இஸ்லாமோஃபோபியா(Islamophobia)

இஸ்லாமிய வெறுப்புத் தொழில் அல்லது இஸ்லாமோஃபோபியா...

இஸ்லாமோஃபோபியா எனும் பெயர் புதிதாக புனையப்பட்டது 1990-ன் மத்தியில் தான். உலகின் பல்வேறு பண்பாடு மற்றும் பன்முகத்துவம் அமைந்த சூழல்களில் தோன்றியதே இந்த சொல்லாடல்.

 ஃபோபியா(Phobia) என்ற கிரேக்க சொல்லுக்கு “திகில் அல்லது பெரும் அச்சம் கொள்ளல்” எனத் தமிழாக்கம் செய்யலாம். இஸ்லாமோஃபோபியா எனும் வார்த்தைப் பிரயோகத்தை கட்டமைக்க அடிப்படையாகக் கொள்ளும் Xenophobia எனும் வார்த்தைக்கு “புதிய அறிமுகத்தைக் கண்ட அதீத பயம்” அல்லது “புதியவர்களைக் கண்டவுடன் எழும் திகில்” என்று அர்த்தம்.

ஒரு விவகாரத்தில் அதீத பயம் தோன்ற அந்த விடயம் குறித்த முழுமையான அறிவு இல்லாமல் இருப்பதும்,அதனைக் குறித்த தவறான கற்பிதங்களும்,வழிகாட்டல்களும்தான் பிரதான காரணங்களாக அமைய முடியும்.அதோடு தான் பின்பற்றும் கொள்கையை சரி காண்பதற்காக பிற கொள்கைகள் குறித்த மோசமான சிந்தனை ஓட்டங்களும் காரணமாக இருக்கிறது.அந்த வகையில் இஸ்லாமோஃபோபியாவையும் குறிப்பிடலாம்.

இஸ்லாமோஃபோபியா என்பது ஏதோ புதிதாய்த் தோற்றுவிக்கப்பட்ட நவநாகரீக வார்த்தைப் பிரயோகம் போல் தோன்றினாலும், அதன் கருப்பொருள் கிறிஸ்துவத்திற்கு எதிரான சிலுவைப்போரில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றியும், அவ்வெற்றி முழு மேற்கத்திய உலகையும் அதிர்ச்சியடைய வைத்த காலத்திலேயே தோன்றிவிட்டது எனவும் கூறலாம்.

உலகத்தில் அதிக அளவில் வளர்ந்து வரும் ஒரு சமயமான இஸ்லாத்தைத் தழுவும் மக்கள் தொகை பற்றிய புள்ளிவிபரங்களும், அவை தரும் அதீத பயமுமே உலக அளவில் இஸ்லாமோஃபோபியாவின் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாகும். தவறான சித்தாந்தங்களும், எதிர்மறை கருத்துக்களும் வெகுஜன ஊடகங்களால் மிகப்பரவலாக திட்டமிட்டே உருவகப்படுத்தப்பட்டாலும் அதனையும் மீறிய இஸ்லாமிய வளர்ச்சியைக் கண்ட பிரமிப்பு தரும் உள்ளுதறல், மேற்குலகுக்கு “இஸ்லாமோஃபோபியா” எனும் அச்சத்தை மேலும் மேலும் அதிகப்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது.

நெடுங்காலமாக முன்னெடுக்கப்படும் சித்தாந்த ரீதியான பழிவாங்கல்களும் இதில் தொழிற்படுகிறது.மேற்கத்திய நாடுகளுக்கு சிலுவைப் போரின் தொடர்ச்சியாக இஸ்லாமோஃபோபியா முன்னெடுக்கப்பட்டாலும் இந்தியாவில் இஸ்லாம் பார்ப்பனீய வைதீக மதத்தின் ஆதிக்கத்தை அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்தி தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தியதில் இருந்து இஸ்லாமிய வெறுப்புத் தொழில் தொடங்குகின்றது.ஆக உலக அளவில் நாகரீகங்கள் மற்றும் சித்தாந்தங்களில் மோதல்களின் தொடர்ச்சியாக இஸ்லாமிய வெறுப்புத் தொழில் விளங்குகிறது.

வெகுசன ஊடகங்கள் எனும் மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலம், இஸ்லாத்தைப் பற்றியும், அது முன்வைக்கும் வாழ்க்கைத் திட்டத்தை முறையாக கடைபிடிக்கும் முஸ்லிம்கள் பற்றியும் பெருமளவில் வெறுப்பையும்,அச்சத்தையும், உலக அரசியல் அரங்கில் இஸ்லாமோஃபோபியா தோற்றுவித்த மிக முக்கியமான நிகழ்வு எனக்கூறலாம்.வெகுசன ஊடகங்கள் இஸ்லாம் குறித்த இரட்டைப் பார்வையுடன் செய்திகளை வெளியிடுவதை அனைத்துச் சூழல்களிலும் காணலாம்.

