மறுமலர்ச்சி...

மறுமலர்ச்சிக்கான வழி


மனித விடுதலைதான் மதங்களின் லட்சியம்.இஸ்லாம் இந்த லட்சியத்தை அடைந்ததற்கு காரணம் அதன் பொருள் அமைதி என்பதால்தான் என்று யாரும் நம்ப மாட்டார்கள்.சிலரை ஒன்று திரட்டி அந்த கூட்டமைப்பிற்கு அமைதி என்று பெயரிட்டால் சாந்தி உருவாகிவிடுமா? அவ்வாறெனில் சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றை மனிதர்கள் எளிதாக அடைந்து இருப்பார்கள்.

ஆன்மீக, சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் ஆதிக்கம் செலுத்திய சுரண்டல் சக்திகளோடு போராட்டம் நடத்தியே அமைதி என்ற பொருளை இஸ்லாம் நிதர்சனம் ஆக்கியது. சிலை வணக்கத்திற்கு எதிராக நபி ஸல்லல்லாஹு அவர்கள் நேரடியாக பிரசாரம் செய்தபோது அமைதியா அங்கு ஏற்பட்டது? பூர்வீக மதம், பரம்பரை சடங்குகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் போது யார் தாம் எதிர்க்க மாட்டார்கள்? எதிர்ப்பும், தர்க்கங்களும், தாக்குதல்களும் இயல்பாகவே ஏற்பட்டது.

வெளியேற்றுதல், தனிமைப்படுத்துதல், பரிகாசம், புறக்கணிப்பு, தடை, சித்திரவதை, கொலை முயற்சி, புலம்பெயர்வு, இந்தக் கொடுமைகள் எல்லாம் பல ஆண்டுகள் நீடித்தன. பின்னர் போர். அதுவும் ஒன்றல்ல பல போர்கள் நடைபெற்றன. இஸ்லாம் துவங்கிய இடத்தில் அமைதி ஏற்பட கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தேவைப்பட்டது. 

எதிர்ப்பின் குரல் அடக்கி ஒடுக்கப் பட்டவர்களின் எழுச்சிக்கான வழியை திறக்கும்.தனிநபர்களின் சொந்த வாழ்க்கையும் சமூக வாழ்வும் ஒருவகையான மோசடியாக மாறுவது இன்று மனித குலம் சந்திக்கும் மிகப்பெரும் தோல்வியாகும்.சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு உண்மைகள் வளைக்கப்படுகின்றன.இறை அடியார்களின் முக்கிய பண்புகளில் ஒன்று பொய் சாட்சியம் கூற மாட்டார்கள்.ஆனால் அந்தப் பண்பு மதத் தலைவர்களிடம் முற்றிலும் இல்லை என்று கூறினால் அது மிகை இல்லை.

நாட்டில் சாமியார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அவர்களுடைய மையங்களில் மர்மக் கொலைகளும் போதைப்பொருள் வியாபாரம் கருப்பு பண பரிவர்த்தனைகளும் சாதாரணமாகவே நடக்கிறது. அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், நீதிபதிகள், சட்டத்தை பாதுகாக்க கூடியவர்கள் போலி சாமியார்களின் பக்தர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் சூழல் மிகவும் பயங்கரமாக இருக்கிறது. கட்டுப்படுத்த யாரும் இல்லாமல் ஆட்டம் போடும் சாமியார்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதையும் செய்யலாம் என்ற நிலை தான் இன்று நிலவுகிறது.

நாட்டின் பொருளாதாரக் கொள்கை மனிதநேயம் என்ற கொள்கையிலிருந்து விலகிச் சென்றுவிட்டது.ஏழை,எளிய பாட்டாளி மக்களுக்கு இவை முன்னுரிமை அளிப்பதில்லை.பொருளாதாரத் துறையில் ஏகபோக மயம் அதிகரித்து வருகிறது.பெரும் பணக்காரர்களின் நாடாக நமது தேசம் மாறி வருகிறது.அவர்கள்தாம் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்துகிறார்கள்.சட்டத்தை கையில் எடுக்கின்றார்கள்.

பொது கஜானாவுக்கு வரவேண்டிய பணமெல்லாம் சலுகைகளின் பெயரால் செல்வந்தர்கள் கொண்டு செல்கிறார்கள்.பொதுச் சொத்துக்களை அபகரிக்காத மக்கள் பிரதிநிதிகள் உண்டா என்பது இன்று சந்தேகமே.கந்து வட்டிக்காரர்களும்,ஊழல்வாதிகளும்,மாஃபியாக்களும் நாட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.மறுமலர்ச்சியின் பணிக்கான மைதானமாக இவற்றையெல்லாம் யாரும் அடையாளம் காண்பதில்லை.

