மனித உயிரின் மதிப்பும்,வாழ்வதற்கான உரிமையும்-1

வாழ்வுரிமை!


ஒவ்வொரு மனிதனுக்கும் கண்டிப்பாக கிடைக்க வேண்டியது வாழ்வதற்குரிய உரிமை என்ற கருத்தில் மனிதாபிமானமுள்ள எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் மிகவும் முக்கியமானதாக வாழ்வுரிமை சேர்க்கப்பட்டுள்ளது. பூமியில் பிறந்த ஒரு மனிதனை, அவன் இயற்கையாக மரணம் அடையும் முன்னர் அவனது உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்பது மட்டுமல்ல,
 அவன் மரணிக்கும் வரை அவன் வாழ்வதற்குத் தேவையான எல்லா வாய்ப்புகளும் அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமையும் சமூகத்திற்கு உண்டு.

வாழ்வதற்கான உரிமையை பற்றி சிந்திக்கவும், அதற்காக போராட்டக் களத்தில் குதிக்குவும் பல காரணங்கள் உண்டு. சர்வாதிகாரிகளும், அநியாயமும், அநீதியும் சேர்ந்த ஆட்சிக்கு எதிராக குரல் உயர்த்திய ஆயிரக்கணக்கான மக்கள் சிரச்சேதம் செய்யப்பட்டதற்கு வரலாறுகளே சாட்சி. தொடர்ந்து நடந்த இதுபோன்ற குரூரங்களே வாழ்வதற்கான உரிமையை போராடிப் பெற வேண்டிய நிலையை உண்டாக்கியது. அதிகாரபலமும் பணபலமும் உள்ளவர் எவரையும் எக்காரணமும் இல்லாமல் கொன்றொழிக்கலாம் என்ற நிலைக்கு எதிராக உயர்ந்த அழுத்தமான எதிர்ப்பே வாழ்வுரிமை போராட்டத்திற்கு அடித்தளம் அமைத்தது.

இப்பரந்த பூமியில் உள்ள எல்லா உயிர்களின் வாழ்வாதாரத்திற்கும் தேவையான எல்லாமே பூமியிலேயே இருக்கிறது. அவற்றை எல்லாம் பேராசை பிடித்த மனித பிசாசுகள் அபகரித்துக் கொண்டு, அப்பாவி ஏழைகளின் உணவு தட்டுகளை வெறுமையாக்கின. இந்த மோசமான குணத்தின் காரணமாக வாழ்வதற்கு தேவையான உணவும், குடிநீரும், மற்ற அத்தியாவசிய வாழ்வாதாரங்களும் மறுக்கப்பட்ட, பாவப்பட்ட ஏழைகள் உயிரை விட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த குரூரம் கண்டு பொங்கி எழுந்த ஆக்ரோஷமே மனித உரிமைக்காக மனிதாபிமானிகளை போராட வைத்தது.

மனித உயிருக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் கொடுப்பதன் மூலம் வாழ்வுரிமையை அழுத்தமாக எடுத்துச் சொல்கிறது இஸ்லாம். இன, மத, மொழி, ஜாதி வேறுபாடோ, ஆண், பெண் என்ற பேதமோ, முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடோ, அரசன், குடிமக்கள் என்ற வித்தியாசமோ இல்லாமல் எல்லாம் மனிதனின் உயிரையும் சமமாகவே இஸ்லாம் பார்க்கிறது. அதுபோல குற்றமற்ற ஒருவனைக் கொல்வது அனைத்து மனிதர்களையும் கொல்வதற்கு சமம் என்றும் குர்ஆன் கூறுகிறது.

 
" இதன் காரணமாகவே, இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் கட்டளை பிறப்பித்தோம், “எவனொருவன் ஒரு மனிதனைக் கொலை செய்ததற்குப் பகரமாக அன்றி அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பிய காரணத்திற்காக அன்றி வேறு காரணத்திற்காக மற்றவனைக் கொலை செய்கின்றானோ, அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான். மேலும், எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.”

(அல்குர்ஆன் : 5:32)

" அல்லாஹு தடுத்துள்ள எந்த உயிரையும் சத்தியத்திற்காக அன்றி நீங்கள் கொன்று விடாதீர்கள்." 
(அல்குர்ஆன் 6:151)

முஹம்மது நபி (ஸல்) அவர்களது இறுதிப் பேருரையில் இவ்வாறு கூறுகிறார்கள், " உங்களது இந்த நாட்டில், இந்த மாதத்தில், இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அதேபோல உங்களுடைய ரத்தமும், சொத்தும், கௌரவமும்  பரிசுத்தமானதாகும். நீங்கள் உங்களது இறைவனை சீக்கிரமே  சந்திப்பீர்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தது குறித்து அவன் கேள்வி கேட்பான்."

ஒரு மனிதனின் ரத்தம், அதாவது அவனது உயிர் அரஃபா தினத்தை போல, துல்ஹஜ் மாதத்தை போல மக்கா நகரை போல புனிதமானது என்பதையே அல்லாஹ்வின் தூதரின் வாக்கு நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஒரு மனிதனின் வாழ்வுரிமை எந்த விலை கொடுத்தாவது காக்கப்பட வேண்டும் என்பதை இஸ்லாம் இதன் மூலம் அறிவுறுத்துகிறது.

-அஸ்ரப் கல்பெட்டா

-தொடரும்.....  

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.