வஸதிய்யா

மனித குலத்திற்கு வழிகாட்டியாய் அமையும் வஸதிய்யா எனும் நடுநிலை

கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்களது சில மேற்கோள்களைத் தொகுத்து நோக்கிய போது…


கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள்,  வஸதிய்யா எனும் இஸ்லாத்தின் நடுநிலை குறித்து ஆழ்ந்து பேசியவர்களில் முக்கியமானவர். வஸதிய்யாவின் ஆழ அகலங்களை ஆதாரபூர்வமாய் வெளிக் கொண்டு வந்ததில் அவரது பங்கு மகத்தானது. வஸதிய்யா குறித்து அவர் பேசிய பரிமாணங்களில் வஸதிய்யா என்பது ஒரு மனித குலத் தேவை என்பது மிக முக்கியமான ஒரு பகுதி.


அதாவது பக்கம் சாராத,  நீதியான,  இலக்கு நோக்கிய,  இஸ்தீரமான ஒரு வாழ்வு முறை மனித இனத்தின் அத்தியவசியத் தேவைகளில் ஒன்று. அந்த வாழ்வு முறையைத்தான் அல்குர்ஆன் மனிதர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறது. “ஹுதன் லின்னாஸ்”மனிதர்களுக்கான வழிகாட்டி என அல்குர்ஆன் தன்னை அறிமுகப்படுத்தியது இந்தப் பின்புலத்தினாலாகும்.


இந்த வாழ்வு முறையை,  மனித இனத்திற்கு அறிமுகப்படுத்தும் பொறுப்பு முஸ்லிம்களிடம் இருக்கின்றது. அதனையே அல்குர்ஆன் இவ்வாறு கூறியது “நீங்கள் மக்களுக்கு சாட்சியாளர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக” (பகரா 143 ) என்கிறது.


இந்த இடத்தில் கலாநிதி கர்ளாவி அவர்கள்,  வஸதிய்யா எனும் பண்பின் மூலம் மனித குலத்தேவை மிகச் சரியாக நிறைவேற்றப்படுவதற்கான ஒரு நிபந்தனையைக் குறிப்பிடுகின்றார். அதாவது,  வஸதிய்யா எனும் நடுநிலை வாழ்வுமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சமூகக் கட்டமைப்பு காணப்படல் வேண்டும்,  அந்த முன்மாதிரியில் இருந்தே மனித இனம் கற்றுக் கொள்கிறது,  என்கிறார். இஸ்லாமிய முன்மாதிரியில் இருந்து மனித இனம் கற்றுக் கொண்டமை மிகத் தெளிவாக இஸ்லாத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் நடைபெற்றிருக்கிறது. சாட்சியாக இருத்தல் என்று அல்குர்ஆன் குறிப்பிட்டமையின் பொருள் இக்கருத்தையே பிரதிபளிக்கின்றது. ஏனெனில் இதன் அறபுப் பதமான‘ஷஹாதா’ என்பது ‘கண்களால் பார்த்தல்,  உடன் கலந்திருத்தல்’ போன்ற அடிப்படைக் கருத்துக்களை உள்ளடக்கிய சொல்லாகும். எனவே,  பார்த்துப் பின்பற்றுதல் அல்லது கலந்து வாழ்ந்து கற்றுக் கொள்ளுதல் என்றே இங்கு பொருள் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தின் ஷஹாதத்,  ஒரு முன்மாதிரியான சமூகமாக வாழ்வதன் மூலமே மிகச் சரியாக நிறைவேற்றப்படுகிறது.


அந்த முன்மாதிரி சமூகக் கட்டமைப்பைப் பற்றி கலாநிதி கர்ளாவி அவர்கள் கூறும்போது “அந்த உம்மத்தில் இஸ்லாத்தின் பிரதிபளிப்பு,  தூய்மையான ஏகத்துவமாகவும்,  உண்மையான ஈமானாகவும்,  பயனுள்ள அறிவாகவும், ஸாலிஹான செயலாகவும்,  சிறந்த ஒழுக்கமாகவும்,  நன்மையை நோக்கிய அழைப்பாகவும்,  சத்தியத்தையும் பொறுமையையும் மையப்படுத்திய பரஸ்பர உபதேசமாகவும்,  தக்வாவையும் நன்மையையும் மையப்படுத்திய பரஸ்பர ஒத்துழைப்பாகவும்,  அன்பையும் தயாளத்தையும் மையப்படுத்திய பரப்புரையாகவும் இவை அனைத்துக்குமான உழைப்பாகவும் காணப்படல் வேண்டும். அப்பொழுதுதான் இது மக்களுக்காக அனுப்பப்பட்ட சிறந்த சமூகமாகக் காணப்படும்.”


