UAPA என்னும் அடக்குமுறைச் சட்டம்...

UAPA(Unlawful Activities Prevention Act)
சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்
நமது இந்திய நாட்டில் ஜனநாயகத்திற்கு உட்பட்டு பல்வேறு அரசியல் சட்டங்கள் இருந்தாலும் ஒரு சில அரசியல் சட்டங்கள், சட்டப்பிரிவுகள் அதிகம் விவாதிக்கப்படுவதாக இருக்கிறது. அப்படியொரு சட்டம் தான் UAPA(Unlawful Activities Prevention Act) ஊபா என்றழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம். இந்திய அரசியலமைப்புச் சட்டபிரிவு 19 சுதந்திர உரிமைக்கான உத்திரவாதம் அதன் குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது. 

அதன்படி, 
* பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம். 
* ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம்.
* கழகங்கள் /சங்கங்கள் அமைக்க சுதந்திரம். 
* இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம். 
* இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம். 
* தொழில், பணி மற்றும் வணிகங்கள் செய்யும் சுதந்திரம். ஆகியனவற்றை வழங்கியுள்ளது. இந்த 6 வகையான சுதந்திரங்களும் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

இருப்பினும், இந்திய இறையான்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்க அரசியல் சாசனம் அளித்துள்ள இந்த சுதந்திரங்களை மேலும் ஒரு வரையறைக்குள் கொண்டு வர அரசு முடிவு செய்தது.அன்றைய இந்திய தேசச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு 1967ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் என்னும் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. UAPA (Unlawful Activities Prevention Act) உபா என்றழைக்கப்படும் இந்தச் சட்டம், எது சட்டவிரோதம், எது தீவிரவாதம் என்பதை சரிவர விளக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இச்சட்டம் இயற்றப்பட்ட காலம்தொட்டு இன்றுவரை நீடித்து வருகிறது.

திருத்தங்கள்

 2004, 2008 மற்றும் 2012 என மூன்று முறை உபா சட்டத்தில் அந்தந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த மத்திய அரசுகள் இச்சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டன.இந்தக் கொடூர சட்டத்தில், முன்பு நாட்டில் இருந்த தற்போது செயல்பாட்டில் இல்லாமல் இருக்கும் பிற அடக்குமுறைச் சட்டங்களான தடா(TADA), பொடா(POTA) போன்ற சட்டங்களை உள்ளடக்கியதாகவே இந்தச் சட்டம் இருப்பதாகவே மனித உரிமை ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் கூறுகிறார்கள்.

இந்தச் சட்டத்தின் 35வது பிரிவு மிகுந்த சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. பிரிவு 35-ன் படி அரசு நினைத்தால் எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும். அவ்வாறு அறிவித்தால், அந்த இயக்கத்தில் அதுவரை உறுப்பினர்களாக இருந்த அனைவரும், தீவிரவாதிகளாகவே கருதப்படுவார்கள்.

அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, அந்த இயக்கத்தின் வெளியீடுகளை வீட்டில் வைத்திருந்தாலோ கூட இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைதுசெய்ய முடியும்.

இந்தச் சட்டத்தின் பிரிவு 43-ன் படி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அதிகபட்சமாக 30 நாட்கள் வரை போலீஸ் காவல் வழங்க முடியும். அதிகபட்சமாக ஒரு நபரை 90 நாட்கள் வரை எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்ற காவலில் வைக்க முடியும். அதேபோல், 180 நாட்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஒருவரை சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும்.

இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர், எந்த நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் பெற முடியாது. அதேபோல் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் பிரிவு 43-ன் படி, ஜாமீனில் வெளியே வருவது இயலாத காரியம். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அதற்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள். இந்த நீதிமன்ற நடவடிக்கையை பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ பார்ப்பதற்கு அனுமதியில்லை.

ஒரு அரசு தங்களுக்கு எதிரானவர்கள் என நினைக்கும், கருதும் அனைவரையும் முடக்குவதற்கும், அவர்களின் மீது தடை விதிப்பதற்கும் இந்தச் சட்டம் வழிகோலுகிறது.பொய்யான குற்றச்சாட்டின் பேரில் இந்தச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார் எனப் பார்த்தால் சிறுபான்மையினரும், தலித் மக்களும்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வழக்கு எண்ணிக்கைகள்

*2019ஆம் ஆண்டு இச்சட்டத்தின் கீழ் 1,226 வழக்குகள் பதியப்பட்டு, 1,948 பேர் கைது செய்யப்பட்டனர். 
*2015 -ம் ஆண்டில் 897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,128 பேர் கைது செய்யப்பட்டனர். 
*2016-ம் ஆண்டில் 922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 999 பேர் கைது செய்யப்பட்டனர். 
*2017-ம் ஆண்டில் 901 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,554 பேர் கைது செய்யப்பட்டனர். 
*2018-ம் ஆண்டு 1,182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,421 பேர் கைது செய்யப்பட்டனர்.

