலியுறுத்தினார்கள்.மல்யுத்தமும் ஓட்டப் போட்டிகளும் நடைபெற்றன.

உடலுக்கு வழங்கப்படுகின்ற இந்த பயிற்சிகள்தான் உள்ளத்தையும் சிந்தனையையும் உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.மனிதன் தனது ஆன்மீக ரீதியான கடமைகளையும் அறிவு ரீதியான கடமைகளையும் உடலை உற்சாகமாக வைத்திருப்பதன் மூலமே மிகச் சரியாக நிறைவேற்ற முடியும்.இதனால்தான் நபித் தோழர்களைப் பற்றி அறிஞர்கள் கூறும் போது அவர்கள் பகல் வேளைகளில் குதிரை வீரர்களாக தொழிற்படுவார்கள்.இரவு வேளைகளில் துறவிகள் போன்று காணப்படுவார்கள் என சிலாகிப்பார்கள்.


3.சொகுசான வாழ்க்கைக்கும் மட்டுமில்லாமல் கரடுமுரடான வாழ்க்கைக்கும் பழக்கப்படுத்தல் வேண்டும் என்ற கருத்து.

ஒரு தடவை உமர் ரலியல்லாஹு அவர்கள் கூறினார்கள் கரடுமுரடான வாழ்க்கைக்கு உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.ஏனெனில் அல்லாஹ்வின் அருட்கொடைகள்(நிஃமத்துகள்) எப்பொழுதும் தொடர்ந்திருக்க மாட்டாது என்று கூறினார்கள்.

மனித வாழ்க்கை எப்பொழுதும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை.அங்கு இன்பமும் துன்பமும் , கஷ்டமும் இலகும், உயர்வும் தாழ்வும், துக்கமும் சந்தோஷமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும்.இதனைத்தான் அல்குர்ஆன் இப்படிக் கூறுகிறது, " இவ்வாறு தான் நாம் மனிதர்களுக்கு மத்தியில் நாட்களை மாற்றி மாற்றி அமைப்போம் " என்கிறது.நோன்பு போன்ற சில கடமைகள் மனிதனிடத்தில் இந்த பயிற்சியை ஏற்படுத்தும் விதமாகவே காணப்படுகின்றது.

சுத்தம்,சொகுசு, நன்றாக சாப்பிடுதல், நன்றாக உறங்குதல், வீணான சிரமத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருத்தல் போன்ற விடயங்களை இஸ்லாம் ஒருபோதும் மறுக்கவில்லை.என்பது மாத்திரம் அன்றி அவற்றை வலியுறுத்தியும் உள்ளது.ஆனால் இவற்றை தவிர்த்து பசியோடும் தாகத்தோடும் உறக்கமின்றியும் சிரமத்துடன் வாழ வேண்டிய சூழலையும் மனிதன் எதிர்கொள்ள தயாராக இருத்தல் வேண்டும்.இது போன்ற தருணங்களில் துவண்டு போய் விடக்கூடாது.பொறுமை இழந்து நம்பிக்கை இழந்து விடக்கூடாது. இஸ்லாம் வலியுறுத்தும் உடற்பலம் என்பதன் பொருள் அது ஆரோக்கியத்தையும், உடலின் நெகிழ்ச்சித் தன்மையையும் வலிமையையும், கரடுமுரடான வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருத்தல் என்ற இந்த அனைத்து கருத்துக்களையும் குறித்து நிற்கிறது.

இஸ்லாம் கூறும் உடல் பலம் என்பது சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டத்தை எதிர்கொள்வதற்கு தம்மை தகவமைத்துக் கொள்வது ஆகும்.இந்தப் போராட்டங்களை எதிர் கொள்வதற்குரிய ஒரு முஸ்லிம் முழுமையான சக்தி நிலைபெற்றவனாக காணப்பட வேண்டும் என்பது இருவேறு கருத்துக்களுக்குட்பட்ட விடயம் அல்ல.அந்த வகையில் தனிமனித உருவாக்கத்தின் பிரதான பண்புகளில் ஒன்றாக பலமான உடல் என்ற பகுதி காணப்படுவது மிகவும் இன்றியமையாததாகும்.

இறுதியாக, உடலும் உள்ளமும் பலமுள்ள மனிதன் என்பவன் உள்ளார்ந்த பௌதீக சக்திகள் கொண்ட ஒரு மனிதனாவான் இவன்தான் ஒரு சமநிலையான மனிதன்.இத்தகைய மனிதர்கள்தான் இஸ்லாமிய தஃவாவிற்கு அவசியப்படுகிறார்கள்.உலகில் இஸ்லாத்தின் இலக்குகளை அடைவதற்கு இவர்களின் உழைப்பே பிரதானமாக இருக்கும்.வரலாறுகள் முழுக்க நிறைய முன்மாதிரிகள் இருக்கிறார்கள். " அல்லாஹ் நம் அனைவரையும் இத்தகைய மனிதர்களாக ஆக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.அல்லாஹ் நம் அனைவரையும் அங்கீகரிப்பானாக!!

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.