தொடர்ந்து கூறுகையில்,  “அது மத்திமத்தை பிரதிபளிக்கும் சமூகம்,  வலதையோ இடதையோ சாராத சமூகம்,  கிழக்கின் கம்யூனிஸத்தையோ மேற்கின் முதலாளித்துவத்தையோ சாராத சமூகம். அது தனித்துவமான போக்கும் சுதந்திர ஆளுமையும் உடைய சமூகம்”.


மேலும் கூறுகையில்,  “அது தனக்காக மாத்திரம் வாழாத ஒரு சமூகம். தனது வயிற்றை மாத்திரம் நிரப்பவும்,  அதனது ஆசைகளை மாத்திரம் நிறைவேற்றவும் தனது தேவைகளை மாத்திரம் செய்து கொள்ளவும் நினைக்காத சமூகம். பிறருக்காக வாழும் சமூகம். அவதிப்படும் மனித இனத்தின் கவலைகளை தனது தோள்கள் மீது சுமக்கும் சமூகம். அது சர்வதேச தூதைச் சுமந்த சமூகம். மனிதர்களுக்காகவே அனுப்பப்பட்ட சமூகம். அதன் தூதுவர் உலகத்தாருக்கு அருள்,  எல்லோருக்குமான வழிகாட்டி.“அவரை நாம் உலகத்தாருக்கான அருளாகவே அனுப்பினோம்” (அன்பியா– 107)” என்றார்கள்.


இவ்வாறான முன்மாதிரியான ஒரு சமூகமாக வாழ்வதன் மூலமே,  மனித இனத்தின் வழிகாட்டி என்ற பாத்திரப் பங்களிப்பை முஸ்லிம் உம்மத் மிகச் சரியாக வழங்க முடியும்.


அடுத்து கலாநிதி கர்ளாவி அவர்கள் முன்வைக்கின்ற மற்றொரு நிபந்தனை இருக்கின்றது. மனித குலத்திற்கு வழிகாட்டியாய் இஸ்லாத்தின் வஸதிய்யா அமைய வேண்டும் எனின் அதன் அமுலாக்கம் இரு தீவிர வடிவங்கள் அற்றதாய்க் காணப்படல் வேண்டும்.


அந்த இரண்டு வடிவங்களையும் கலாநிதி கர்ளாவி அவர்களுடைய வார்த்தைகளிலேயே கூறினால் “முதல் வகையினர்,  தீவிர கடும்போக்கு கொண்டவர்கள். இவர்கள் மனிதர்களை சிரமத்திற்குள்ளாக்குவர். ஹராம்களின் வட்டம் இவர்களிடத்தில் விசாலமாகக் காணப்படும். இலகுவானதை விடவும் எப்பொழுதும் பேணுதலானதையே முற்படுத்துவர். சட்ட வசனங்களின் நேர்க் கருத்தையே எடுப்பர். ஷரீஆவின் நோக்கங்களைப் பார்க்க மாட்டார்கள். சமூகத்தை பெரும் சங்கடத்தில் தள்ளி விடுவர். அல்லாஹ் இலகுபடுத்தியதை மக்களுக்குக் கஷ்டமாக்குவர். மார்க்கம் எளிதாக்கியவற்றை சிக்கல்படுத்தி விடுவர். ஷரீஅத் விசாலமாக்கியவற்றை குறுகியதாக்கி விடுவர். மக்களுக்கு சலுகைகளை வழங்க மாட்டார்கள். நிர்ப்பந்த நிலையிலும் எதனையும் அனுமதிக்க மாட்டார்கள். சலுகை நிலைகளை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். கால,  இட,  சூழமைவுகளுக்கு ஏற்ப பத்வா மாற்றடைய முடியும் என்பதை அவர்கள் ஏற்பதில்லை. அவர்கள் இறந்த காலத்திற்குள்ளேயே தம்மை குறுக்கிக் கொண்டு விட்டனர். நிகழ்காலத்தில் வாழவுமில்லை. எதிர்காலம் பற்றிய ஒரு தூரப் பார்வையும் இல்லை. அவர்களது ஆழ்ந்த தத்துவம் என்னவெனின்,  முன்னோர் பின்னோருக்கு எதனையும் மீதம் வைக்கவில்லை. முன்னர் செய்யப்பட்டவற்றை விடவும் புதிதாக எதுவும் செய்வதும் சாத்தியமற்றது என்பர்.”


