மனித உயிரின் மதிப்பும், வாழ்வதற்கான உரிமையும்-2

வாழ்வுரிமை!


மனித உயிரின் முக்கியத்துவத்தையும் அதை அநியாயமாகப் பறித்தால் மறுமையில் கிடைக்கக் கூடிய தண்டனையைக் கூறி அச்சுறுத்துவதோடு  நின்று விடவில்லை இஸ்லாம். பாதுகாப்பு என்பதை செயல்படுத்தும் விதமாக ஒரு காரியத்தையும் முன்னிலைப்படுத்துகிறது. அநியாயமாக ஒரு உயிரை பறிப்பவனுக்கு மரணதண்டனையை இஸ்லாம் விதிக்கிறது. 

மனிதனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை வரும்போது ஹராமான செயல்களைக் கூட செய்ய அனுமதிக்கிறது இஸ்லாம். மனிதனின் வாழ்வுரிமையை நிலைநிறுத்த இஸ்லாம் கூறும் வழிமுறையே இந்த விதிவிலக்கு. உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை வரும்போது இஸ்லாம் மனிதனின் பக்கமே நிற்கிறது. 

கீழே கூறப்பட்ட குர்ஆன் வசனம் இதைத் தெளிவுபடுத்துகிறது.

" (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர.(அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும். அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்.இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள். எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்.ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்."

(அல்குர்ஆன் : 5:3)

ஒரு மனிதனது உயிருக்கு யார் மூலமாவது ஆபத்து ஏற்பட்டால் அவனோடு போராடி உயிரை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. அவ்வாறு போராடும் போது அவர் கொல்லப்பட்டால் அவருக்கு ஷஹீதுடைய (உயிர் தியாகி) அந்தஸ்து கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

" தனது செல்வத்தை காப்பாற்றிக்கொள்ள ஒருவன் போராடி கொல்லப்பட்டால் அவன் ஷஹீதாவான். தனது உயிரை காப்பாற்றிக்கொள்ளும் போராட்டத்தில் ஒருவன் கொல்லப்பட்டால் அவனும் ஷஹீதாவான். தனது மார்க்கத்தை காப்பாற்ற போராடிக் கொல்லப்படுபவனும் ஷஹீதாவான்.

-(திர்மிதி)

வாழ்வதற்கான உரிமையையை குறித்தும், அதற்காக போராடுவதை குறித்தும் இஸ்லாமிய அறிஞர்கள் விரிவாக விவாதித்துள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு,

" ஒரு மனிதனுடைய அல்லது அவனுடைய குடும்பத்துடைய உயிரை அநியாயமாக பறிக்கவோ அல்லது அவனது சொத்துக்களை அபகரிக்கவோ எவனேனும் முயற்சித்தால் அவற்றைப் பாதுகாப்பதற்காக அவனை எதிர்த்துப் போராடலாம். அந்த போராட்டம் எதிரியின் கொலையில் முடிந்தாலும் அவர் மீது தவறில்லை."

-(இமாம் நவவீ(ரஹ்),ஷர்ஹுல் முஹத்தப் 20/402)

" ஒரு மனிதரின் உயிர், குடும்பம், சொத்து ஆகியவற்றை அதிகரிக்கவோ அல்லது அனுமதி இல்லாமல் அத்துமீறி வீட்டினுள்ளே பிரவேசிக்கவோ யாராவது முயற்சித்தால் அவரை தாக்க வேண்டும். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கும் நபிமொழி இதற்கு ஆதாரம்,
" ஒரு மனிதனின் சொத்தை அபகரிப்பதற்காக மற்றொருவன் வரும்போது அவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் அவன் (சொத்துக்கு உரிமை உள்ளவன்) மரணித்தால் அவனுக்கு ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும். இப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களை எதிர்க்க வில்லை என்றால் மனிதர்களுடைய சொத்துக்கள் கொள்ளையர்கள் வசமாகும். ஆன்மீக ரீதியிலான வாழ்க்கை நடத்துவோரின் உயிரும் சொத்துக்களும் அக்கிரமக்காரர்கள் கைவசமாகும் "  என நபி(ஸல்) கூறினார்கள். 

-(இப்னு குதாமா,அல்காஃபி 4/112)

இமாம் ஷாஃபி (ரஹ்) கூறியதாக இப்னு முன்திர் அறிவிப்பது, " ஒருவரது உயிரையோ, சொத்தையோ, பெண்களையோ அழிக்கும் எண்ணத்தோடு யாராவது வந்தால் அவனை எதிர்க்க வேண்டியது அவரது கடமை ஆகும். அதற்கு ஒரு நஷ்ட ஈடும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ", 
" இப்படிப்பட்ட அநியாயக்காரர்களை எதிர்க்க வேண்டும் என்பதே அறிவாளிகளின் அபிப்பிராயம் " என்றும் கூறுகிறார்.

இஸ்லாமிய ஆட்சியின் கீழ் ஜிஸியா வரி செலுத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிமல்லாத மக்களின் உயிரையும் உடமையையும் பாதுகாக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். முஹம்மது நபி(ஸல்) கூறியதாவது " ஒரு திம்மி(இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் முஸ்லிம் அல்லாதவர்)களை உபத்திரவம்  செய்தால் நான் உபத்திரவம்  செய்பவர்களின் எதிரியாக இருப்பேன்."

" முஸ்லிம்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட ஒரு முஸ்லிம் அல்லாதவரை முடக்க நினைப்பதும், அவருக்கு மேல் தாங்க முடியாத வரிகளை சுமத்துவதும், அவரோடு குரூரமாக நடந்து கொள்வதும், அவருடைய உரிமைகளை தடுப்பதும் இன்னும் இது போன்ற காரியங்களையும் செய்பவருக்கு எதிராக இறுதிநாளில் நான் இருப்பேன் " என நபி(ஸல்) கூறினார்கள்.

-(அபூதாவூத்)

இத்தகைய நபிமொழிகளையும் இஸ்லாமிய வரலாற்றையும் முன்னுதாரணமாகக் கொண்டு பிற்கால அறிஞர்கள் பல கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

"(ஆட்சிமுறையில்) முஸ்லிம்களுக்கு உள்ள அதே விதிகளே திம்மிகளுக்கும்  உண்டு."

-(அப்துர் ரஹ்மான் இப்னு அபூபக்கர், அல்-அஸ்ஹாபு வந்நளாயிர்1/359)

" அவர்களைப் பாதுகாக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கட்டாய கடமையாகும். முஸ்லிம்களோ அல்லது முஸ்லிம் அல்லாதவர்களோ அநியாயக்காரர்களிலிருந்து  அவர்களையும் அவர்கள் குடும்பத்தாரையும் பாதுகாக்க வேண்டியதும் கடமையாகும். அவர் முஸ்லிம்களோடு சேர்ந்து இருந்தாலும் சரி. பிரிந்து இருந்தாலும் சரி. ஏனென்றால், அவரது சொத்துக்களும் உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவர் ஜிஸியா வரி செலுத்துகிறார். அதனால் அவருக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றால் அவர் ஜிஸியா செலுத்த வேண்டிய அவசியமில்லை."

-(இமாம் ஷூராஸி,அல்முஹத்தப் 3/ 317)

-அஸ்ரஃப் கல்பெட்டா

-தொடரும்......

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.