தனிமனிதனும் சமூகமும்

தனிமனிதன் சமூகம் குறித்த ஒரு சிறு இஸ்லாமியப் பார்வை
மனித வரலாற்றில் தனி மனிதனும் அவனது உரிமைகளும் எப்போதும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கிறது. மனித சமூகத்தின் அஸ்திவாரமே தனிமனிதன்தான் என்பதை அங்கீகரிக்கும் அதேநேரம், தனிமனிதன் சமூகத்திற்காகவா அல்லது சமூகம் தனிமனிதனுக்காகவா என்ற சர்ச்சை அறிவுஜீவிகளுக்கும் மத்தியில் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

மனிதன் ஒரு சமூக உயிரினம். தனியாக வாழ்வதோ, தனியாக வளர்வதோ, முன்னேறுவதோ அவனால் முடியாது. சமூகத்தோடு சேர்ந்து வாழும் வகையிலேயே அவன் இயற்கையாக படைக்கப்பட்டுள்ளான். பிறந்தது முதல் சமூகத்தோடு எந்த தொடர்பும் இல்லாமல் ஒரு குழந்தை வளர்க்கப்படுமானால் அவனால் முழுமை பெற்ற ஒரு மனிதனாக வளர்வது சாத்தியமில்லை என்று சமூக அறிவியல் ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இன்று வரை உள்ள மனிதர்களையும் சமூகங்களையும் கவனமாக பரிசீலித்து ஆராய்ந்த பிறகு சமூகத்தோடு இணைந்து வாழ்க்கை நடத்தாத ஒரு மனிதனின் வாழ்க்கை மிகவும் மோசமாக, சகிக்க முடியாததாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் அபிப்பிராயப் படுகின்றனர்.

" மனிதனின் உடல் வளர்ச்சியும் இன்னும் அறிவு சார்ந்த திறமைகளும் வளர்வதற்கு சமூகத்தோடு உணர்வுபூர்வமாக இணைந்த வாழ்க்கை மிகவும் அவசியமானது. மற்றவர்களை பார்த்தும், புரிந்துமே மனிதன் காரியங்களை படிக்கவும் அதை நடைமுறைப்படுத்தவும் செய்கிறான்." இது ராபர்ட் ஏ. பாரோன் என்கிற அறிஞரின் கூற்றாகும்.

சமூகத்தின் சக்தி வாய்ந்த பின்துணை இல்லாமல் ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செல்ல முடியாது.அவன் மேன்மேலும் உயர்ந்த நிலையை அடைவதற்கு சமூகத்தின் உதவி மிக அவசியமாகும்.இந்நிலையில் யாரோடும் எவ்வித பந்தமும் இல்லாத ஒரு மனிதனுக்கு எப்படி பேசவும் நடக்கவும் தெரியாதோ, அதே போல சமூக மரியாதைகள் மற்றும் வளர்ச்சியின் பாடங்கள் ஆகியவற்றையும் அவன் அறிய முடியாது. அதனால் மனிதனுக்கு அதற்குள்ள வழி வகுத்துக் கொடுக்க வேண்டிய கடமை சமூகத்தினுடையது அல்லவா? அதனால் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு வளர்ச்சிக்கு தேவையான எல்லா வழிகளும் கிடைப்பது என்பது அனைத்து மனிதர்களின் உரிமை ஆகும். அது அவனது பிறப்புரிமை ஆகும். இந்த உரிமைகள் கிடைக்க அவனுக்கு வழி வகுத்துக் கொடுக்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும். குடும்பமோ, சமூகமோ ஆட்சியாளர்களோ, இந்த கடமையில் இருந்து தப்ப முடியாது.

 தனிமனிதன் சமூகத்திற்கு கீழ்ப்படிந்த தீரவேண்டும் என்பதையோ, தனிமனிதனின் வளர்ச்சியே முக்கியம் அதற்கு சமூகம் எல்லாவிதத்திலும் வழிவிட வேண்டும் என்பதையோ இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. இதற்கு பதிலாக தனிமனித மற்றும் சமூக வளர்ச்சியும் பாதுகாப்பும் ஏற்பட அல்லாஹ் உருவாக்கிய சட்டதிட்டங்களுக்குக் கீழ்படிந்தே இந்த இரு சாராரும் வாழ வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.இறைவனின் வேதமான திருக்குர்ஆன் இப்படிக் கூறுகிறது....

" (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள். நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்."

(அல்குர்ஆன் : 7:3)

இறைனுடைய சட்டங்களே மனிதனையும்,சமூகத்தையும் அவரவருக்கு உரிய இயற்கையான முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் என குர்ஆன் கூறுகிறது.

" ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். "

(அல்குர்ஆன் : 30:30)

மனிதன் இஷ்டம் போல வாழலாம் என்ற அதிகப்படியான சுதந்திரத்திற்கு கடிவாளம் இடும் இஸ்லாம் சமூகத்தில், பாரம்பரியமாக தொடர்ந்து வரும் அல்லது புதிதாக நியமிக்கப்படும் சட்டங்களை தனிமனிதனின் மேல் கட்டாயமாக திணிப்பதையும் தடுக்கிறது. இஸ்லாம் மனிதனின் படைப்பு திறனை ஊக்குவித்து அவனது எதிர்மறையான மற்றும் கோபங்களை கட்டுப்படுத்துகிறது. இரு சாராருக்கும் இடையில் மோதல் போக்கு உருவாகாமல் அனுசரிக்கும் போக்கு உண்டாக வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளும் அவன் செய்ய வேண்டிய கடமைகளும் நியாயமான முறையில் நடப்பில் வரும்போது சமூகத்தில் அமைதியும் பாதுகாப்பும் சாத்தியமாகும் என இஸ்லாம் தீர்க்க தரிசனத்தோடு கூறுகிறது.

" (நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை. எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்."

(அல்குர்ஆன் : 6:48)

ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை. அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்."

(அல்குர்ஆன் : 7:35)

இஸ்லாம் கூறும் தனிமனிதனும்,சமூகமும் ஒன்றோடொன்று பிணைந்து காணப்படும் அம்சமாகும்.இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.மனிதர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கிறார்கள்.சார்ந்திருந்து கூட்டாக வாழும் மனித தொகுப்புதான் சமூகம்.இந்த சட்டகத்திற்குள் முரண்பாடுகள் தோன்றாத வரை மனிதன் தன்னுடைய உரிமைகளுடன் இந்த பூமியை சிறப்பான முறையில் நிர்வகிப்பான்.முரண்பாடுகளும் பிணக்குகளும் தோன்றினால் நஷ்டம் மனிதனுக்குத்தான்.

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.