தொடர்ந்தும் கூறுகையில்,  “அவர்கள் பிறரை அங்கீகரிக்க மாட்டார்கள். அவர்களுடன் கருத்துப் பரிமாறவும் மாட்டார்கள். முரண்படுவோருடன் விட்டுக் கொடுத்துச் செல்ல மாட்டார்கள். உலகை கறுப்புக் கண்ணாடி கொண்டுதான் பார்ப்பார்கள். எல்லா மனிதர்களையும் - அவர்கள் தீங்கிழைக்காதோராக இருந்தாலும் கூட - இஸ்லாத்தின் எதிரிகள் என்றே நோக்குவர். அவர்கள் தமது பூமியில் வாழும் நிலையிலேயே,  இஸ்லாத்தைத் தழுவும் வரை அல்லது மண்டியிட்டு ஜிஸ்யா தரும்வரை,  அவர்கள் எதிர்த்துத் தாக்கப்பட வேண்டும்,  என்பர். முஸ்லிம்களுக்கும் ஏனையோருக்கும் இடையிலான  உறவு,  அடிப்படையில் யுத்தமாகவே அமையும்சமாதானமல்ல என்பர்”.


இரண்டாவது வகையினர் பற்றிக் கூறுகையில்,  “இரண்டாம் வகையினர்,  பொருற்படுத்தாத கவனயீன போக்குக் கொண்டோர். இவர்களிடம் அகீதா,  வாஜிப்,  ஹராம் போன்ற வரையறைகள் இருப்பது போலவே தென்பட மாட்டாது. தீன் இவர்கள் கைகளில் பிசைந்த மாவு போல்தான் இருக்கிறது. அதனை எப்பொழுது வேண்டுமானாவும் எப்படி வேண்டுமானாலும் வடிவமைப்பார்கள். இவர்களிடத்தில் தீனில் மாறாதது என்று ஒன்றுமில்லை. அனைத்துமே புதிய இஜ்திஹாதுகளுக்கும் புதிய வாசிப்புகளுக்கும் உற்படக் கூடியவையே என்பர். இடப்புறத்திலிருந்து வலப்புறத்திற்கும் வலப்புறத்திலிருந்து இடப்புறத்திற்கும் மார்க்கத்தை இவர்கள் மாற்றிக் கொண்டிருப்பர். மார்க்கத்தில் நிறுவப்பட்ட ஒன்றும் மறுக்கப்படும். மறுக்கப்பட்ட ஒன்றும் நிறுவப்படும். சத்தியம் அசத்தியமாகலாம். அசத்தியம் சத்தியமாகலாம். ஏன் இல்லை? இவர்கள் பிக்ஹையும் அதன் அடிப்படைகளையும் அதன் இமாம்களையுமே மறுக்கின்றனர். சுன்னாவோடு விளையாடுகின்றனர். அல்குர்ஆனோடு அதன் விளக்கங்கள் என்ற பெயரில் கேளிக் கூத்தாடுகின்றனர்.”


தொடர்ந்து கூறுகிறார்“அல்குர்ஆனையும் சுன்னாவையும்‘புதிய வாசிப்பு’ செய்ய நினைப்போர்,  நபியவர்கள் ஸஹாபாக்களுக்குக் கற்பிக்காத, ஸஹாபாக்கள் தாபிஈன்களுக்குக் கற்பிக்காத ஒரு புதிய மார்க்கத்தையே கொண்டு வர நினைக்கின்றனர்… கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக இந்த உம்மத் ஹலால் என்ற நம்பியதை ஹராமாக்கும். அதுபோல் ஹராம் என்று நம்பி வந்ததை ஹலாலாக்கும். புதிய மார்க்கம் அது. அங்கு நம்பிக்கைகள் மாறலாம். விழுமியங்கள் மாற்றப்படலாம். வாஜிப்கள் இல்லாது போகலாம். அல்லாஹ் அனுமதிக்காதவையும் சட்டமாகலாம்”.

