இந்திய முஸ்லிம்கள்......

இஸ்லாம் கொள்கை இலக்கு இயக்கம்!!

இந்திய தேசத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்ட மக்கள் கிட்டத்தட்ட 25 கோடிக்கும் அதிகமாக வாழ்கிறார்கள்.இந்தியாவின் இரண்டாவது பெரிய மக்கள் திரள் முஸ்லிம்கள்.

இந்திய சுதந்திரத்திற்கு பின்னரான காலகட்டத்தில் அரசின் அனைத்து துறை ரீதியாகவும் புறக்கணிக்கப்படும் சமூகமாக இஸ்லாமிய சமூகம் உள்ளது.குறிப்பாக 1990களின் காலகட்டங்களுக்குப் பிறகு உலகமயமாக்கலும்,தனியார்மயமாக்கலும் தாராளமாக இங்கே அனுமதிக்கப்பட்ட சமயத்தில் சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமாக இஸ்லாமிய சமூகத்தை அச்சுறுத்தும்  ஹிந்துத்துவப் பாசிசம் தனது புதிய உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.இத்தகைய சூழலில் இந்தச் சமூகத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை வெளிவந்தது.

அந்த அறிக்கையில் சச்சார் அவர்கள் இஸ்லாமிய சமூகத்தை மேம்படுத்த மூன்று பிரதான விடயங்களில் கவனம் செலுத்துமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார்.அவை 

1.இஸ்லாமிய சமூகத்தின் அடையாளங்களை(Identity) பாதுகாக்க வேண்டும்.

2.இஸ்லாமிய மக்களுக்கு பாரபட்சம் காட்டாமல் அனைத்து ரீதியாகவும் சமத்துவத்தை(Equity) வழங்க வேண்டும்.

3.இஸ்லாமிய சமூகம் தங்களை தனிமைப்படுத்துவதாக உணர்கிறார்கள்.எனவே அவர்களின் பாதுகாப்பை(Security) உறுதிப்படுத்த வேண்டும்.
என தங்களின் ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தார்கள்.அந்த அறிக்கை இன்று வரை கிடப்பில்தான் இருக்கிறது.

அதேநேரம்,இஸ்லாமியர்களை முன்னேற்றம் அடையச் செய்வதற்காக அந்தச் சமூகத்தின் உள்ளும் புறமும் நூற்றுக்கணக்கான இயக்கங்கள்,அமைப்புகள்,அரசியல் கட்சிகள் என நாடு முழுவதும் பெரியதும் சிறியதுமாக சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமாக செயல்பட்டுக் கொண்டிருக்கினன்றன.நூற்றுக்கணக்கான இயக்கங்களும்,அமைப்புகளும்,கட்சிகளும் இருந்தும் இயங்கியும் இஸ்லாமிய சமூகத்திற்குள் பெரிய அளவிலான மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.

ஆனால் இதற்கு மாற்றாக முஸ்லிம்களை எதிரிகளாக கட்டமைத்தும், இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதையும், இஸ்லாமிய வெறுப்பையும் நோக்கமாக கொண்டு ஹிந்து தேசியத்தை பாசிச கொள்கையைக் கொண்டு  முன்னெடுக்கும் ஆர் எஸ் எஸ் தலைமையிலான சங்பரிவார்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.தற்போது அவர்கள் தங்களின் இலக்கை அடையும் முயற்சியில் வெற்றியினை அடைந்து கொண்டிருக்கிறார்கள்.


மறுபுறமோ மாறிவரும் காலச்சூழல்களுக்கு ஏற்ப தங்களை தகவமைக்காமல் பழம்பெருமை பேசியும்,எதிர்காலத்திற்கான எந்தவித திட்டங்களையும் வகுக்காமல் இன்றுவரை முஸ்லிம் சமூகம் பின்னடைந்து கொண்டே இருக்கிறது.இத்தகைய சூழலில் ஒரு இஸ்லாமிய இயக்கம் எதைக் கொண்டு எப்படி முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதை சுருக்கமாகவும்,நேர்த்தியாகவும் விவரிக்கிறது.

புத்தகத்தில் வரும் கீழ்க்காணும் பத்திகள் முக்கியமானவைகள்.

" இந்தியாவில் வகுப்புவாத பாசிச தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள்தான் முதன்மை இலக்குகளாக இருக்கின்றனர்.ஒரு உயிரோட்டமான இஸ்லாமிய இயக்கத்திற்கு இதுதான் மிகப் பொருத்தமான உடனடியான களமாகும்.மிகப் பெரிய பணி அதன் முன் இருக்கிறது.ஆகவே,சக்திப்படுத்துதலின் பாதையில் உருவாகும் சவால்களை கையிலெடுக்க திறன் வாய்ந்த ஓர் இஸ்லாமிய இயக்கத்தை இந்தியாவில் கட்டியெழுப்புவதே இந்திய முஸ்லிம்களின் பொறுப்பாகும்.

வகுப்புவாத மற்றும் பாசிச சக்திகளின் அச்சுறுத்தல்களும் சூழ்ச்சிகளும் அதிகரித்தபோதும் ஜனநாயகம்,மதச்சார்பின்மை மற்றும் மனித உரிமைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் வழிமுறை இந்தியாவில் இருக்கிறது.சட்டமியற்றும் அவைகள்,நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை மூலம் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் தலையிடும் உரிமை குடிமக்களுக்கு இருக்கிறது.

இஸ்லாமிய இயக்கம் முன்வைக்கும் பயனாளிகளாக மக்களே உள்ளனர்.இந்திய சமூகம் மற்றும் அரசு குறித்த நேர்மறையான மற்றும் எதார்த்தமான அணுகுமுறை சமகால இஸ்லாமிய இயக்கத்திற்கு இருக்க வேண்டும்.முஸ்லிம் அல்லாதவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்திய சமூகத்தில் வெளிப்படைத்தன்மை,அக்கறை மற்றும் இரக்கம் ஆகியவை அதன் அணுகுமுறைகளாக இருக்க வேண்டும். "

முஸ்லிம்களை சக்திப்படுத்துவதற்காக உழைக்கும் ஒவ்வொரு இஸ்லாமிய ஊழியர்களும்,சமூகச் செயற்பாட்டாளர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.மட்டுமில்லாமல் தங்களுக்கிடையே நிலவும் கருத்து முரண்களை களைந்து மனம் திறந்து விவாதிக்க வேண்டிய புத்தகமும் கூட.இந்த புத்தகம் சிறியதாக இருக்கலாம்.ஆனால் அது பேசும் விடயம் முக்கியமானதும் அவசியமானதும் ஆகும்.



Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.