இந்தியாவிலும்,உலகம் முழுவதிலும் இஸ்லாமிய வெறுப்பை பரவலாக்கியதில் முக்கியப் பங்கு சினிமாத் துறைக்கும் உண்டு.அந்தந்த காலகட்டங்களுக்கு ஏற்றார்போல் புனைவாகவும்,உண்மைச்சம்பவங்களாகவும் கதை சொல்கிறோம் என்ற பெயரில் இஸ்லாமியர்களை மோசமானவர்களாக,பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் சினிமா முக்கிய இடம் பெறுகிறது.தமிழில் வெளிவந்த பம்பாய் திரைப்படமும்,ஹேராம் திரைப்படமும்,விஸ்வரூபம் திரைப்படமும் சில உதாரணங்கள்.இந்தி மொழியில் ஏகப்பட்ட உதாரணங்களைக் காட்ட முடியும்.இந்தியா முழுக்க இருக்கும் மொழிகள் அத்தனையிலும் எடுக்கப்படும் சினிமாக்களில் இஸ்லாமிய வெறுப்பை மையப்படுத்திய ஏராளமான திரைப்படங்கள் இருக்கின்றன.

விஸ்வரூபம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன்.

முஸ்லிம்கள் தங்களின் வெளிப்புற அடையாளங்களான தொப்பி அணிந்திருந்தாலோ,தாடி வைத்திருந்தோலோ,இஸ்லாமியய பெண்கள் ஹிஜாப் அணிந்திருந்தாலோ,ஆண்கள் பைஜாமா குர்தா உள்ளிட்ட ஆடைகள் அணிந்திருந்தாலோ அவ்வளவு ஏன் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம் பெயர்களைப் போல் வைத்திருந்தாலோ சந்தேகக் கண் கொண்டு பார்க்கவும்,சோதனைகளுக்கு உட்படுத்தவும் ஆளாகிறார்கள்.ஹிஜாப் குறித்தான விவாதங்கள் எல்லா காலங்களிலும் முடிவதாகவே இல்லை.அதே போல் புனிதப் போர் என்ற கற்பிதமும் இஸ்லாமிய வெறுப்பை முன்னெடுக்கும் காரியங்களில் முதன்மையாக கட்டமைக்கப்படுகிறது.பணியிடங்களில் புறக்கணிப்பு,சந்தேகத்துடன் பார்த்தல்,முஸ்லீம்களை என்ன செய்தாலும் யாரும் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற கற்பிதம் என இதன் தொடர்ச்சி நீள்கிறது.இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்லாமிய வெறுப்புத் தொழில் முஸ்லீம்களுக்குள்ளும் ஆழமாக ஊடுருவி உள்ளது.ஏதாவது ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்தால் அதில் முஸ்லீம்கள் பெயர் அடிபட்டால்(அது புனையப்பட்ட செய்தியாக இருந்தாலும்) தாழ்வு மனப்பான்மையில் தாங்களாகவே முன்வந்து பொதுச்சமூகம் என்பதின் முன்னிலையில் தாங்கள் தவறானவர்கள் இல்லை எனக் காட்ட தங்களை வலிந்து நிரூபிக்க முற்படுகிறார்கள்.அதேவேளை வேறு எந்த மதத்தவர்களும் இப்படி செய்வதில்லை.ஆனால் இஸ்லாமியர்களின் சுய வாக்குமூலத்தை அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.எவ்வளவு கேடுகெட்டத்தனம் இது.

இந்தியாவில் இஸ்லாமிற்கும்,முஸ்லீம்களுக்கெதிராகவும் செயல்படுவதையே இலக்காக வைத்திருக்கும் சங்பரிவார்கள் இஸ்லாமோஃபோபியாவையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.அற்ப காரணங்களுக்காக முஸ்லிம் என்ற காரணத்தை மட்டுமே வைத்து வட இந்தியப் பகுதிகளில் முஸ்லிம்களை கும்பல்களால் அடித்துப் படுகொலை செய்வது இஸ்லாமிய வெறுப்பின் உச்சம்.எங்குமே இல்லாத லவ் ஜிஹாத் என்ற ஒரு வார்த்தையை உருவாக்கி முஸ்லிம்களுக்கெதிராக இஸ்லாமிய வெறுப்பை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த வரிசையின் சமீபத்திய இஸ்லாமிய வெறுப்புச் சொல் நார்க்கோடிக் ஜிஹாத்.இந்திய ஊடகங்களின் இஸ்லாமிய வெறுப்புத் தொழில் மிகப் பிரபலமானது.ஒரு சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பிடிபடும் நபர் முஸ்லிமாக இருந்தால் பூதாகரமாக சித்தரிப்பதும்,அதுவே பிடிபடும் நபர் பிற மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் பெட்டிச் செய்திகளாகவும்,சில விநாடிச் செய்திகளாகவும் காட்டுவார்கள்.ஊடக அறம்,ஊடக தர்மம் எல்லாம் இஸ்லாமோஃபோபியாவிற்குட்பட்டு செயல்படுவதே இங்கு பகிரங்கமான விதி.