மேலும் சொல்கிறார் “இதன் மூலம் ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு மார்க்கம்,  ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மார்க்கம்,  ஒவ்வொரு குழுவினர்க்கும் ஒரு மார்க்கம். ஏன் ஒவ்வொரு தனிநபர்க்கும் ஒரு மார்க்கம் என்ற நிலையே ஏற்படப் போகிறது. உம்மத்தை ஒன்றிணைக்கும் காரணியாக அங்கு மார்க்கம் இருக்காது. இவ்வாறான ஒரு மார்க்கத்தின் மூலம் ஒரே நம்பிக்கையுடன் ஒரே ஷரீஅத்துடன்,  ஒரே விழுமியங்களுடன்,  ஒரே தூதுடன் ஒரு உம்மத் தோற்றம் பெறுவது சாத்தியப்பட மாட்டாது. மாற்றமாக இங்கு மார்க்கம் பிரிக்கும் காரணியாகவே இருக்கும்,  சேர்க்க மாட்டாது. தூரமாக்கும் காரணியாகவே இருக்கும்,  நெருக்க மாட்டாது. தகர்க்கும் காரணியாகவே இருக்கும், கட்ட மாட்டாது” என்கிறார்.


மார்க்க அமுலாக்கத்தின் போது இந்த இருவகை வடிவங்களும்,வஸதிய்யாவைப் பிரதிபளிக்க மாட்டாது. எனவே மனித குலத்திற்கான ஒரு வாழ்வு முறையாக இவை அமைவது சாத்தியமற்றது. மனித குலத்திற்கான வாழ்வு முறை வழிகாட்டி இந்த இரண்டு வடிவங்களும் தவிர்ந்த வேறோர் வடிவமே.


அதுபற்றிக் கலாநிதி கர்ளாவி அவர்கள் கூறுகிறார்கள் “இஸ்லாத்தில் வஸதிய்யா என்பது இரண்டு தரப்புகளுக்கு மத்தியில் நடுநிலை பேணுவதாகும். நடுநிலை என்பது ஒவ்வொரு தரப்புக்கும் உரிய உரிமையையும் இடத்தையும் வழங்குவதாகும். ஒன்று மற்றையதை மீறக் கூடாது. உதாரணமாக தெய்வீகம் – மானுடம்,  ஆன்மீகம் – லௌகீகம்,உலகம் – மறுமை,  வஹி – பகுத்தறிவு,  இறந்தகாலம் – எதிர்காலம்,  தனிமனிதன் – சமூகம்,  யதார்த்தம் – இலட்சியம்,  உரிமைகள் – கடமைகள்,  நிலையானது - மாறும் தன்மை,  சட்ட வசனம் – இஜ்திஹாத்,  நேரடிப்பார்வை - இலக்கு மையப்பட்ட பார்வை,  நஸ்ஸும் பகுத்தறிவும் போன்றவற்றிற்கு மத்தியில் ஒன்று மற்றையதை மீறாமல்,  ஒவ்வொன்றுக்கும் உரிய இடம் வழங்கப்படுதல் நடுநிலை எனப்படும்”.என்கிறார்.


தொடர்ந்தும் கூறுகிறார் “நாம் எதிர்பார்க்கும் இஸ்லாம் அது நடுநிலை உம்மத்தின் இஸ்லாம். அதுதான் முதல் இஸ்லாம். குர்ஆனினதும் சுன்னாவினதும் இஸ்லாம். இலகுபடுத்தும் இஸ்லாம் சிரமப்படுத்துவதல்ல. நன்மாராயனம் சொல்லுதல் - வெறுப்பு ஏற்படுத்துவதல்ல. நளினம் -வன்முறையல்ல. புரிந்துணர்வு - வெறுத்தல் அல்ல. விட்டுக் கொடுத்தல் - வெறி கொள்ளுதல் அல்ல. உள்ளடக்கம் - புறத்தோற்றமல்ல. செயற்பாடு - வாதாட்டமல்ல. கொடுத்தல் - சொல்லிக் கொள்ளுதல் அல்ல. இஜ்திஹாத் - தக்லீத் அல்ல. புனரமைத்தல் - தேக்க நிலையல்ல. கட்டுக்கோப்பு - வரையறையின்மையல்ல. நடுநிலை  - தீவிரம் அல்ல” என்கிறார்.


மேலும் கூறுகிறார் “அகீதாவின் மீது எழுந்த இஸ்லாம்,  அந்த நம்பிக்கையின் உயிர்நாடி ஏகத்துவம். இபாதாவின் மீது எழுந்த இஸ்லாம்,  அதன் உயிர்நாடி இஃலாஸ். பண்பாட்டின் மீது எழுந்த இஸ்லாம்,  அதன் உயிர்நாடி நன்மை. ஷரீஆத்தின் மீது எழுந்த இஸ்லாம்,  அதன் உயிர் நாடி நீதி. ஒற்றுமைப் பிணைப்பின் மீது எழுந்த இஸ்லாம்,  அதன் உயிர் நாடி சகோதரத்துவம். இவை அனைத்தினதும் விளைவு ஒரு நாகரீகம்,  அதன் உயிர் நாடி சமநிலையும் முழுமையும்,  அதன் கட்டுப்பாடுச் சக்தி நடுநிலையும் புனர்நிர்மாணமும்,  அதன் திறவுகோள் பொறுத்தமான பழமையிலிருந்து பயன்பெறலும் பயனுள்ள புதியதை வரவேற்றலும்”.என்கிறார்.


