புவி வெப்பமயமாதலும், பருவநிலை மாற்றங்களும்..

புவிவெப்பமயமாதல்(Global Warming)
பல வருடங்களாகவே உலகில் காலநிலை மாற்றம் என்பது மிகவும் மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது. ஓசோன் படலம் பாதிப்பு, காற்று மாசு, நீர் பற்றாக்குறை, பருவமழையின்மை, புவியின் வெப்பநிலை மாற்றம் என பல நிகழ்வுகள் நம்மை பெரிய அளவில் அச்சுறுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

புவி வெப்பமயமாதலால் பெருவெள்ளம், சூறாவளி, வறட்சி, நோய்கள், கடல்வள அழிவு, பனிப்பாறை உருகுதல், கால நிலை மாற்றம் ஆகியவை ஏற்படுகின்றன.
உலகின் வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் என்பதிலிருந்து, ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டது. இதை 16 டிகிரி ஆகிவிடாமல் தடுக்கும் முயற்சியில் உலக நாடுகள் இருக்கின்றன, 15.5 டிகிரிக்குள் புவிவெப்பத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.இதிலும் அமெரிக்கா,ஐரோப்பி வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளான பிரேசில், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை வஞ்சிக்கின்றன.

பூமி மேற்பரப்பில் சராசரி வெப்பநிலை அதிகரித்திருப்பதால் துருவப் பனிப்பாறைகளும் விரைந்து உருகி வருகின்றன. அத்துடன் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் சூறாவளிகளும், புயல்களும் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உருவாக்கப்படுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
வெப்பமடைவதால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டு இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் குறைப்பு மையம் எச்சரித்துள்ளது. வறட்சியைச் சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பல நாடுகள் இப்போதிருந்தே எடுக்க வேண்டியது கட்டாயமாகும். இல்லையெனில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும். வறட்சி மற்றும் நீராதாரத்தை திறம்பட நிர்வகிக்காதது உள்ளிட்ட பிரச்னைகள் உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் முக்கியக் காரணிகளாகும். இதிலும் குறிப்பாக வறட்சியை சமாளிக்க நீண்ட கால அடிப்படையிலான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்க வேண்டும்.இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

பருவநிலை மாற்றங்களால், பூமியின் இயற்கை படைப்புகளில் பெரும்பாதிப்புகள் ஏற்படுகின்றன. பூமியின் தட்பவெப்ப வேறுபாடு, மழைபொழியும் காலநிலையில் மாற்றம், கடலின் நீர்மட்டம் உயர்வு, பனிமலை உருகும் அபாயம், சுனாமி, ஆழி பேரலைகள், ஒருபகுதியில் வறட்சி, இன்னொரு பகுதியில் வெள்ளம், விவசாயத்தில் வீழ்ச்சி, நோய்கள் பரவும் ஆபத்து, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் காடுகள் அழிந்துபோகும் சூழல், மொத்தத்தில் இயற்கையின் சமன்பாடு அடியோடு சீரழிதல் போன்ற விளைவுகள் பருவநிலை மாற்றங்களால் உருவாகின்றது. புவிவெப்பமயமாதலும் அதன்விளைவாக பருவநிலை மாற்றமும்தான்,  இன்று மனித சமூகத்தின் முன் உள்ள மாபெரும் சவால் ஆகும்.

புவி வெப்பமயமாதலின் விளைவுகளை கடந்த சில ஆண்டுகளாக நம் தேசமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.உத்திரகாண்ட் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளப் பேரிடர் நம் கண்முன் நிகழ்ந்த மிகப்பெரிய பேரிடர்.அதுபோலவே சமீபகாலங்களாக ஒடிசா,ஆந்திரா,தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடற்பகுதிகளில் அதிக அளவில்  புயல்களும்,சூறாவளிகளும் தோன்றி கோரத்தாண்டவமாடி பாரிய அளவிலான சேதாரங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.

