பூமி என்னும் உயிர்க் கிரகம்-2

சுற்றுச் சூழல்!

சூழல் என்பது – எளிமையாகச் சொன்னால் – மனிதன் வாழ்வதற்குரிய இடத்தைக் குறிக்கிறது. அது காடுகள்,  மலைகள்,  மரம் செடி கொடிகள்,  காற்று,  நீர்,  வானம்,  பறவைகள்,  மிருகங்கள் போன்ற இயற்கைச் சூழலையும் உள்ளடக்கியிருக்கிறது. மனிதனால் உருவாக்கப்படும் கட்டடங்கள்,  வீதிகள்,  தோட்டங்கள்,  நீர்நிலைகள் போன்றனவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. அதுபோல் உயிருள்ளவற்றையும் உயிரற்றவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது.

மனிதனின் பேராசைகளினால் இந்த பூமி என்பது தன்னுடைய இயல்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது.இதில் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு என்பதில் மனிதன் வகிக்கும் பாத்திரம் பிரதானமானது.

இஸ்லாம் சுற்றுச்சூழலை மனிதனது எதிரியாக நோக்கவில்லை. அது மனித வாழ்வின் உயிர் நாடிகளான நீர், காற்று உட்பட கோடிக்கணக்கான மரங்கள், செடிகள், கொடிகள், மலைத்தொடர்கள், மேட்டு நிலங்கள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், பசுமையான புல் நிலங்கள், கண்கவர் நீர் வீழ்ச்சிகள், வண்ண வண்ண பூச்சி இனங்கள், பறவையினங்கள், விலங்கினங்கைகள் அனைத்தையும் ஒரே குடும்பமாகவே அணுகுகின்றது. அல்லாஹ்வின் குடும்பமாக சித்தரிக்கிறது. இக் கருத்தை பின்வரும் ஹதீஸ் மூலமாக தூதர்(ஸல்) கீழ்வருமாறு சொல்கிறார்கள்.

" படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பம். அவனது குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவனே அவனது படைப்பில் அவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவன்."
(புஹாரி). 
இயற்கையின் மீதான கருணையும், கரிசனையும் இறை நெருக்கத்தையும் அன்பையும் பெற்றுத்தரும் காரியங்களாக இஸ்லாம் முன்வைக்கிறது.

தான் வசிக்கும் இருப்பிடங்களையும்,பகுதிகளையும் தூய்மையாக வைக்க வேண்டும் என்பதில் இஸ்லாம் அக்கறை கொள்கிறது." தூய்மை இறைநம்பிக்கை(ஈமான்)யின் ஒரு பகுதி " என்ற நபிமொழி மிகப் பிரசித்தமானது.

சுத்தம் செய்வதையும், சுத்தமாக இருப்பதையும், சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைத்திருப்பதையும் இஸ்லாம் இறை நம்பிக்கையின் உடல் சார்ந்த ஒரு பகுதியாகவே பார்க்கிறது. இறைநம்பிக்கைக்கு அடுத்து இஸ்லாத்தில் முக்கியமானது சுத்தம்தான். இதையே இந்த நபிமொழியும் வலியுறுத்துகிறது:

" சுத்தம் இறைநம்பிக்கையில் பாதியாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்."
(நூல்: முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் " சபிக்கப்படும் இரு விஷயங்களை தவிர்த்து கொள்ளுங்கள்(அந்த இரு செயல்களையும்) செய்பவர்கள் மக்களால் சபிக்கப்படுவார்கள்). அவர்கள் யாரென்றால் மக்களின் நடைபாதையில் மலம், ஜலம் கழித்து அசுத்தம் செய்பவன். மக்கள் நிழல் தேடும் மரங்களில் அசுத்தம் கழிப்பவன் என்று கூறினார்கள்." 
(நூல்: முஸ்லீம்)

இந்த நபிமொழி பொது இடங்களை அசுத்தம் செய்பவர்கள் சபிக்கப்பட தகுந்தவர்கள் என்று சொல்வதுடன் அப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறது.

