இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

அல்லாஹு ரப்புல் ஆலமீன் மனித சமுதாயத்திற்கு வழங்கியிருக்கக்கூடிய அருட்கொடைகள் அனைத்துமே ஒன்றைவிட ஒன்று சிறப்பிற்குரியதாக இருப்பதைக் காண முடியும். ஆனால் அவை அனைத்துமே மனிதனுக்கு மிக மிக முக்கியமானவையாகும்.

உதாரணத்திற்கு கண் சிறந்ததா, காது சிறந்ததா? என்றோ கை சிறந்ததா, கால் சிறந்ததா? என்றோ பட்டிமன்றம் வைக்க முடியாத அளவிற்கு, விவாத பொருளாக மாற்ற முடியாத அளவிற்குத்தான் ஒவ்வொரு உறுப்பையும் அருட்கொடையாக அல்லாஹு தஆலா வழங்கியிருக்கிறான்.

இந்த அடிப்படையில் மனித சமுதாயத்திற்கு வல்ல இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்ற மிகச்சிறந்த நிஃமத் பேச்சுத்திறன் (பேசும் ஆற்றல்) ஆகும்.


அதை அல்லாஹ் தனது வேதத்திலே இவ்வாறு தெளிவு படுத்துகிறான்:

خَلَقَ الْإِنْسَانَ  عَلَّمَهُ الْبَيَانَ

அல்லாஹ் அவனே மனிதனிப் படைத்தான். அவனுக்கு (பேச்சையும்) விளக்கத்தையும்  கற்றுக் கொடுத்தான்.

மனிதனுக்கு பேசும் ஆற்றலைக் கொடுத்த ரப்புல் ஆலமீன் அவன் எவ்வாறு பேச வேண்டும் என்ற இங்கிதங்களையும் (ஒழுக்கங்களையும்) கற்றுக்கொடுத்திருகின்றான். பொதுவாகவே மனிதனின் பேச்சு என்பது மற்றவர்களை பண்படுத்தாவிட்டாலும் கூட புண்படுத்தாத வகையில் அமைந்திருக்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின் பேச்சுக்கள் எவ்வாறு அமைய வேண்டும்?,அவர்கள் பேசும்போது எவ்வாறு பண்பாட்டுடன் பேசவேண்டும்?, பேசும்போது எவ்வாறு ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்ற பேச்சின் ஒழுக்கங்களை திருக்குர்ஆனும், அண்ணல் நபியின் அமுத மொழிகளும் கவனமாக கற்றுத் தருகின்றன.

பேச்சின் ஒழுக்கங்களை அல்குர்ஆனின் மூலம் அல்லாஹ் அழகாக கற்றுத் தருகிறான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلاً سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவனை அஞ்சுங்கள். (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே கூறுங்கள். (இவ்வாறு நடந்தால்) அவன் உங்களுடைய காரியங்களை சீராக்கி வைப்பான். உங்களுடைய பாவங்களை மன்னிப்பான்’ (திருக்குர்ஆன் 33:70,71)

மேற்கூறப்பட்ட இரு வசனங்களும், இரு செயல்களை கடைப்பிடித்தால் இருபலன்கள் கிடைப்பதாக வாக்களிக்கின்றன.

இன்றைய முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய அவசியமான இரண்டு பண்புகளில் 1. இறையச்சம், 2.நேர்மையான சொல்.

இந்த இரண்டும் அமைந்துவிட்டால்,முஸ்லிம்களின் காரியங்கள் சீராகிவிடும்,பாவங்களிலிருந்து விடுபட்டு பரிசுத்தமானவர்களாக இருப்பார்கள்.

இறையச்சமும், நேர்மையான பேச்சும் நம்மிடம் இல்லாமல் போனதால் தான் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகிறோம்.

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:

قَوْلٌ مَّعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِّن صَدَقَةٍ يَتْبَعُهَآ أَذًى وَاللَّهُ غَنِيٌّ حَلِيمٌ

கனிவான இனிய சொற்களும்,மன்னித்தலும், தர்மம் செய்த பின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் தர்மத்தைவிட மேலானவையாகும்’. (திருக்குர்ஆன் 2:263)

கொடுத்த தர்மத்தை சொல்லிக் காட்டுவதைவிட, தர்மமே செய்யாமல் கனிவான, இனிய சொற்கள் மிகப்பெரிய தர்மம் என்பதை மேற்கூறப்பட்ட திருக்குர்ஆனின் வசனம் தெளிவு    படுத்துகிறது.

