இஸ்லாமிய அடையாளங்களின் தனித்தன்மைகள்.

மஸ்ஜித் (பள்ளிவாசல்கள்)..


மாநபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றபொழுது கூஃபா என்ற இடத்தில் தங்கினார்கள்.அங்கே அவர்கள் செய்த முதல் பணி ஒரு மஸ்ஜிதை எழுப்பியதுதான்.

ஏனெனில் ஒரு முஸ்லிமுக்கு அடையாளம் என்பதே மஸ்ஜிதுதான். தன்னைத் தாழ்மைப்படுத்தி, படைத்த இறைவனிடம் மண்டியிட்டு, ஸஜ்தா செய்வதற்காக பூமியில் புனிதமாக உருவாக்கப்படுவதுதான் மஸ்ஜித்.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறவர்கள் மஸ்ஜித்களை வளமாக்குவார்கள்.” 

(திர்மிதி)

இங்கே வளப்படுத்துதல் என்பது பிரம்மாண்டமாக,நவீன அலங்காரங்களுடன் மிக உயர்வாக பள்ளிவாசல்கள் கட்டப்படுவதல்ல.மாறாக,இருக்கும் பள்ளிவாசல்களில் மனிதர்கள் தங்கள் இறைவனை வழிப்பட்டு  வணக்கங்களின் வழியாக இறைவனும் தூதரும் காட்டித் தந்த செயல்களை நிறைவேற்றுதல் என்பதே மஸ்ஜிதுகளை வளமாக்குவார்கள் என்ற கூற்றாகும்.

நிச்சயமாக, மஸ்ஜித் வெறும் ஒரு கட்டடம் மட்டுமல்ல. அது அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கான அடையாளச் சின்னம்!

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

“மஸ்ஜிதை நேசிப்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.” 

(அபு சஈத் (ரலி), தப்ரானீ)

இஸ்லாமிய அறிஞர் உஸ்தாத் முஸ்தஃபா அல்ஷிஃபாய்(ரஹ்) அவர்களின் கீழ்க்காணும் கருத்துக்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.மஸ்ஜிதுகளின் முக்கியத்துவம் குறித்த தெளிவான சித்திரங்களை அவர் வார்த்தைகளால் படம் பிடித்து கட்டுகிறார்.

" இஸ்லாத்தில் மஸ்ஜித்(பள்ளிவாசல்)களுக்கு வழங்கப்படக் கூடிய முக்கியத்துவம் இன்றியமையாதது.இஸ்லாம் கூறும் வணக்க வழிபாடுகள் அனைத்தும் ஆன்மாவைச் சுத்தப்படுத்துபவை.பண்பாடுகளை சீர்மைப்படுத்துபவை.பரஸ்பர ஒத்துழைப்பிற்கான அடிப்படைகளை பலப்படுத்துபவை.ஐவேளை ஜமாஅத் தொழுகைகள்,ஜும்ஆத் தொழுகை,இரண்டு பெருநாள் தொழுகைகள் போன்ற அனைத்து அமல்களும் முஸ்லீம்களின் ஒற்றுமை,ஐக்கியம்,ஒருமித்த இலக்குகள்,நன்மையிலும் தக்வாவிலும் அவர்களிடையே காணப்படும் பரஸ்பர ஒத்துழைப்பு போன்றவற்றை மிகத் தெளிவாய் எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.

இவ்வகையில் முஸ்லீம்களின் வாழ்வில் மஸ்ஜித்(பள்ளிவாயில்) மிகப்பெரும் ஆன்மீக,சமூகப்பணிகளை ஆற்றியிருக்கின்றது எனக் கூறுவதில் தவறில்லை.ஏனெனில் அதுவே முஸ்லீம்களை ஐக்கியப்படுத்துகின்ற,ஆன்மாக்களை நெறிப்படுத்துகின்ற தளமாக விளங்குகிறது.உள்ளங்களையும்,அறிவையும் எழுச்சி பெற வைக்கிறது.பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற தளமாக விளங்குகிறது.அங்குதான் முஸ்லீம்களின் பலமும் ஒற்றுமையும் புடம் போட்டுக் காட்டப்படுகிறது.

