வரலாற்றை மாற்ற வந்த தூதர் !

நபிகளாரும்(ஸல்) -தோழர்களும்!!


" பேரரசே! எங்களை விட மோசமாக வாழ்ந்தவர்கள் இப்புவியில் வேறு எவரும் இருக்க மாட்டார்கள்.அதுபோல எங்களைவிட வறுமையை அனுபவித்தோரும் எவரும் இருக்க மாட்டார்கள்.புழு பூச்சிகள் மற்றும் பாம்பு என்பது தான் எங்களின் உணவாக இருந்தன.ஆடு மற்றும் ஒட்டகத் தோல்களைத்தான் நாங்கள் ஆடையாக அணிந்து வந்தோம்.நாங்கள் பரஸ்பரம் மோதிக்கொண்டு படுகொலைகளை புரிந்து கொண்டும் இருந்தோம்.எங்களுக்கு பிறந்த பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தோம்.அவர்களுக்கு உணவளிப்பதை நாங்கள் வெறுத்தோம்.

இந்நிலையில் இறைவன் எங்கள் மீது கருணை சொரிந்தான்.உன்னதமான ஒருவரை அவன் எங்களுக்கு வழிகாட்டியாக அனுப்பி வைத்தான்.அவரது ஊர்,பெயர் ,உறவுகள் மற்றும் உருவம் யாவும் ஏற்கனவே நாங்கள் அறிந்திருந்தவையேயாகும்.அவர் பிறந்த இடம் நாங்கள் போற்றி மதிக்கின்ற பகுதியில் தான் உள்ளது.அவரது குடும்பம் எங்களின் மிகச்சிறந்ததாகும். அவரது கோத்திரம் எங்கள் கோத்திரங்களில் மாண்பு மிக்க தாகும்.எங்கள் கூட்டத்தாரிலேயே சிறந்தவரும்,நேர்மையாளரும், பொறுமைசாலியும் ஆவார் அவர்.

அவர் எங்களை ஒரு கொள்கையின்பால் அழைத்தார்.ஆரம்பத்தில் அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை.ஒரே ஒரு நண்பர் மட்டும் அதை ஏற்றுக் கொண்டார்.அந்த தோழர் தான் அவருக்குப் பின் அவரது பிரதிநிதியாக ஆனார்.அவர் எங்களிடம் எதையாவது கூறினால் அதை நாங்கள் எதிர்த்து வந்தோம்.அவர் எங்களிடம் உண்மையை சொன்ன போது நாங்கள் அதை பொய்யாக்கினோம்.ஆனால் அந்த சொற்கள் நிரூபணமானதாக பின்னர் எங்களுக்கு தெரிய வந்தது.அதன் மூலம் அவரை ஏற்றுக் கொள்ளவும்,பின்பற்றவும் இறைவன் எங்களுக்கு வாய்ப்பளித்தான்.


எங்களுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு தொடர்பு சாதனமாக அவர் விளங்கினார்.அவர் எங்களிடம் கூறியவை இறைவசனங்கள் ஆகும்.அவர் எங்களுக்கு இட்ட கட்டளைகள் இறைக் கட்டளைகள் ஆகும்.

அவர் எங்களிடம் கூறினார்:

" உங்கள் இறைவன் கூறுகின்றான்.நான் ஏகனாவேன்.எனக்கு பங்காளிகளும் இணை-துணைகளோ, வாரிசுகளோ கிடையாது.அண்ட சராசரங்கள் எதுவும் இல்லாதிருந்த போதும் நான் இருந்தேன்.என்னை தவிர உள்ள அனைத்துமே அழியக் கூடியவையே ஆகும்.அனைத்தையும் நான் தான் படைத்தேன்.அனைத்தும் என்னிடமே திரும்பி வரக் கூடியவை ஆகும்.இறைத்தூதரை உங்களிடம் அனுப்பி வைத்து நான் உங்களுக்கு அருள் புரிந்துள்ளேன்.உன்னதமான இரட்சிப்பிற்கான வழியை அவர் உங்களுக்குக் காண்பிப்பார்.அதனை பின்பற்றினால் நீங்கள் அமைதியான வசிப்பிடத்தை அடைவீர்கள்! ".

முகீரத் பின் ஷுஅபா (ரலி) இத்தனையையும் கூறி முடித்தார்கள்.மாமன்னன் யஸ்தகிர்திடம்  பேசிக் கொண்டிருந்தார் அவர்.