2019-ம் ஆண்டில் ஊபா சட்டத்தின் கீழ் அதிக வழக்குப் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களில், தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது. அந்த வருடத்தில் தமிழகத்தில் 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 498 பேரும், தமிழகத்தில் 308 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தேசத்தில் வசிக்கும் முஸ்லிம்களை ஒடுக்கும் சட்டமான CAA, NRCக்கு எதிராக தேசம் தழுவிய போராட்டம் எழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் ஹிந்துத்துவ கும்பல்களால் 2020 பிப்ரவரி மாத இறுதியில் டெல்லியில் நடத்தப்பட்ட கலவரத்தை காரணம் காட்டி மாணவர் தலைவர்களான சர்ஜீல் இமாம், காலித் சைஃபி, சஃபூரா சர்க்கார், காலித் உமர், நடாஷா நர்வால், ஆசிப் இக்பால் தன்ஹா, தேவாங்கனா கலிதா ஆகியோர் மீது கலவரத்திற்கு காரணம் என பொய்யான குற்றம் சுமத்தி UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது அரசு.இவர்களில் சர்ஜீல் இமாமும், காலித் உமரும் இன்று வரையில் சிறையில்தான் இருக்கிறார்கள்.பீமா கோரேகான் சம்பவத்தை காரணம் காட்டி மாவோயிஸ்ட்டுகள் என குற்றம் சுமத்தி பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோரை சிறையில் அடைத்திருக்கிறது அரசு.அதுபோல உத்திரபிரதேசத்தில் நடந்த ஒரு பாலியல் வன்படுகொலையை விசாரிக்கவும், ஆறுதல் கூறவும் சென்ற பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன், மாணவர் இயக்க தலைவர்கள் மசூத் ஆலம், ரவூப் செரிஃப் உள்ளிட்டோரையும் UAPAவைக் கொண்டு சிறையில் அடைத்திருக்கிறது உ.பி.அரசு.இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மனித உரிமைப் போராளி ஸ்டேன்சாமி இறுதி வரை பிணை கிடைக்காமல் சிறையிலேயே இறந்து விட்டார்.
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறார்கள் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பின் தொண்டர்களை UAPA சட்டத்தின் வழியாக தொடர்ந்து கைதும், அடக்குமுறையும் செய்து கொண்டிருக்கிறன அரசுகள்.இந்த UAPA சட்டத்தின் கொடுமைகளைக் குறித்து ஒரு மாபெரும் UAPA எதிர்ப்பு இயக்கத்தை பிற ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து மக்கள் மன்றத்தில் நடத்தியது பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கம்.
தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட ஊபா சட்டம், இன்றைக்கு அடக்குமுறைச் சட்டமாக மாறியிருக்கிறது. அமைதியான மாநிலம் என்றும், தீவிரவாதத்தின் நிழல் கூடப் படாத மாநிலம் என்றும் ஆட்சியாளர்களால் சொல்லப்படும் தமிழகத்தில், இந்தச் சட்டம் கடந்த சில ஆண்டுகளாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முகநூலில் பதிவிட்டதற்காக இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பலரைக் கைது செய்த கொடுமைகள் எல்லாம் அரங்கேறியுள்ளன.

இச்சட்டத்தின் அடக்குமுறையை புரிந்து கொள்ள சில எடுத்துக்காட்டுகள்.

*2006ம் ஆண்டு ஜோதி பாபாசாகேப் என்ற 19 வயது கல்லூரி மாணவி மஹராஷ்ட்டிரா மாநிலம் புனா நகரில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் வைத்து ஊபா வின் கீழ் கைது செய்யப்படுகிறார். அவர் மீதான குற்றச்சாட்டு, அவரிடம் மாவோயிஸ்ட்கள் பற்றிய புத்தகம் ஒன்று இருந்தது என்பதாகும். ஓராண்டு சிறைவாசத்திற்குப் பிறகு அவருக்குப் பிணை கிடைத்தது. அப்போது அவரைப் பிணையில் விடுவித்த நீதிபதி, ஒருவரின் கருத்தியலுக்காக அவரைக் கைது செய்யலாமா? என்று காவல்துறையிடம் கேள்வி எழுப்பினார்.

*2008 இல் 18 இஸ்லாமிய இளைஞர்கள் ஜிஹாத் குறித்த புத்தகங்கள் வைத்திருந்தனர் என்ற காரணத்தின் பெயரால் கைது செய்யப்பட்டனர். இதுதான் புகழ்ப்பெற்ற ஹூக்ளி சதி வழக்காகும். 2015ல் ஆறாண்டு சிறைவாசத்திற்குப் பின்பு குற்றமவற்றவர்கள் என இவர்கள் விடுதலையாகினர். இவர்களிடம் இருந்த அந்த புத்தகம் குர்ஆன் ஆகும்.

*2006 ஆம் ஆண்டு வாகித் சேக் என்ற பள்ளி ஆசிரியர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.9 ஆண்டுகள் 5 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்!

*2014 இல் 12 அகவையுடைய சிறுவன் உள்ளிட்ட நான்கு சிறுவர்கள் ஊபாவின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.

