பயமும் சமூகமும்.....!

பயம்

ஆபத்தை சந்திக்கும் போது உயிரினங்களிடம் ஏற்படும் மன ரீதியான நெருக்கடியே பயம். தனது ஆற்றல் மற்றும் கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ள நெருக்கடிகளோ, தடுக்க முடியாத எதிர் சக்திகளோ, இழப்பிற்கான வாய்ப்புகளோ பெரும்பாலும் பயத்திற்கான காரணங்களாக அமைகின்றன.வாழ்க்கை போராட்டத்திற்கிடையே எந்த ஒரு நபரும் பயத்தை நேருக்கு நேராக சந்திப்பார்.அதனை எதிர் கொள்வது அல்லது தப்பிப்பதே அவருக்கான வழியாக அமையும்.பாதுகாப்பான வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை தயாரித்துக்கொள்ள பயம் ஒரு தூண்டுதலாக அமையும்.

வரலாற்றுக் காலம் முதலே தனது ஆபத்துகளை முறியடிக்க தேவையான ஆற்றலை மனிதன் வெளிப்படுத்தி இருக்காவிட்டால் அவன் வாழ்க்கையே ஆபத்தில் சிக்கி இருக்கும் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன இந்த தத்துவம் உடல்ரீதியான வாழ்விற்கு மட்டுமானது அல்ல.

ஒரு மனிதனின் அடையாளம் கலாச்சாரம் நெருக்கடியை சந்திக்கும் போது அங்கே பயம் உருவாகும்.தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற பயம் வேறு  எல்லாவற்றையும் விட மனிதனிடம் ஆதிக்கம் செலுத்துகிறது.இதனால் பலகீனமானவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் மானம் காக்க பின்வாங்குவதை காணலாம். மாதங்களோ, வருடங்களோ,ஏன் வாழ்க்கை முழுவதும் சமூக தலையீடுகளிலிருந்து அவர்கள் தலைமறைவாகி விடுவார்கள். தங்கள் மீது ஆதிக்கம் செலுத்தி விடுவார்கள் என்ற பயம் பின் வாங்குவதற்கு மூல காரணம் என்றாலும் இறுதியில் பிறர் துணை இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள்.

எனது பங்கு என்ன என்பதை நிர்ணயிக்க நானே தீர்மானிக்க வேண்டும். தன்னம்பிக்கையை இழப்பவர்கள் பிறரின்கீழ் வாழ்வதற்கான வழிகளை தேடுவார்கள். பயம் காரணமாக தனது சொந்த வாழ்க்கையின் முன்னேற்றத்தின் வழியில் நுழைய முடியாமல் போவதால் திறமையின் அனைத்து வாசல்களும் மூடப்பட்டு விடுகின்றன. இது நல்லதல்ல என்பதோடு விபரீத விளைவுகளையும் ஏற்படுத்தும். உடல் ரீதியான, மனரீதியான ஆரோக்கியத்தை இத்தகைய குணம் அழித்துவிடும். ஆபத்தான வேளைகளில் இத்தகைய நபர்களிடமிருந்து எவ்வித  ஆற்றலும் வெளிப்படாது.

வாழ்க்கையில் எழுச்சியும் வீழ்ச்சியும் சாதாரணமானது. அமைதியை விரும்பும் மனிதன் கஷ்டங்களை சந்திக்கவும் தயாராக வேண்டும். இன்பத்துடன் துன்பமும் இருக்கிறது என்ற சிந்தனை ஒவ்வொரு மனிதனையும் உறுதிப்படுத்தும். சிந்தனையாளர்கள் சந்தோஷத்தில் மிகவும் மகிழ்ந்து விடமாட்டார்கள். நெருக்கடிகளை கண்டு நிராசை அடையமாட்டார்கள். அதன்மூலம் அவர்களின் உள்ளம் வாழ்க்கையை பூரணமாக உட்கொள்ள தயாராக இருக்கும். எவ்வளவு பெரிய ஆபத்து என்றாலும் மன தைரியம் அவர்களுக்கு துணையாக இருக்கும்.

அதைவிட பெரிய இடரை சந்திக்க அவர்கள் தயாராகி விடுவார்கள். எண்ணங்கள் நடைமுறைக்கு வரும் வேளையில் சஞ்சலம் இல்லாமல் அவர்கள் அனைவரும் எதிர்கொள்வார்கள். வாழ்க்கையின் யதார்த்தங்களை சந்தித்து தான் ஆக வேண்டும் என்ற தத்துவத்தை சிந்தனையாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.அவற்றை குறித்து அலட்சியமாக இருப்பதும் நழுவ முயற்சிப்பதும் பிரச்சினையை மேலும் மோசமடையச் செய்யும். இதனால் சமநிலை தவறும். சமூகத்தின் சூழல் மேலும் சீர்கெடும். ஆனால் ஆபத்தான சூழல்களை சந்திக்க மனரீதியாக தயார் ஆவது எதிர்ப்பு போராட்டத்திற்கான வழியை எழுப்புவதோடு இன்று அல்லது நாளை சமூகத்தின் எழுச்சியை சாத்தியமாக்கும். சிந்தனையாளர்களிடம் குடி
கொண்டிருக்கும் இந்த பண்பு ஒவ்வொரு நபரிடமும் ஏற்பட வேண்டும் என்பது இறைவனின் விருப்பமாகும்.

" நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள் உயிர்கள் விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமைமையுடையோருக்கு, (நபியே) நீர் கூறுவீராக, பொறுமை உடையோராகிய) அவர்களுக்கு துன்பம் ஏற்படும் போது, நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள்."
(அல்குர்ஆன் 2 : 155-156)

பயம் குற்றமல்ல. அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதே முக்கியம். பீதியான சூழலிலும் கொள்கையில் உறுதியாக நிலை குலையாமல் இருப்பவர்களுக்கே இறுதி வெற்றி கிடைக்கும் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். வறுமை குறித்த பயமோ, பொருளாதார இழப்போ, உயிர்வாழ்வதற்கு எதிரான மிரட்டலோ ஒரு மனிதனிடம் செல்வாக்கு செலுத்தி விடக்கூடாது என்ற இறைவனின் விருப்பம் மேற்கண்ட வசனத்தில் தெளிவு படுத்தப்படுகிறது. நம்பிக்கைகள் கவலைகளுக்கு மத்தியில் தான் மனிதனின் வாழ்க்கை அமைந்துள்ளது.

பண்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் போதே மனித வாழ்க்கை என்பது அர்த்தமுள்ளதாக மாறும். பயமின்மை என்பது துணிச்சல் அல்ல. பயத்திற்கு அப்பாலும் மிக முக்கியமான வாழ்க்கை விழுமியங்கள் உண்டு என்ற உணர்வே துணிச்சலாகவும். அந்த உணர்வுதான் வாழ்க்கை குறித்த லட்சியத்தை ஏற்படுத்தும். மனத்திண்மை உள்ளவருக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். அல்லாஹ்வை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலத்தை தரும். பலத்தை பின்புலமாகக் கொண்ட ஆதிக்க சக்திகள் பல துறைகளிலும் காணப்பட்டாலும் அவை ஒவ்வொன்றும் இறுதியானது அல்ல என்ற ஆறுதலை இஸ்லாம் மனிதனுக்குத் தருகிறது.

கொடுங்கோன்மை அரசுகளும் சர்வாதிகாரிகளும் எல்லாம் ஊதி பெருக்கிய உருவங்கள் மட்டுமே. அடிப்படையான எவ்வித சக்தியும், அதிகாரமும் அவர்களுக்கு கிடையாது. உணவளிப்பவன் அல்லாஹ். தண்ணீர் தருபவன் அல்லாஹ். விதையை முளைப்பிப்பவன் அல்லாஹ். காற்றை அளிப்பவன் அல்லாஹ்.  இரவையும் பகலையும் படைத்தவன் அல்லாஹ். வானமும் பூமியும் பிரபஞ்சம் முழுவதும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. ஐம்புலன்களை இயக்குபவன் அல்லாஹ். வாழ்வும் மரணமும்  அவனது கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

அல்லாஹ்வைப் பற்றிப் பிடித்தவர்கள் உலகில் எந்த சக்திக்கும் பயப்படத் தேவையில்லை. செல்வாக்கிற்கு அவர்கள் அடிபணிய மாட்டார்கள். பயம், வாழ்க்கை, சுகங்கள் ஏன் உயிரையும் விட அவர்கள் வாழ்க்கை இலட்சியத்தையே உயர்வாக கருதுவார்கள். எல்லோரும் ஆமாம் என்று கூறினாலும் இல்லை என்று கூறும் இடத்தில் அவ்வாறு அவர்கள் கூற தயங்க மாட்டார்கள்.

தவறான வழியில் சம்பாதித்து செல்வ செழிப்பாக வாழ்பவர்கள் மத்தியில் நேர்மையாக களங்கமில்லாமல் எளியவராக வாழும் துணிச்சலும் அவர்களுக்கு உண்டு. சிலர் பண்பாடுகளை மறந்து மக்களிடையே புகழை விரும்பி நடமாடும் வேளையில் மௌனமாக தங்களுடைய கடமையை ஒழுக்க சீலர்கள் நிறைவேற்றுவார்கள். தோல்விகள் மற்றும் பரிகாசங்களுக்கு இடையே தனிமைப்படுத்தப்படும், அங்கீகரிக்கப்படாமலும் அவர்கள் வாழ்வார்கள். ஆகையால்தான் நபியவர்கள் இவ்வாறு கூறியிருப்பார்களோ?

" இஸ்லாம் அந்நியமான ஒன்றாகவே ஆரம்பித்தது. அது மீண்டும் அந்நியமானதாகவே மாறிவிடும். ஆகவே அந்த அந்நியர்களுக்கு சுப சோபனம் உண்டாகட்டும்."
(நூல் :  முஸ்லிம்,இப்னுமாஜா)

உலகில் அதிகமாக பயத்திற்கு அடிபணிந்து வாழும் சமூகம் ஒருவேளை முஸ்லிம்களாக இருக்கலாம் இந்தியாவிலும் இது தான் நிலைமை. மார்க்கத்தின் அந்தஸ்தை இழக்காமல் வாழ்பவர்கள் வித்தியாசமாக தெரியலாம். யதார்த்தங்களில் இருந்து நழுவி சூனியத்தில் வாழும் சில ஆன்மீகவாதிகளின் தற்காலிக மாயத்தோற்றமல்ல இங்கே உத்தேசிப்பது. வாழ்க்கை எதார்த்தங்களுடன் போராடி வாழ்பவர்களின் அச்சமின்மையே இவ்வுலகில் ஒளியை வழங்கும். அது எங்கும் குறைவாகவே உள்ளது.

-மர்ஹூம்.A.சயீத் சாஹிப்(மார்க்க அறிஞர் இஸ்லாமிய செயல்பாட்டாளர்) அவர்கள் எழுதிய. 'மதமும் ஜனநாயகமும்' என்ற நூலின் பயம் என்ற அத்தியாயத்தின் சில பகுதிகளே இந்த கட்டுரை.

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.