மனித உயிரின் மதிப்பும், வாழ்வதற்கான உரிமையும்-4

வாழ்வுரிமை!


அநியாயமாக கொல்லப்படுவதையும் தற்கொலை செய்வதையும் கூடாது என்று தடுத்த இஸ்லாம், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்காக அவசியம் ஏற்படும் போது தம்முடைய உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்கவேண்டும் என்று படிப்பிக்கிறது. இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் எதிரிகள் களத்தில் இறங்கினால், முஸ்லிம்கள் புறமுதுகு காட்டாமல் கோட்டைச்சுவர் போல் உறுதியாக நின்று அவர்களை எதிர்க்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டால் அவனுக்கு ஷஹீதுடைய  அந்தஸ்து கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்.ஷஹீதுகளுக்கு நிச்சயமாக சுவர்க்கம் கிட்டும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் சுவனத்தில் பறவைகளாக ஆனந்தமாக பறந்து திரிவர் என்று ஹதீஸில் காணலாம்.

" அல்லாஹவின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று எண்ணாதீர்கள். மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர். உணவளிக்கப்படுகின்றனர் " என்ற வசனம் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிம் கேட்டோம். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள், 

"அவர்களின்(ஷஹீதுகள்) உயிர்கள் பச்சை நிறத்துப் பறவையின் கூடுகளுக்குள் இருக்கும். அவற்றுக்கென அர்ஷில் தொங்கவிடப்பட்ட அலங்கார விளக்குகள் இருக்கும். அவை சுவர்க்கத்தில் விரும்பியவாறெல்லாம் சுற்றி வரும் பின்னர் அந்த விளக்குகளில் ஒதுங்கி விடும். அப்போது இறைவன் அவர்களுக்கு காட்சி தந்து, ‘நீங்கள் எதையேனும் விரும்புகிறீர்களா?’ என்று கேட்பான். ‘நாங்கள் விரும்பியவாறு சுவனத்தில் சுற்றி வரும் போது நாங்கள் எதை விரும்பப் போகிறோம்’ என்று அவர்கள் பதில் கூறுவர். இவ்வாறு மூன்று தடவை இறைவன் அவர்களிடம் கேட்பான். தாங்கள் எதையேனும் கேட்காமல் இறைவன் விட மாட்டான் என்று அவர்கள் அறிந்து கொண்டு, ‘எங்கள் இறைவா! எங்களது உயிர்களை எங்கள் உடல் கூட்டுக்குள் நீ திரும்பத்தர வேண்டும். இன்னொரு முறை உன் பாதையில் நாங்கள் கொல்லப்பட வேண்டும்’ என்று கூறுவார்கள். அவர்களுக்கு தேவை எதுவும் இல்லை என்று இறைவன் அறிந்து அவர்களை விட்டு விடுவான் என்று விளக்கம் அளித்தார்கள்." 

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல்: முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸில்,

" சொர்க்கத்தில் நுழைந்த பிறகு யாரும் பூமிக்கு திரும்ப வருவதை விரும்பமாட்டார்கள். ஷஹீதுகளை  தவிர. அவர்கள் பூமிக்கு திரும்ப வந்து அல்லாஹ்வின் பாதையில் பத்து முறை கொல்லப்பட வேண்டும் என்று விரும்புவர்கள்.இது சுவனத்தில் அவர்களுக்கு கிடைக்கும் மகத்தான நற்கூலியின் காரணத்தினால் ஆகும்."

-(புகாரி, முஸ்லிம்)

இன்னும் நிறைய குர்ஆன் வசனங்களும்,ஹதீஸ்களும் இது சம்பந்தமாக நமக்கு காணக் கிடைக்கிறது.அவற்றில் சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளோம்.வாழ்வுரிமை என்பது இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமானதொரு பகுதி.இதற்காக தங்களின் உயிரையும் அர்ப்பணித்த எண்ணற்றோர் இஸ்லாமிய வரலாற்றில் இருக்கிறார்கள்.

மனிதனின் வாழ்வுரிமையை நிலைநாட்டுவதற்கு மிகவும் நல்ல முறையில், நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை இஸ்லாம் காட்டுகிறது என நாம் பார்த்தோம். இஸ்லாமிய சட்டங்கள் பூரணமாக இல்லாவிட்டாலும் சிறிதளவேனும் மக்களாட்சி நடைபெறும் நாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அறிக்கையின் நியமங்களை அங்கீகரிக்கும் நாடுகளைவிட அரபு நாடுகளில் கொலைக் குற்றங்கள் குறைவாகும். மனிதனின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கக் கூடிய சட்டங்கள் இஸ்லாத்தில் மட்டுமே உண்டு என்பதையே இது காட்டுகிறது.

-அஸ்ரஃப் கல்பெட்டா.

வாழ்வுரிமைக்கான களத்தில் எப்பொழுதுமே இஸ்லாமிய சமூகம் தன்னெழுச்சியோடு முன்வந்து நிற்கும்.குர்ஆனும்,இறைத்தூதரின் வழிகாட்டல்களும் அவர்களுக்கு முன் எப்பொழுதும் திறந்த புத்தகமாகவே இருப்பதால் மற்ற எல்லோரையும் விட அவர்கள் முன்னுதாரணத்துடன் செயல்படுகிறார்கள்.அது அரபு வசந்தமாக இருந்தாலும் சரி.நம் தேசத்தின் புதிய குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களாக இருந்தாலும் சரி.

சகோதரர்களே!! இன்றோடு கடந்த நான்கு பதிவுகளாக நீங்கள் வாசித்த வாழ்வுரிமை பற்றிய  ஒரு இஸ்லாமிய பார்வையான இந்த கட்டுரைகள் எல்லாமே, அஸ்ரஃப் கல்பெட்டா அவர்கள் மலையாளத்தில் எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  " இஸ்லாத்தில் தனிமனித சமூக உரிமைகள் " என்ற புத்தகத்திலிருக்கும் ஒரு  அத்தியாயத்தினுடைய பகுதிகள் தான்.இந்த தொடர் இத்துடன் நிறைவடைகிறது.இன்ஷா அல்லாஹ், வாய்ப்பு கிடைக்கும்போது புத்தகத்தின் மீது அத்தியாயங்களையும் நான் தொடராக எழுதுகிறேன்.

இன்ஷா அல்லாஹ்......

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.