அல்லாஹ்வின் வழிகாட்டலை பூமியில் பரப்பவென சென்ற இஸ்லாமியப்படைகள் பள்ளிவாயில்களில் இருந்துதான் புறப்பட்டுச் சென்றன.முஸ்லீம்களுக்கும்,முஸ்லீம் அல்லாதோருக்குமான நேர்வழியின் ஒளிக்கீற்றுகள் அங்கிருந்துதான் பிரகாசித்தன.

ஆனால் இன்று மஸ்ஜித்கள் அதன் உரிய பணியை நிறைவேற்றத் தவறி வருவதைக் காண்கிறோம்.சத்தியத்தில் உறுதியாக இருக்கும்,இஸ்லாமிய ஷரீஆவைக் கற்றறிந்த,அல்லாஹ்விற்காகவும்,அவனது தூதருக்காகவும் தூய்மையுடன் செயற்படக்கூடிய,முஸ்லீம்களுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் உபதேசிக்கக் கூடிய அறிஞர்கள் மிம்பர்களில்(பள்ளிவாசல் மேடைகள்) ஏறுகின்ற நாளில்தான் எங்களுடைய சமூக நிறுவனங்களின் முதல் அந்தஸ்த்தை மஸ்ஜித் மீட்டெடுத்துக் கொள்ளும்.மேலும் மனிதர்களை பயிற்றுவிக்கின்ற,தலைவர்களை உருவாக்குகின்ற,குழப்பங்களை சீர்செய்கின்ற,தீமைக்கு எதிராகப் போராடுகின்ற,தக்வா(இறையச்சம்),அல்லாஹ்வின் திருப்தியின் அடிப்படையில் சமூகத்தைக் கட்டி எழுப்புகின்ற அதன் பணிகளை அது மீண்டும் ஆரம்பித்து வைக்கும்."

இந்தச் சூழ்நிலையில், நாம் நம் தேசத்தில் இஸ்லாமிய வெறுப்பை முன்னெடுப்பவர்களின் காரணமாக  இஸ்லாமிய அடையாளங்களை அழிக்க முனையும் காலத்தில் தற்போது வாழ்கிறோம்.முஸ்லீம்களின் இத்தகைய அடையாளங்களில் முதன்மையானது மஸ்ஜிதுகள்(பள்ளிவாசல்கள்).

அதேநேரம் இந்திய இஸ்லாமியர்களின் இருத்தல் சார்ந்த அடையாளமான, நம்மிடம் இருந்து அபகரிக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலை நினைவுகூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.ஆம், அதுதான் பாபரி மஸ்ஜித்.

பாபரி மஸ்ஜிதை நாம் மறந்துவிட்டால், அது என்றென்றும் மறக்கப்பட்டு விடும். நமது அடிப்படைக் கடமை பாபரியின் செய்தியை நம்முடைய அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கடத்தி, என்றென்றும் அதனை உயிரோடு வைத்திருப்பதுதான்!

பாபரி மஸ்ஜிதின் மறுபிறப்பின் செய்தியால் நமது  தலைமுறையின் வீர வரலாறு எழுதப்படவேண்டும்.

எனவே பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும் வரை நம்முடைய குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும்.மஸ்ஜிதின் புனரமைப்பு குறித்து நாம் சாதகமாக, நேர்நிலையாக (பாசிட்டிவாக) சிந்திக்கவேண்டும். அதுவே நமது வரலாற்றுப் பங்ளிப்பாகும்.

பலநூறு வருடங்களுக்குப் பிறகு, நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பு அசுத்தத்திலிருந்து கஅபாவைச் சுத்தம் செய்தார்கள்.

88 வருடங்களுக்குப் பிறகு, ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் பைத்துல் முகத்தஸை சிலுவைப் படையிடமிருந்து மீட்டெடுத்தார்.

எனவே இது ஒருபோதும்
நம்பிக்கையற்ற பணி அல்ல.நமது அடையாளங்களை பாதுகாப்போம்.மஸ்ஜிதுகளுக்கு உயிரோட்டம் தருவோம்.சமூகத்தை வளப்படுத்துவோம்.

" மேலும், மஸ்ஜித்கள் பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். எனவே, அங்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள் ”

(அல்குர்ஆன் : 72:18)

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.