சுத்தம்,தூய்மை குறித்து ஏராளமான நிபந்தனைகளை விதித்திருக்கிறது இஸ்லாம்.மக்கள் நடமாடும் பாதையில் எச்சில் துப்புவதை நபிகளார் அவர்கள் கண்டித்திருக்கிறார்கள்.இந்த பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு படைப்பிற்கும்,பொருளுக்கும் ஒரு ஹக்(சத்தியம்) இருக்கிறது.அது தான் எதற்காக படைக்கப்பட்டோமோ அதன் நோக்கத்தை அடையும் பொழுதே அதன் ஹக் நிறைவேற்றப்படுகிறது.

ஆனால், தான் இருக்கும் சுற்றுப்புறங்களை மாசுபடுத்துவதில் மனிதன் எல்லை மீறிச் சென்றுவிட்டான்.விஞ்ஞானத்தின் உதவியால் கண்டு பிடிக்கப்பட்ட நெகிழி(பிளாஸ்டிக்) பொருட்கள் பயன்பாடு இந்த பூமியின் சுற்றுப் புறச் சூழலை மாசுபடுத்துவதில் முக்கிய இடம் பெறுகிறது.இன்று பிளாஸ்டிக் பொருட்கள் இடம் பெறாத தயாரிப்புகளே இல்லை என்று சொல்லுமளவுக்கு எங்கும் வியாபித்திருக்கிறது.எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்காத ஒரு பொருள் பிளாஸ்டிக்.நெகிழியில் இருந்து தயாரிக்கப்படும் குடிநீர் புட்டிகளும்,கைப் பைகளும் நில, நீர் மாசுபாட்டிற்கு பெரிய அளவில் காரணமாகின்றன.

அடுத்ததாக, விஞ்ஞான தொழில்நுட்பத்தின் காரணமாக கண்டுபிடிக்கப்பட்ட தற்போதைய மனிதனின் அத்தியாவசியமாக மாறிப்போன கணினி,கைப்பேசி உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களின் கழிவுகளும்,அவற்றைக் கையாளும் முறைகளாலும் மிகப்பெரும் சுற்றுப்புறச் சீர்கேடு உருவாகிறது.அதேபோல் பெருநகரங்கள் எனப்படும் அதிகளவில் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள மாபெரும் குப்பை கிடங்குகள், அவற்றை எரிக்கும் போது வரும் புகை மண்டலங்கள் என இவைகள் மாசுபாட்டிற்கு காரணமாக அமைகின்றன.வாகனப் பெருக்கங்களும், அவை வெளியிடும் புகைகளும் மற்றொரு பிரதானக் காரணம்.

சுத்தம் பேணுவதில் இருந்து எச்சில் துப்புவது வரை ஒரு ஒழுங்கு முறையை போதிக்கும் இஸ்லாம் இந்த பூமியின் அடிப்படை அலகுகளான நிலம், நீர், காற்று மாசுபடச் செய்வதை ஒரு குற்றமாகவே பார்க்கிறது.

சூழல் பாதுகாப்பு,  இஸ்லாமிய மார்க்கத்தின் இலக்குகளில் ஒன்று. மேலே குறிப்பிடப்பட்டது போல்,  அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் இவ்விடயம் மிகுந்து வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் இஸ்லாம் மனிதவாழ்வை சூழலுடன் இணைத்துத்தான் நோக்கியிருக்கிறது. சூழலைத் தவிர்த்து மனித வாழ்வு தனித்துப் பயணிக்க முடியாது. உலகில் மனிதவாழ்வு நிலைத்திருக்க வேண்டும் எனின் சூழலும் நிலைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது. அந்தவகையில் மனிதவாழ்வின் இருப்புக்காக உலகில் பாதுகாக்கப்பட வேண்டிய அம்சங்களை இஸ்லாம் அதன் இயல்பான ஓட்டத்திலேயே பேசிச் சென்றிருக்கிறது. சூழல் பாதுகாப்பும் அதில் ஒன்று.

தொடரும்......

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.