இஸ்லாத்தில் பிரார்த்தனைகள்..

இஸ்லாமும் பிரார்த்தனைகளும்

பிரார்த்தனை(துஆ) இஸ்லாமிய பண்பாட்டின் முக்கியமான ஓர் அங்கமாகும்.நாம் இறைவனை அடிபணிவதில் ஓர் பரிபூரண நிலையை நோக்கி உயர வேண்டும் என விரும்பினால்,நாம் நம்முடைய இறைவனைக் குறித்து சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முற்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.அத்துடன் மனத்தூய்மையையும்,ஒழுக்க மாண்பையும் கொண்டிருக்க வேண்டும்.இவற்றை நாம் உணர்ந்து கொள்வதற்கு பிரார்த்தனை நமக்கு பேருதவி செய்கிறது.
இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய கடமையான தொழுகையே பிரார்த்தனைதான்.அல்குர்ஆனின் முதல் அத்தியாயமான " சூரா பாத்திஹா " பிரார்த்தனைகளின் முழு வடிவமாக திகழ்கிறது.

இஸ்லாம் பிரார்த்தனை  என்பதை ஒரு மனிதனின் அன்றாட வாழ்வியல் தொகுப்புடனேயே இணைத்து வைத்திருக்கிறது.மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை,இன்பமான நேரங்களிலும்,துன்பமான தருணங்களிலும்,வாழ்க்கையின் சோதனையான,நெருக்கடியான தருணங்கள் என வாழ்வின் அனைத்துப் பகுதிகளோடும் மனிதனை பிரார்த்தனையோடே பயணிக்குமாறு இஸ்லாம் கட்டமைத்திருக்கிறது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தன்னுடைய வாழ்க்கையின் அனைத்துச் சூழல்களிலும் இறைவனை முழுமையாகச் சார்ந்தவராகவே இருந்தார்.எந்த ஒரு சூழ்நிலையிலும் இறைவனை விட்டு விலகி நிற்கவில்லை.அதற்கு உதாரணமாக அவர் இறைவனிடம் கேட்ட பிரார்த்தனைகளை நோக்கினால் நமக்குப் புரியும்.

" பிரார்த்தனை ஒரு வணக்கமாகும் " என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, " என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும்பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’ என்று உங்கள் இறைவன்கூறுகிறான் ” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: திர்மிதீ 

மேலும் இறைவன் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது தாங்கக்கூடிய அளவுக்குதான் கஷ்டங்களைக் கொடுகிறான்.மனிதன் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இறைவனை துதிக்கவேண்டும், இறைவனிடத்தில் மன்றாடி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதற்காகவே படைத்த இறைவனே, எவ்வாறு ஒவ்வொரு மனிதனும் பிரார்த்தனை (துஆ) செய்யவேண்டும் என்று அருள்மறை குர்ஆனில் அழகாக சொல்லித் தருகிறான்.அல்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயமான அல்பகராவின் இறுதி வசனம் இவ்வாறு கூறுகிறது:

" அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! " 

அல்குர்ஆன் (2:286).

" எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! " (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) 

அல்குர்ஆன் (3:8)

பிரார்த்தனை என்பது ஏக இறைவனாகிய அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும் என்பது முக்கியமான விதிகளில் ஒன்று.

" உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ,அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இரு கைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப் போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை."

அல்குர்ஆன் (13:14)

நபிகளார்(ஸல்) கூறினார்கள்,

"உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒருசேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில்அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு"அல்லாஹ் அதிகமாக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: அஹ்மத்


ஓர் அடியான் தன்னிடம் பிரார்த்தனை செய்யும் போது அவனை வெறுங் கையுடன்அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான்.

"உங்களுடைய இறைவன் சங்கையானவன்.அவனுடைய அடியார் தனது கையை அவன்பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி)
நூல்: இப்னு மாஜா

பிரார்த்தனைகள் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்து குர்ஆனிலும்,நபிமொழித் தொகுப்புகளிலும் நமக்கு ஏராளமாக கிடைக்கின்றன.காலையில் உறங்கி எழுவதில் இருந்து இரவு உறங்கச் செல்லும் வரையில் ஒரு மனிதனில் அன்றாட நிகழ்வுகள் ஒவ்வொன்றிற்கும் தேவையான பிரார்த்தனைகளை இஸ்லாம் நமக்கு கற்றுத் தருகின்றது.பிரார்த்தனை என்பது இறைவனை நெருங்கச் செய்வதற்கு மட்டுமில்லாமல் ஒரு மனிதனின் கவலைகளை குறைக்கவும்,அவனுடைய மனதை சமாதானப்படுத்தவும் உதவுகின்றன.நாம் இங்கே பிரார்த்தனைகள் குறித்த இஸ்லாமியப் பகுதியில் மிக மிகக் குறைந்த அளவே பதிவு செய்திருக்கிறோம்.இஸ்லாத்தில் பிரார்த்தனையின் அளவு என்பது எல்லையில்லாதது.எல்லாம் வல்ல இறைவனை எந்த நேரமும்,எந்த தருணத்திலும் நினைவு கொண்டு அவனிடமே தம்மை அர்ப்பணிக்கும் வாழ்வைப் பெற அந்த அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்!!!




Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.