தர்மமும் கலாச்சாரமும் தீயசக்திகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.அவற்றின் பலன்களை பொது மக்களிடம் மட்டுமல்ல மத ஆன்மீகவாதிகளிடமும் காண முடிகிறது.சீர்கெட்ட கலாச்சாரத்தின் பரப்புரைகள் ஒளிவு மறைவாக அல்ல சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்விக் கூடங்களிலேயே நடக்கிறது.மறுமலர்ச்சி மற்றும் புரட்சியின் காலடிச் சுவடுகளை அங்கெல்லாம் பதிக்க வேண்டும்.ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்ட இந்தியாவில் அரசியல்வாதிகளால் மறுமலர்ச்சியை கொண்டு வரமுடியாது.

மறுமலர்ச்சியின் ஆணிவேர் சமூகத்தின் நலன் நாடுவதாகும்.போராட்டக்குணம் என்பது அதன் எரிசக்தியாகும்.தன்னோடு இருப்பவர்களிடம் கூட சகிப்புத்தன்மையைக் காட்ட சிரமப்படுகிறார்கள் மார்க்க அறிஞர்களும்,தலைவர்களும்.

மறுமலர்ச்சியின் பணியாளர்களுக்கு எங்கே சொல்கிறோம் என்ற தெளிவான பார்வையும் வழிகாட்டலும் கட்டாயம் தேவை.அல்லாஹ் வழங்கியுள்ள வழிகாட்டுதல் தெளிவானதும் பூரணமானது ஆகும்.ஆகையால் திரைமறைவில் மக்களை அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.தங்களுடைய வழியில் தடை ஏற்படுத்துபவர்கள் யார்? என்ற தெளிவான விழிப்புணர்வு அவசியம் தேவை.

பண்பாடுகளுக்கு மதிப்பு அளிக்க கூடிய ஒரு சூழல் நாட்டில் உருவாக வேண்டும்.சட்டம் ஆக்கப்பூர்வமாகவும் பாரபட்சமற்றும் செயல்பட வேண்டும்.அனைத்து குடிமக்களும் பாதுகாப்புடன் வாழ வேண்டும்.அரசு பாரபட்சம் அற்றதாக இருக்க வேண்டும்.

சாதி, மதம், நிறம்,இனம், மொழி, தேசியம்,வயது,செல்வம் ,உடல்ரீதியான குறைபாடுகள் ஆகியவற்றின் பெயரால் மக்கள் புறக்கணிக்கப்படும் சூழல் ஏற்படக்கூடாது.பாரபட்சம் மனித வளர்ச்சிக்குத் தடைக்கல்லாகும். ஒரு சமூகத்தின் மீது வறுமையையும் அறியாமையையும் திணிக்கக்கூடாது.நீதி யாருக்கும் மறுக்கப்படக் கூடாது.பிறர் தங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்தி விடக்கூடாது.இல்லையெனில் சமூகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இருக்காது.

நபி ஸல்லல்லாஹ் அவர்களின் இந்த வழி முறையை பின்பற்றும் போது, எதிர்கால விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை ஊகிக்க முடியும். பரிகாசம், மிரட்டல், தாக்குதல், சிறைவாசம், மரணம் இவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம். எனினும் நபி ஸல்லல்லாஹு அவர்கள் அதனை ஊக்குவித்தார்கள். நீதியை நோக்கிய ஒவ்வொரு காலடியும், போராட்டங்களும், தியாகங்களும் நிறைந்ததாக அமைய வேண்டும். எச்சரிக்கை உணர்வும் அர்ப்பணிப்பும் அதற்கு தேவைப்படும்.நீதி உணர்வு கொண்டவர்கள் அநீதியாளர்களை எதிர்த்தார்கள் என்பதற்கு வரலாறு நமக்கு சாட்சியாக உள்ளது. இறை தூதர்களையும் மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட சான்றோர்களையும் எதிர்ப்பதற்கு எக்காலத்திலும் ஆட்சியாளர்களும் பிரதானிகளுமே முன்னணியில் இருந்தார்கள்.

இப்ராஹீம் நபி(அலை) அவர்களை எதிர்த்த நம்ரூது, மூசா நபி(அலை) அவர்களை எதிர்த்த ஃபிர்அவ்ன் மற்றும் அவனது பிரதானிகள்,ஈஸா நபி (அலை) அவர்களை எதிர்த்த பிலாத்தஸ், முஹம்மது நபி (ஸல்) அவர்களை எதிர்த்த குறைஷிகள் ஆகியோரையும்,நாம் மறுமலர்ச்சியை குறித்து சிந்திக்கும்போது இந்த உண்மைகளை நமது நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் 

- மர்ஹும் A.சயீத் ஸாஹிப்
(இஸ்லாமிய மார்க்க அறிஞர், சமூகச் செயற்பாட்டாளர்.)

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.