*மனித உரிமைப் போராளி அ.மார்க்ஸ் அவர்கள் அங்கம் வகிக்கும் NCHRO 2017ல் நடத்திய கருத்தரங்கில் ஒருவர் மார்க்ஸ் அவர்கள் முன் முதலாவதாக வந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் ராஜஸ்தான் மாநிலத்தவர். ஐந்து பிள்ளைகள். ஒரு பள்ளி நடத்துகிறார். ஆயுதங்களுடனும் ஆபாசமான முழக்கங்களுடனும் பஜ்ரங்தள் ஊர்வலம் ஒன்று நடந்தபோது அப்படி ஊர்வலம் போவதை எதிர்த்துள்ளார். கைது, சித்திரவதை, UAPA சட்டம் என நீண்ட நாள் சிறைவாசத்திற்குப் பின் குற்றமற்றவர் என விடுதலையானவர். அவரின் பெயர் முகம்மது ஹனீஃப்.

*2017ல் ஹைதராபாத்தில் வைத்து UAPAவில் கைது செய்யப்பட்டவர் இம்ரான்.18 மாத சிறைவாசத்திற்கு பிறகு நிரபராதி எனக் கூறி நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

2014 ஆம் ஆண்டின் அரசுப் புள்ளி விவரப்படியே இச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டவர்களில் 72.7% குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர். அதாவது 10 இல் 7 பேர் குற்றமற்றவர்களாவர்! பெரும்பாலும் இச்சட்டத்தின் கொடுமைக்கு இரையாவோர் இஸ்லாமியர்கள், தலித்துகள், பழங்குடிகள் ஆவர்.

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் என்பது இதன் பெயர்.ஆனால் ஹிந்துத்துவ சங்பரிவாரங்களின் சட்டவிரோத பயங்கரவாதச் செயல்களைப் புரிவோர் மீது இச்சட்டங்களின் வழியாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.உதாரணத்திற்கு 2020 பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற்ற டெல்லி வன்முறைச் சம்பவத்திற்கு காரணமான இஸ்லாமியர்களுக்கெதிரான வெறுப்பு பேச்சைக் கக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.ஜாமியா மில்லியா கல்லூரிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து மாணவர்களை தாக்கிய ஹிந்துத்துவ குண்டர்கள் மீது இந்தச் சட்டம் பாயவில்லை.இது போல் நிறைய உதாரணங்களை கூற முடியும்.இவர்களை எல்லாம் விட்டு விட்டு அரசுக்கெதிராக செயல்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லி ஜனநாயக அடிப்படையில் செயல்படுபவர்களை இந்த சட்டத்தின் வழியே முடக்கப் பார்க்கின்றன அரசுகள்.

ஜனநாயக முறைகளில் எதிர்ப்பை பதிவு செய்ததற்காக UAPA சட்டம் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பெருவாரியாக தவறாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் அரசாங்கத்தை எதிர்க்கும் செயற்பாட்டாளர்களை குறிவைக்க இது பயன்படுத்தப்படுகிறது. இதில்  கடுமையான பிரிவுகளை சேர்ப்பதன் மூலம் சட்டத்தை விரிவாக்குவதை குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது.

நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்துப் பேசிய அசாசுதீன் ஒவைசி, "விடுதலைக்குப் பிறகு இந்தியாவில் தனிநபருக்குச் சுதந்திரம் மட்டுமல்லாமல் முறையான சட்ட நடைமுறை இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் தீர்மானித்தனர். தற்போதைய அரசு அதைத் தகர்க்கிறது. நீதிமன்றம் என்னை விசாரித்து குற்றவாளி என அறிவித்தால் மட்டுமே நான் தீவிரவாதியாக முடியும். ஆனால், தற்போது நீதிமன்றத்தின் அதிகாரத்தை அரசே கையில் எடுத்துக் கொள்கிறது. முறையான விசாரணையின்றி யாரையும் குற்றவாளியென அறிவிப்பது சட்டவிரோதம் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் ஒருமுறை கூறியுள்ளது. அதற்கு எதிராக இந்தப் புதிய சட்டத்திருத்தம் உள்ளது. அரசு தனது விருப்பத்துக்கு யாரையும் தீவிரவாதியென அறிவித்தால் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டிய சுமை குற்றம்சாட்டப்பட்டவரின் மீது விழுகிறது. காங்கிரஸ் கட்சிதான் இதில் முக்கியக் குற்றவாளி. இத்தகைய சட்டங்களை அறிமுகப்படுத்தியது அவர்களே. அதை, பி.ஜே.பி மேலும் பரவலாக்குகிறது!” என்றார்.

இச்சட்டம் இந்நாட்டில் ஆளும் வர்க்கத்திற்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்கி ஆளப்படுவோரின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது. UAPA மட்டுமில்லாமல் AFSPA, NSA, NIA போன்ற அடக்குமுறைச்சட்டங்களை நீக்க வேண்டும். அதுவே இந்தச் சட்டங்களால் குழிதோண்டிப் புதைக்கப்படும் ஜனநாயக உரிமைகளை மக்களுக்கு கிடைப்பதற்கு உறுதிசெய்ய முடியும்.இந்த சட்டங்களுக்கெதிராக தொடர்ந்து செயல்படுவோம்.ஜனநாயகத்தை பாதுகாப்போம்.

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.