இன்னும் சொல்கிறார் “இந்த இஸ்லாம் மாத்திரமே,  எம்மையும் மனித குலத்தையும் காக்க வல்லது,  நாகரீகக் கப்பல் மூழ்கி விடாமலும்,  அதனோடு சேர்ந்து நாங்களும் மூழ்கி விடாமலும் பாதுகாக்கும் சக்தி இஸ்லாத்திடம் மாத்திரமே இருக்கிறது”


எனவே,  வஸதிய்யா என்பது ஒரு சமூகத்தின் எழுச்சிக்கு மாத்திரமன்றி,  முழு மனித இனத்தினதும் எழுச்சிக்கு வழியமைக்கிறது. தீவிரமற்ற நடுநிலைப் போக்கு,  சிறந்த உயர்ந்த தெரிவு,  இஸ்திரமான வாழ்வொழுங்கு,  இலக்கு நோக்கிய நேரான வழி,  நீதி போன்ற கருத்துக்களை வஸதிய்யா குறிக்கிறது. இவையனைத்தும் மனித இனத்தின் சுபீட்சத்திற்கும் சந்தோசத்திற்கும் உரிய காரணிகளாகவே அமைகின்றன. நீதி,  சமாதானம்,  பாதுகாப்பு,  சமத்துவம்,சுதந்திரம்,  இஸ்திரப்பாடு போன்ற மானுட விழுமியங்கள்,  வஸதிய்யாவின் உள்ளார்ந்த கருத்தினுள்ளே மிகத் தெளிவாக உற்பொதிந்து காணப்படுகின்றன. எனவே வஸதிய்யா என்பது ஒரு மானுட எழுச்சிச் சிந்தனை. இதனைத்தான் கலாநிதி கர்ளாவி அவர்கள் வஸதிய்யா ஒரு மனித குலத் தேவை என்று குறிப்பிட்டார்கள்.


இறுதியாக,  கலாநிதி கர்ளாவி அவர்கள் பேசிய கருத்துக்களை சாரம்சப்படுத்தினால் இவ்வாறு கூறலாம். மனித குல எழுச்சி சிந்தனையான வஸதிய்யா இஸ்லாத்தில் மாத்திரமே மிகச் சரியாக உற்பொதிந்திருக்கிறது. ஏனெனில்,  அது அல்லாஹ்விடமிருந்து வந்தது. அந்த வகையிலேயே இஸ்லாம் மனித குல வழிகாட்டியாக மாறுகிறது. இந்த வழிகாட்டும் பணி வெறுமனே சிந்தனைப் பரிமாற்றமாக மாத்திரம் நடைபெற மாட்டாது. மாற்றமாக ஒரு முன்மாதிரியைப் பார்த்து அதனோடு கலந்து வாழ்ந்து பெற்றுக் கொள்ளும் வகையிலும் காணப்படல் வேண்டும். அதுவே நிலையானதும் நீண்ட கால விளைவைத் தரக்கூடியதாகவும் காணப்படும். இங்குதான் முன்மாதிரியான முஸ்லிம் உம்மத்தின் இருப்பு ஒரு முக்கிய நிபந்தனையாகிறது. அந்த உம்மத்தில் இஸ்லாத்தின் பிரதிபளிப்பு பழமைக்கும் புதுமைக்கும் நடுவில் அதன் மூலவேர் சிதையாமலும் கால வளர்ச்சி மாற்றங்களை முறையாகக் கையாளும் விதத்திலும் அமைய வேண்டும். அப்பொழுதுதான் அது மனித குல வழிகாட்டியாய்க் காணப்படும்.


அல்லாஹ்வே போதுமானவன்.


குறிப்பு :-  மேற்கோள்கள் அனைத்தும் கலாநிதி கர்ளாவி அவர்களின்“பிக்ஹுல் வஸதிய்யா அல் இஸ்லாமிய்யா வத்தஜ்தீத்” எனும் நூலில் இருந்து பெறப்பட்டதாகும்.

நன்றி : www.sheikakramnaleemi.blogspot.in

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

ஹஜ்.