பூமி என்னும் உயிர் கிரகம்

பூமி - Earth

தற்போது உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விசயம் பருவநிலை மாற்றமும், சுற்றுச் சூழல் சீர்கேட்டைக் குறித்தும்தான்.இந்த மாற்றங்களால் பூமி மிக வேகமாக தன்னுடைய இயல்பான தன்மைகளை இழந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் இதை எப்படி எதிர்கொள்வது என உலகம் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் சுற்றுச் சூழல் குறித்து இஸ்லாமும் அதன் சட்டங்களும் என்ன சொல்கிறது என சுருக்கமாக பார்ப்போம்.

பூமி குறித்து இஸ்லாம்!

வான வெளி பிரபஞ்சத்தில் ஏராளமான சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.அப்படிப்பட்ட ஒரு சூரியக் குடும்பத்தின் மூன்றாவது  கோளான பூமியைத்தான் தன்னுடைய படைப்புகளாகிய மனிதர்களை வசிக்க இறைவன் தேர்ந்தெடுத்தான்.பூமியைப் படைத்த, தன்னுடைய வல்லமையை இறைவன் இப்படிக் கூறுகிறான்..

‘‘அல்லாஹ்தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியில் இருந்தும் அவற்றைப் போலவும் படைத்தான். அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளை இறங்கிக் கொண்டே இருக்கிறது’’ 
(அல்குர்ஆன்–65:12).

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
(அல்குர்ஆன் : 2:117)

பூமியில் படைக்கப்பட்ட அனைத்தும் இறைவனுடையதே!

" வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்."
(அல்குர்ஆன் : 5:120)

மனிதர்கள் வசிக்க பூமி மட்டுமே அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளதாக இறைவன் கீழ்வருமாறு கூறுகிறான்: 

“அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான். ஆகவே, அதன் பல மருங்குகளிலும் நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள். இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழ வேண்டியிருக்கிறது” 
(அல்குர்ஆன்: 67:15)

" அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான். மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான். அவன்தான் அல்லாஹ். உங்களுடைய இறைவன். அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்."
(அல்குர்ஆன் : 40:64)

இப்படி உருவாக்கப்பட்ட பூமி என்பதில்தான் மனிதர்களுக்குத் தேவையான அனைத்து வளங்களும், வசதிகளும், வாய்ப்புகளும் இருக்கின்றன.இஸ்லாத்தைப் பொறுத்தவரை இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் உரிமையாளன் அந்த அல்லாஹ் மட்டுமே.மனிதர்களாகிய நாம் எல்லோரும் இங்கு சில காலம் தங்கி செல்பவர்கள் மட்டுமே.இந்தச் சூழ்நிலையில் இந்த பூமியில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுக்கும்,பேரழிவுகளுக்கும் மனிதர்களே காரணமாக அமைகிறார்கள்.

மனிதன் என்பவன் இந்த பூமியில் அனைத்தையும் சார்ந்து வாழ்பவனாகவே இங்கே படைக்கப்பட்டிருக்கிறான்.தன்னுடைய தேவைகளுக்காக இயற்கை வளங்களையும்,பிற உயிரினங்களின் துணையையும் கொண்டே வாழ்கிறான்.ஆனால் அவன் தற்போது அப்படி வாழ்கிறானா என்று பார்த்தால், மிக மோசமான பேராசைக்காரானாகவும், தன்னுடைய சுயநலத்திற்காக இந்த பூமியின் வளங்களை சூறையாடுபவனாகவும் மாறிப் போயிருக்கிறான்.அவனுடைய அதிகப்படியான பேராசைகளால் இயற்கை வளங்களும்,சக உயிரினங்களின் வாழ்விடங்களும், உயிர்கள் வாழ்வதற்குண்டான கால நிலை மாற்றங்களும் மாறிக் கொண்டே வருகின்றன.


தொடரும்.....

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.