அதோடு, தங்களை நடுநிலையாளர்கள்,அனைத்து மக்களுக்குமானவர்கள் என்று வலிந்து காட்டிக் கொள்ள விரும்பும் எந்த மதங்களையும் சாராத முற்போக்குகள் என்போர் இஸ்லாமிய வெறுப்புத் தொழிலை பரப்புவதில் பிரதானமாக இருக்கிறார்கள்.இந்தியாவைப் பொறுத்தவரை இவர்கள் எல்லாம் இன்னும் ஹிந்து மதப் பார்வையிலேயே முஸ்லீம்களையும்,அவர்களின் வாழ்வியல்களையும் அணுகுகிறார்கள்.இதற்கு ஏராளமான உதாரணங்களைக் காட்ட முடியும்.பிற மதங்களின் குறைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாத இவர்கள் இஸ்லாம் என்று வரும்போது மட்டும் ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்து குறை சொல்வார்கள்.

உலகை உலுக்கிய கொரோனா எனும் பெருந்தொற்றின் முதல் அலையின் காலத்தில் சங்பரிவார கும்பலைச் சேர்ந்தவர்கள் இஸ்லாத்தை குற்றப்படுத்தி இஸ்லாமோஃபோபியாவை முன்னெடுத்தார்கள்.டெல்லி தப்லீக் மர்கஸில் இருந்துதான் இந்தியா முழுக்க கொரோனா பரவியது என்று பொய்யான குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் கொண்டு இந்திய முஸ்லிம்களை தனிமைப்படுத்தும் வேலைகளில் இறங்கினார்கள்.கூடவே இந்திய ஊடகங்களும் சேர்ந்து கொண்டு மிகப்பெரிய அளவிலான இஸ்லாமிய வெறுப்பு தொழிலை மேற்கொண்டார்.அதேநேரம் கொரோனோ பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் காலத்தில் நடத்தப்பட்ட லட்சக்கணக்கில் மக்கள் கூடிய கும்பமேளாவை குறித்து யாரும் எதுவும் பேசவும் இல்லை. எந்த ஊடகங்களும் வாய் திறக்கவில்லை.ஆனால் முஸ்லிம்கள் தங்களின் சேவை மனப்பான்மையாலும் மனிதநேய செயல்களினாலும் தங்களால்தான் கொரோனா பரப்பப்பட்டது என்ற அவதூறுகளையும் பொய்ச் செய்திகளையும் முறியடித்தார்கள்.

“முஸ்லிம் பயங்கரவாதம்” என்கிற சொல்லாடலைத் தாண்டி இப்போது “இஸ்லாம்” என்பதே அடிப்படையில் ஆபத்தானது, எல்லா முஸ்லிம்களுமே பயங்கரவாதத்தை மனதளவில் ஏந்தி இருப்பவர்கள்தான், திருக்குர் ஆன் என்பது வன்முறையை ஒரு வழிமுறையாகப் பரிந்துரைக்கும் நூல், நபிகள் நாயகம் பயங்கரவாதத்தின் முன்னோடி என்கிற கருத்தாக்கங்கள் பல மட்டங்களில் மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன.

‘முஸ்லிம்கள்’, ‘இஸ்லாம்’ என்பவற்றின் ஊடாக அவர்கள் இந்தப் பரந்துபட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணற்ற பண்பாட்டு வேறுபாடுகள், மொழிகள், உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றுடன் வாழும் முஸ்லிம்கள் எல்லோரையும் ஒரே மாதிரியான, ஆபத்தானவர்களாக பார்க்கிறார்கள்.

இந்தியாவில் சுமார் 20 கோடிக்கும் அதிகமாக முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். உலகம் முழுவதும் 'இஸ்லாமோஃபோபியா' அதிகமாக இருக்கும் நிலையில், முஸ்லிமாக இருப்பதே குற்றமாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கோடிக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் அவர்களது பிரச்சனைகளை பட்டியலிட்டு ஆழமாக அலச வேண்டியது அவசியமாகும்.


Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.