       உத்தரகாண்ட் பேரிடர்
         ஒடிசா புயல் பாதிப்பு

எந்த இயற்கை பேரிடர்களையும் பெரிய அளவில் சந்திக்காமல் இந்திய துணை கண்டத்தில் அமைதியாக இருந்து வந்த கேரளம் கடந்த சில ஆண்டுகளாக  இயற்கை பேரழிவில் சிக்கி சீரழிந்து  வருகிறது.இந்த வருடம் கூட கேரளத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அரபிக் கடலின் வெப்ப நிலை  அதிகரித்து வருவதை வானிலை ஆராய்ச்சியாளர்கள் கவலையுடன் தெரிவித்து வந்தனர். முன்பெல்லாம் இந்தியாவை பொறுத்தவரை,  வங்களா விரிகுடாவின் வெப்பம் தான் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. அதனாலே வங்காள விரிகுடா பகுதியை ஒட்டிய மாநிலங்களில் பெருமழை, புயல், அதிகமாக ஏற்பட்டு வருகிறது. ஒரு புள்ளி விபரப்படி, அரபிக் கடலை விட நான்கு மடங்கு புயல்களை தந்திருக்கிறது வங்காள விரிகுடா.

      கேரளா பாதிப்புகள்

காரணங்கள்.

உலகம் முழுவதும் அதிக அளவில் இயற்கை வளங்களை அழிப்பது என்பது புவி வெப்பமயமாதலுக்கு முதன்மை காரணமாகின்றது.காடுகளை அழித்து மேற்கொள்ளும் நகரமயமாக்கலும், மனிதர்களின் அதிகப்படியான முதலாளித்துவ அடிப்படையிலான நுகர்வுக் கலாச்சாரங்களும்,கார்ப்பரேட் ஏகாதிபத்திய பெருமுதலாளிகளின் பேராசைகளும், அவர்களுக்கு ஏற்றார்போல் சட்டங்களை வளைக்கும் நாசகார அரசுகளும் சமகாலத்தில் பூமிப்பந்தையும்,அதன் இயற்கை வளங்களையும் அழிப்பதில் முன்னணியில் இருக்கின்றனர்.

பூமி வெப்பம் அடைவதற்கு சூரியன் மட்டும் காரணம் அல்ல.உலகம் முழுக்க உள்ள வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பெரிய மால்கள் எனப்படும் பெரு அங்காடிகள்,திரையரங்குகள், வீடுகளில் நாம் உபயோகப்படுத்தும் குளிர்சாதனக் கருவிகள் போன்றவைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரா புளோரா கார்பன் போன்ற வெப்ப வாயுக்கள் அதிக அளவு இயற்கைக்கு மாறாக உற்பத்தியாகி வளிமண்டலத்திற்கு சென்று கொண்டே இருப்பதால் பூமி சூடாகிறது.


மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக், பாலிதின் பொருட்களுக்கு அழிவே இல்லை. அவை மக்குவதும் இல்லை; எரித்தால் அதன் மூலக்கூறுகள் சிதைவதும் இல்லை. ஏனெனில், அவை கார்பன் மூலக் கூறுகளால் ஆன பொருட்கள். பிளாஸ்டிக், பாலிதின் பொருட்கள் எரிக்கப்படும் போது அதனால் உருவாக்கப் படும் கார்பன் டை ஆக்சைட்தான் வளிமண்டலத்திற்கு சென்று ஓசோன் என்னும் வெப்ப பாதுகாப்பு அடுக்கை உடைப்பதில் முன்னிலையில் இருக்கிறது.

எதிர்வரக் கூடிய தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லப் போகும் பேரபாயமே புவி வெப்பமைடைதலால் ஏற்படும் சூற்றுச் சூழல் பிரச்சினைகள்தான்.இதை அரசுகளும் மக்களும் ஒன்றிணைந்து சரி செய்யவில்லை எனில் இயற்கை தன்னை சமன்படுத்த ஆரம்பிக்கும்.அப்படி ஆரம்பிக்கும் போது மனித சமூகம் எப்படி அதை எதிர்கொள்ளும் என்பதுதான் நம்முன் இருக்கும் முக்கியமான கேள்வி.ஏனென்றால் தற்போது உலகின் ஏதோ ஒரு மூலையில் அங்கும் இங்குமாக ஏற்படும் இயற்கை பேரிடர்களையே விஞ்ஞானத்தின் உச்சத்தில் இருக்கும் மனிதனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.ஒட்டு மொத்தமான பேரழிவு ஏற்படும் எப்படி இருக்கும் என நினைக்கும் போதே அச்சம் அதிகமாகிறது.

    

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.