இஸ்லாமிய சமூகமும், திரைப்படத் துறையும்.....

இஸ்லாமிய சமூகமும் திரைத்துறையும்.....

இஸ்லாம் ஒரு இறுக்கமான சமயமல்ல.அது சர்வதேச அளவில்  அனைத்து நாட்டு மக்களையும் இன, மொழி, நிறங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களையும் ஓரிறைக் கொள்கை கொண்டு இணைக்கும் ஒரு வாழ்வியல் மார்க்கமாகும்.அந்த அடிப்படையில் இஸ்லாம் கலை இலக்கியங்களுக்கு எதிரானதல்ல.

உலகில் உள்ள நாடுகளில் பல்வேறு மக்கள் பல்வேறுபட்ட கலாச்சாரங்களையும்,பண்பாடுகளையும் கொண்டிருக்கிறார்கள். அவற்றை பின்பற்றுகிறார்கள்.உலகின் இரண்டாவது பெரிய சமூகம் இஸ்லாமிய சமூகம். உலகின் கண்டங்களில் உள்ள அந்தந்த தேசங்களில் இருக்கும் கலை,கலாச்சாரங்களை தன்னகத்தே உள்ளிழுத்துக் கொண்டு ஒரு சிறப்பான வாழ்வியல் நெறியையும், ஒரே மாதிரியான இஸ்லாமிய கலாச்சாரத்தையும் ஒன்றுக்கொன்று எவ்வித முரண்பாடுகள் இல்லாமல் வெளிப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம்.அல்லாஹ், இறைத்தூதர், குர்ஆன், தூதரின் வாழ்க்கை முறைகள் என்று இஸ்லாமிய சமூகத்தில்  இவை நான்கும் முக்கியமானதாக, கடமையானதாக இருந்தாலும், ஒரு பகுதியில் தலைமுறைகளாக, பாரம்பரியமாக பின்பற்றி வாழும் அந்தப் பகுதியின் கலாச்சாரத்தோடு தன்னை பிணைத்துக் கொண்டு, தன்னுடைய அடிப்படைக் கொள்கைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், அவற்றை விட்டுக் கொடுக்காமல் வெளிப்படும் ஒரு மார்க்கம் இஸ்லாம்.

இப்படிப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் எந்த அடிப்படையில் கலை இலக்கியத்திற்கு எதிராக நிற்கும்.கலை, இலக்கியம் என்று வரும் போது அவற்றில் நாடகம் மிக முக்கிய இடம்பிடிக்கிறது.பின்னாட்களில் இந்த நாடகமே திரைத்துறையாக பரிணமிக்கிறது. இதனால் மக்களின் பொழுபோக்கிற்கான இடத்தில் திரைத்துறையும் முக்கிய இடம் பிடிக்கிறது. சினிமா இன்று மட்டுமல்ல பல நெடும் வருடங்களாகவே மக்கள் தங்களின் வாழ்வியலையும், வரலாறுகளையும் வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாக திகழ்கிறது.

சினிமா ஒரு பலம்மிக்க ஊடகம். மக்களிடம் போய் எளிதாக சேர்கிற ஒரு ஊடகம். மக்களின் மனதில் பெரும் தாக்கத்தையும், அதிர்வுகளயும் ஏற்படுத்தக் கூடிய ஒரு துறை சினிமா. இந்த சினிமாவின் மூலமாக நாம் நினைத்ததைச் சொல்லலாம். கற்பனைகளாகவும், வரலாற்றைத் திரிக்கும் விடயமாகவும் சினிமாவை பயன்படுத்தலாம்.தங்களின் கொள்கைகளை வெகு எளிதாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கலாம்.இதற்கு தமிழக அரசியல் வரலாற்றில் நிறைய சான்றுகள் இருக்கின்றன.தமிழகத்தின் மூன்று முக்கியமான முதலமைச்சர்கள் திரைத்துறையில் இருந்து வந்தவர்களே. சினிமாவைப் பொறுத்தவரை நன்மைகளை விட தீமைகளே பிரதானமான இடத்தை வகித்தாலும், அதனால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள் மோசமானவை.

