பூமி என்னும் உயிர் கிரகம்-3

தண்ணீர்

மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது, தண்ணீர். மனிதன் மட்டுமல்ல, நீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. நாம் பல நாட்கள் உணவு உண்ணாமல் உயிர் வாழ முடியும். ஆனால் ஒரே ஒருநாள் முழுவதும் தண்ணீர் குடிக்காவிட்டால் உடல் ‘செல்கள்’ வற்றி உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகக்கூடும்.மனிதர்கள் உண்ணும் உணவிலிருந்து அவனுடைய தினசரி நடவடிக்கைகளுக்கு தண்ணீர் என்பது மிக இன்றியமையாதது.

தண்ணீர் என்பது இஸ்லாத்தைப் பொருத்தவரை இறைவனிடம் இருந்து வருகிற அருட்கொடையாகும். இறைவனைத் தவிர வேறு யாராலும் ஒரு சொட்டு நீரைக்கூட உற்பத்தி செய்ய முடியாது.
தண்ணீரைக் குறித்து இறைவன் தனது வேதமான குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

 " மேகத்தில் இருந்து அதனை நீங்கள் பொழிய வைக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா? நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக ஆக்கி இருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? "
(அல்குர்ஆன்–56:68)

" நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மழையின் மேகத்தை ஓட்டி (பொழியச் செய்து) அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய (ஆடு, மாடு, ஒட்டகம்) ஆகிய கால்நடைகளும் புசிக்கக் கூடிய பயிர்களையும் வெளிப்படுத்துகிறோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? (இதனைக்கூட) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா? "
(அல்குர்ஆன்–32:27) என்றும்,

" உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய் விட்டால், அப்போது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? "
(அல்குர்ஆன்–67:30) 

என்றும் இறைவன் கூறுகின்றான்.

பூமியில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு உயிரினங்களும் நீராலேயே படைக்கப்பட்டுள்ளது.அதை குர்ஆனில் இறைவன் தெளிவுபடுத்துகிறான்

" நிச்சயமாக வானங்களும் பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரில் இருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? "
(அல்குர்ஆன்-21:30).

" எல்லா உயிரினங்களையும் அல்லாஹ் நீரில் இருந்து படைத்துள்ளான். அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு. அவற்றில் நான்கு (கால்)களைக் கொண்டும் நடப்பவையும் உண்டு. தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்."
(அல்குர்ஆன்-24:45).

அதோடு நிலத்திற்கு அடியில் இருக்கும் வளமான நிலத்தடி நீரைக் குறித்தும் இவ்வாறு கூறுகின்றான்.

" (நபியே!) நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்தில் இருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கிறான். அதன் பின் அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களுடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான்."
(அல்குல்ஆன்-39:21).

" வானத்தில் இருந்து நாம் அளவோடு (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனை பூமியில் தங்க வைக்கிறோம். நிச்சயமாக அதனைப் போக்கி விடவும் நாம் சக்தியுடையோம்."
(அல்குர்ஆன்-23:18)

இப்படிப்பட்ட நீராதாரம் என்பதை மனிதன் தன்னுடைய பேராசையால் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறான்.
நீர் மாசுபாடு என்பது இந்த பூமியில் வாழும் உயிரினங்களின் நீர் ஆதாரமான ஏரிகள், ஆறுகள், கடல்கள், நிலத்தடி நீர் போன்ற நீர் நிலைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிப்பதாகும்.

நீர் மாசடைவதால் உலக உயிரினங்களின் உணவுச் சங்கிலிகள் அறுபடுவதோடு, நீர்வாழ் உயிரினங்கள் அழிவதற்கும், பசி, பஞ்சம், பட்டினி, வறுமை முதலியன உலகில் உருவாகுவதற்கும் காரணமாகின்றது.

நீரை விரயம் செய்வதைக் குறித்தும் , மாசுபடுத்துவதைக் குறித்தும் இஸ்லாம் மிகுந்த அக்கறை செலுத்தியுள்ளது. தண்ணீரில் வீண் விரயம் செய்ய வேண்டாம் என்று இறை தூதர் எச்சரித்த போது "ஓடும் நதியில் உளூ செய்தாலும் வீண்விரயம் கூடாது "என்று எச்சரித்துள்ளார்கள்.

" சாபத்தைக் கொண்டுவரக் கூடிய மூன்று விடயங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்,  அவை "நீர்நிலைகளில் மலம் கழித்தல்,  பொது வீதிகளில் மலம் கழித்தல்,  நிழல்களில் மலம் கழித்தல்" என்றார்கள்." 
(அபூதாவூத்).

" ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்." என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) 
புகாரி.

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான ஆறு, குளம் போன்றவைகளில் சாக்கடை, கழிவுநீர் ஆகியவை கலக்கும் வண்ணம் அமைந்திருக்கின்றது.
பெரிய பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் நீர் நிலைகளின் அருகிலேயே உருவாக்கப்படுகிறது.ஒருபக்கம் நல்ல நீரை அந்த நீராதாரத்தில் பெற்றுக் கொண்டு, தான் உருவாக்கும் கழிவுநீரை அதே நீராதாரத்தில் கலக்கச் செய்கிறார்கள்.

பல்வேறு ஆலை நிறுவனங்களின் ரசாயனம் கலந்த கழிவு நீர் ஆறு, குளம் போன்றவைகளில் கலப்பதால் அந்நீரைப் பயன்படுத்துவது தடுக்கப் படுவதோடு மக்களுக்குப் பெரிய அளவிளான உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதுபோக இத்தகைய கழிவுகளை பாதாள சாக்கடை வழியாக உரிய இடங்களில் செலுத்தாமல் பூமியின் மேற்பரப்பிலும் திறந்த வெளி சாக்கடையிலும் விட்டு விடும் போது சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் மாசடைகிறது.

நீர் மாசடைதல் என்பது வரும் காலங்களில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது.நீர் வாழ் உயிரினங்கள் அருகிக் கொண்டிருப்பதோடு, உலக அளவில் மிகப் பெரும் பிரச்சினைகள் தூய்மையான நீருக்காக நடைபெறப் போகின்றன.

நீர் மாசடைவதால் பெருந்தொற்று உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன.காலரா,மலேரியா,டெங்கு என்பன போன்ற நோய்கள் நீர் மாசடைவதால் உருவாகின்றன.மனிதர்களின் உயிர் ஆதாரங்களில் ஒன்றான நீர் மாசடைவதால் பாதிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல அவன் சார்ந்திருக்கும் அனைத்து உயிரினங்களும்,இயற்கை வளங்களுக்கும் சேர்த்துதான்.இதனால் இழப்புகளும், பாதிப்புகளும் நாம் வசிக்கும் உயிர்க் கிரகமான பூமிக்குத்தான்.

.....

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.