பிறரிடம் எப்படி பேசவேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் திருக்குர்ஆனும்,திருநபியின் மொழிகளும் பாடம் நடத்திக்காட்டுகிறது.

பெற்றோரிடம் பணிவாக பேசவேண்டும்! மனைவியிடம் அன்பாக பேசவேண்டும்! பெரியவர்களிடம் மரியாதையாக பேச வேண்டும்! சிறியவர்களிடம் இரக்கமாக பேசவேண்டும்! நண்பனிடம் நட்பாக பேசவேண்டும்! மருத்துவரிடம் உண்மையாக பேசவேண்டும்! எதிராளியிடம் சமாதானமாக பேசவேண்டும்! அனாதைகளிடம் ஆதரவாக பேசவேண்டும்!

ஆட்சியாளர்களிடம் உரிமை(யை) யாக பேசவேண்டும்! உறவினரிடம் உறவைப் பேசவேண்டும்! நோயாளியிடம் சுகமாக பேசவேண்டும்! கோழையிடம் வீரத்தை பேசவேண்டும்! வீரனிடம் விவேகத்தை பேசவேண்டும்!

ஆசிரியரிடம் பொறுப்புணர்வுடன் பேசவேண்டும்! மாணவனிடம் ஒழுக்கம் பற்றி பேசவேண்டும்! வியாபாரியிடம் வணிகம் பற்றி பேசவேண்டும்! விவசாயியிடம் வேளாண்மை பற்றி பேசவேண்டும்! முதலாளியிடம் லாபம் பற்றி பேசவேண்டும்! தொழிலாளியிடம் வேலையைப் பற்றி பேசவேண்டும்! இறைவனிடம் பிரார்த்தனையில் பேசவேண்டும்!

இப்படித்தான் சகலவிதமான மனிதர்களிடம் அவர்களின் தகுதிக்கேற்ப நல்லவிதமான முறையில் பேசவேண்டும் என பின்வருமாறு திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا

மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்’. (திருக்குர்ஆன் 2:83)

பெற்றோரிடம்:

وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا

பெற்றோரில் ஒருவரோ, அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்துவிட்டால்,  அவர்களை ‘ச்சீ’என்று (சலிப்பாக) சொல்லவேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்ட வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான, கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (திருக்குர்ஆன் 17:23)        

யாசகரிடம்:

وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِنْ رَبِّكَ تَرْجُوهَا فَقُلْ لَهُمْ قَوْلًا مَيْسُورًا

(உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து, (அதை) எதிர்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் அன்பான சொல்லையே சொல்வீராக’ (திருக்குர்ஆன் 17:28)

ஆட்சியாளரிடம்:

فَقُولَا لَهُ قَوْلًا لَيِّنًا لَعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَى

நீங்கள்  மூஸா (அலை), ஹாரூன் (அலை) இருவரும் ‘பிர் அவ்னிடம்’ (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள். அதனால் அவன் நல்ல உபதேசம் பெறலாம்,அல்லது அச்சம் கொள்ளலாம். (திருக்குர்ஆன் 20:44)

அண்ணலாரின் அழகிய முன்மாதிரிகள்:

عَنْ أَنَسٍ قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّابًا وَلَا لَعَّانًا وَلَا فَحَّاشًا كَانَ يَقُولُ لِأَحَدِنَا عِنْدَ الْمُعَاتَبَةِ مَا لَهُ تَرِبَ جَبِينُهُ

நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ,கெட்டவார்த்தைகள் பேசுபவராகவோ,சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரை கண்டிக்கும்போதுகூட, ‘அவருக்கு என்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்’ என்றே கூறுவார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) புகாரி: 6031)

இஸ்லாம் எவ்வளவுதான் பேச்சு நாகரீகத்தைக் கற்று கொடுத்திருந்தாலும் அதை நன்கு அறிந்த மார்க்க அறிஞர்கள் கூட சில சமயங்களில் தன்னுடைய வீண் கௌரவத்திற்காக அருவெறுக்கத்தக்க வகையில் பேசிவிடுகிறார்கள். சமீபத்தில் சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் ஷம்சுதீன் காசிமி அவர்கள் இட ஒதுக்கீடு சம்மந்தமாகவும், பெண்களை மஹ்ரமின் துணையில்லாமல் ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து செல்வது சம்மந்தமாகவும் உரை நிகழ்த்தினார்கள். உண்மையிலேயே இமாம் காசிமி அவர்களுடைய கருத்திலே சில ஆட்சேபனைகள் இருந்தாலும் அதை எதிர்கொண்ட TNTJ வினரின் போக்கு தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டுமல்ல நடுநிலையான மாற்று மத சமயத்தவர்கள் மத்தியிலும் முகச்சுளிப்பை ஏற்படுத்திவிட்டது.