அதேநேரம், இந்த சினிமா என்னும் ஊடகத்தைக் கொண்டு நன்மையான காரியங்களை ஏற்படுத்தவே முடியாதா??பொதுவாகவே தீமை என்ற ஒன்று அதிகப்படியாக செயல்படுத்தும் இடங்களில் நன்மைக்கான செயல்பாடுகள் மிகுதியாக தேவைப்படுபவை.எனவே சினிமாத் துறையிலும் அது தேவைப்படுகின்றது.

நீண்ட காலங்களாகவே சினிமாவில் இஸ்லாமியர்களை சித்தரிக்கும் போக்கு என்பது எதிர்மறையாகவோ, மோசமானதாகவோதான் இருக்கின்றது. அடியாட்களாகவும்,வட்டிக்கு விடுபவர்களாகவும், இன்னும் சில மலினமான கதாபாத்திரங்களாகவே காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.அவ்வப்போது சில நல்ல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவைகள் அவ்வளவாக பேசப்படாது.

இந்த நிலையில் இந்தியாவில் பாசிசம் வளர்ச்சியடையத் தொடங்கிய, தனியார்மயமும்,உலகமயமாக்கலும் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டமான 1990களில் இருந்து இஸ்லாமியர்களை மிக மோசமாக சித்தரிக்கும் துறையாக சினிமாத்துறை மாற்றமடைந்தது.போலவே 2002 உலக வர்த்தக இரட்டைக் கட்டிடங்கள் இடிக்கப்பட்ட பிறகு அமெரிக்கா முன்னெடுத்த பயங்கரவாதத்திற்கெதிரான(?) போருக்குஆதரவாக சர்வதேச அளவில் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக, தீவிரவாதிகளாக சித்திரிப்பதில் சினிமாத்துறை முக்கிய பங்காற்றியது.அது இந்தியாவிலும் முஸ்லீம்களுக்கெதிராக செயல்படுத்தப்பட்டது.அது முதல் தீவிரமாக இஸ்லாமியர்களை மோசமானவர்களாக, எதிர்மறையாக சித்தரிக்கும் போக்கு தொடங்கியது.அது இன்றளவும் தொடர்கின்றது.தமிழ்நாட்டில் நடிகர்கள் அர்ஜுன்,விஜயகாந்த்,கமலஹாசன், இயக்குநர் மணிரத்தினம் போன்றோர் அதை சிறப்பாக செய்து முடித்தனர்.இந்திய அளவில் பாலிவுட் சினிமாக்கள் இஸ்லாமியர்களை எதிரிகளாகவே சித்தரித்தார்கள்.தமிழ்த்திரை உலகில் இருக்கும் சில முஸ்லீம்கள் கூட தங்களின் பெயர் உள்ளிட்ட இஸ்லாமிய அடையாளங்களை மறைத்தே செயல்பட வேண்டி இருக்கிறது.

மாறாக, இஸ்லாமிய சமுதாய மக்களிடம் இதற்கான மாற்று என்பதைக் குறித்த எந்த விவாதங்களும் எழவே இல்லை.இஸ்லாமிய இறை நம்பிக்கையை தெளிவு படுத்துகின்ற, அவர்களின் வாழ்வியலை சித்தரிக்கின்ற, இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களை எல்லாம் காட்சிப்படுத்தும் விதமாக சினிமாத்துறையில் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளவே இல்லை.குறைந்த பட்சம் குறும்படங்கள் எடுக்கும் முயற்சியைக் கூட தொடங்கவில்லை.ஆனால் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் விதமாக திரைப்படங்கள் வந்தால் வழக்கம் போல உணர்ச்சிரீதியாக போராட்டம் செய்வது.அதன் மூலமாக பொதுச்சமூகத்தில் தங்களை மோசமானவர்களாக காட்டிக் கொள்வது என அதோடு நின்று விடுவார்கள். இஸ்லாமிய எதிரிகள் சரியாக திட்டமிட்டு திரைப்படங்களை செயற்படுத்துகின்ற போது, ஏன் உண்மை சரித்திரங்களை, படிப்பினைகளை, வாழ்வியலை நம்மால் இந்த சினிமா என்ற மீடியாவால் செய்ய முடியாது.?

சினிமா ஹராம்(செய்யக் கூடாத காரியம்) என்ற கருத்தின் வழியாக நாம் பலதொலைவுகள் பின்தங்கி இருக்கிறோம்.இஸ்லாம் சொல்லும் வரைமுறைக்கு உட்பட்டு வெகுசன மக்களை கவரும் விதமாக நாமும் திரைப்படங்கள் எடுக்கலாம்.சமீபத்தில் மலையாள திரைஉலகில் அதற்கான பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.சில திரைப்படங்கள் கூட வந்து மக்கள் ஆதரவை பெற்றிருக்கின்றன.உலக அளவில் ஈரானிய திரைப்படங்கள் நமக்கு நல்ல முன்மாதிரி.

யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இந்த தொழில் நுட்ப உலகில் மனிதன் சிக்கிக் கொண்டு அதற்கு ஈடு கொடுத்து வேகமாக செயல்பட வேண்டிய நிலைக்கு உலகம் வெகு வேகமாக வளர்ச்சி கண்டு விட்டது. நாம் இந்த நுட்பங்களை பயன்படுத்தி ஒரு நல்ல மனிதனாகவும் வாழ முடியும். அதற்கு மாற்றாக ஒரு கெட்ட மனிதனாகவும் இருக்க முடியம். விரும்பியோ விரும்பாமலோ நாம் இந்த தொழில் நுட்பங்களை, மீடியாக்களை பயன்படுத்தி நமது ஒவ்வொரு வீட்டிலும் இஸ்லாத்தின் கதவுகளை கொண்டு சேர்க்க முடியும். ஆயிரம் வார்த்தைகளை ஒரு காட்சி அழகாக வர்ணித்து விடும். அதுதான் மக்கள் மனங்களில் பதியவும் செய்யும்.
சமீப காலங்களில் தொழில்நுட்பத்தின் வழியாக திரையரங்கிற்கு செல்லாமலேயே,பெரிய செலவினங்கள் இல்லாமலேயே நாம் சுயாதீனமாக திரைப்படங்களை எடுக்க முடியும்.அதை திரையரங்குகளில் இல்லாமல் நேரடியாக இணையதளங்களில் வெளியிடும் தளங்களும் வந்திருக்கின்றன.இது விஞ்ஞானத்தின் மிகப் பெரிய பாய்ச்சல்.இதன் வழியாக தற்போது நிறைய மாற்று சினிமாக்கள் வழியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் காயங்கள், அவர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகள் என்று திரைப்படமாக வெளிவருகின்றன.இஸ்லாமிய சமூகமும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஹிந்துத்துவப் பாசிசத்தால் பாதிக்கப்படும் இஸ்லாமிய சமூகத்தை திரைப்படங்களின் வழியே அழகாக, மக்கள் மனங்களை சென்றடையும் விதமாக திரைப்படங்கள் எடுக்கலாம்.தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து மாற்றத்திற்கான கலைஞர்கள் உருவாவது போல் இஸ்லாமிய சமூகத்திலும் உருவாக்கப்பட வேண்டும்.எதிர் வரும் தலைமுறைகளை பயிற்றுவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.யாரும் நமக்காக வர மாட்டார்கள். நமக்காக நாம்தான் முன்வர வேண்டும். தங்களுடைய அஜென்டாக்களை ஹிந்துத்துவப் பாசிசம் திரைப்படங்களின் வழியே காட்சிப்படுத்தி அதை மக்கள் மயமாக்கும் போது, அழகான வாழ்வியலை, முன்மாதிரியைக் கொண்டுள்ள இஸ்லாமியர்களாகிய நாம் ஏன் ஒதுங்கி நிற்க வேண்டும்.ஒவ்வொரு காலகட்டங்களுக்கும் ஏற்றார் போல் தம்மை தகவமைக்கத் தவறிய சமூகங்கள், அமைப்புகள் எல்லாம் கால ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடும்.திரைத்துறை விடயத்தில் இஸ்லாமிய சமூகம் பின்தங்கி இருப்பது தன்னை தகவமைக்க முடியாமல் போனதுதான்.இஸ்லாமிய சமூகத்தின் இன்றைய தலைமுறையினர் இதன் பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்தட்டும்.

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.