எதிராளியின் கருத்தைக்கூட கண்ணியமாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர இழிவான முறையில் எதிர்கொள்வதை இஸ்லாம் தடுக்கிறது. விமர்சன நாகரீகத்தையும் கற்றுக்கொடுகிறது.

அண்ணல் நபி (ஸல்) அவர்களை எத்தனையோ கயவர்கள் வசை பாடியிருக்கிறார்கள் ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் யாரையும் நபியவர்கள் ஏசியதாக, கண்ணியக்குறைவாக பேசியதாக காண முடியாது. மாறாக கண்ணியமான முறையில் பதில் சொல்வார்கள், சபிக்க மாட்டார்கள், அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை பேசமாட்டார்கள் என்று மேலே நாம் குறிப்பிட்ட ஹதீஸ் தெரிவிக்கின்றது.

ஒரு உண்மை விசுவாசியின் பண்பும் அதுவாகத்தான் இருக்கும் என்றும் பின்வரும் நபிமொழி நமக்கு தெளிவுபடுத்துகின்றது:


ஒரு இறை விசுவாசி குறை கூறுபவராகவோ, சாபமிடுபவராகவோ,அருவெறுக்கத்தக்கதை பேசுபவராகவோ,மட்டரகமாக பேசுபவராகவோ இருக்க மாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ் ஊத் (ரலி) திர்மிதி)

ஒரு மனிதனை நரகப் படுகுழியில் தள்ளுவது அவனது வன் சொல்’

عَنْ عَدِىِّ بْنِ حَاتِمٍ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنَّهُ ذَكَرَ النَّارَ فَتَعَوَّذَ مِنْهَا وَأَشَاحَ بِوَجْهِهِ ثَلاَثَ مِرَارٍ ثُمَّ قَالَ « اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ فَإِنْ لَمْ تَجِدُوا فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ

பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்) என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அதீபின்ஹாத்திம் புகாரி: 6023)

‘ஒரு மனிதனை சுவனப் பூஞ்சோலையில் நுழைவிப்பது அவனது நன் சொல்’

ஹானீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:–

நான் நபி (ஸல்) அவர்களிடம் வருகை புரிந்ததும், ‘அல்லாஹ்வின் தூதரே! எந்த காரியம் சுவனத்தை பாக்கியமாக கொடுக்கும்’ என கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நன் சொல்லும்,உணவளிப்பதையும் நீர் அவசியம் பேணிவாரும்’ என இவ்வாறு பதிலளித்தார்கள். (நூல்: ஹாகிம்)

وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ

இறைவனையும், மறுமைநாளையும் நம்பியவர் ஒன்று நல்லதை பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) நூல்: புகாரி)

இறுதியாக:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ : مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنُ لَهُ الْجَنَّةَ

யார் இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ள உறுப்பையும் (நாவு) இரண்டு கால்களுக்கு மத்தியிலுள்ள உறுப்பையும் (மர்மஸ்தானம்) எனக்காக பொறுப்பேற்று கொள்கிறாரோ அவர் சுவனம் செல்ல நான் பொறுப்பேற்றுகொள்கிறேன். (ஷரஹுஸ்சுன்னாஹ்)

அன்பர்களே! பேசினால் நல்லதை பேசுங்கள். இல்லையானால் வாய் மூடி இருந்துவிடுங்கள். அல்லதை பேசி பாவத்தில் வீழ்ந்து விடாதீர்கள்.

இறைவன் கொடுத்த இந்த அளப்பெரிய நிஃமத்தை இஸ்லாத்திற்காக பயன்படுத்துவோம்!! இறை அருளைப்பெறுவோம்!!! ஆமீன்!

Comments

Popular posts from this blog

வஸதிய்யா

ஹஜ்.