யஸ்தகிர்த்: " இதையெல்லாம் கூறி என்னை அச்சுறுத்தவா எண்ணுகின்றீர்? "

முகீரா (ரலி): " இல்லை! என்னிடம் கேட்டதற்கு தான் நான் பதில் அளித்தேன்.இந்த கட்டமைப்பிற்குள் எங்களுடன் இணைவோருக்கு சம உரிமை கிடைக்கும்.இந்த மார்க்கத்தை ஏற்க மறுப்பவரிடமிருந்து வரியை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அளிப்போம்.அதற்கு முன்வராதோருடன் நாங்கள் போரிடுவோம்.எங்களிடைய தீர்ப்பளிப்பவன் அல்லாஹ்வே ஆவான்.எங்களில் உயிர் நீத்திடுவோருக்கு சொர்க்கம் கிடைக்கும்.எஞ்சி இருப்போருக்கு அல்லாஹ் பகைவருக்கு எதிராக உதவி புரிவான் ".


உலக வரலாற்றின் போக்கை முஹம்மது நபி(ஸல்லல்லாஹ்) மாற்றிக்காட்டியதன் முறையைத்தான் இந்த உரையாடல் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூக மக்களின் சுமையை அவர் இறக்கி வைத்தார்.அடிமைத் தளையின் சங்கிலிகளை உடைத்தெறிய அவர் மக்களுக்கு உத்வேகத்தை ஊட்டினார்.

சாத்தானிய சக்திகளின் பிடியிலிருந்து மனித மனங்களை விடுவித்துக் கொண்டு தான் இறைத் தூதர் இந்த செய்முறையை துவக்கினார்கள்.படைப்பினங்களை பூஜிப்பதிலிருந்து மக்களை விடுவித்து படைத்தவனை நோக்கி அவர்களை அவர் திருப்பி விட்டார்.சுரண்டல்வாத புரோகிதத்திற்கு அந்த மனங்களில் இடம் கிடைக்காமல் ஆனது.சிலைகளை அவர்கள் கைவிட்டனர்.மந்திரவாதிகள் அவர்களை பயப்படுத்தவோ,வயப்படுத்தவோ முடியாத நிலை நேர்ந்தது.அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை என்கிற நம்பிக்கையின் பிரகடனம் உள்ளத்தில் இருந்து வெளிவந்ததோடு அந்த மனங்களை பிணைத்திருந்த கட்டுக்கள் அவிழ்ந்தன.ஆன்மீக அனுபவங்கள் தூய்மை அடைந்தன.

அவர்கள் அல்லாஹ்வுடன் நெருக்கமானார்கள்.ஈரம் உலராத இறை நினைவுகளை அவர்கள் நிலைத்திருக்க செய்தனர்.அவனது தூய்மையை அவர்கள் மகிமைப்படுத்தினர்.அவனுக்கு மட்டுமே சிரம் பணிந்தனர்.அவனிடம் மட்டுமே உதவி கோரினர்.அனைத்து விவகாரங்களையும் அவனிடமே விட்டுவிட்டனர்.அல்லாஹ்விடம் அவர்கள் தனிமையில் உரையாடினார்.அல்லாஹ்வுக்காகவே அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்தினர்.அவனுக்காக அவர்கள் நோன்பு நோற்றனர்.பசியையும் தாகத்தையும் சகித்தனர்.அவனுக்காகவே செல்வத்தையும் செலவழித்தனர்.சொல்,செயல்,எண்ணம்,உறவு மற்றும் செல்வம் உள்ளிட்ட அனைத்தையும் அவர்கள் தூய்மைப்படுத்தினர்.


அல்லாஹ்வின் திருவசனங்கள் அந்த இதயங்களில் ஆழப்பதிந்து இருந்தன.அதில் உள்ள ஒவ்வொரு சொல்லையும் செயல்படுத்துவதற்கு அவர்களது உள்ளங்களும் உடல்களும் பக்குவப்பட்டு விட்டன.அல்லாஹ் அவர்களை அச்சமற்றவர்களாக ஆக்கிவிட்டான்.எதை இழக்க நேர்ந்தாலும் அதன் பன்மடங்கு திரும்ப கிடைக்கும் என அவர்கள் அழுத்தமாக நம்பினர்.

அல்லாஹ் அவர்களிடம் கூறினான்:

" ஒருபோதும் அல்லாஹ் விதித்ததை தவிர வேறு ஒன்றும் எங்களை அணுகாது.அவன் தான் எங்களுடைய பாதுகாவலன் " என்று (நபியே!) நீர் கூறும். மூஃமின்கள் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

(அல்குர்ஆன் 9:51)

அவர்களின் இலக்கு தெளிவாக இருந்தது.உலக வாழ்க்கையின் அர்த்தத்தை அவர்கள் விளங்கி வைத்திருந்தனர்.மறுமை வாழ்வை அவர்கள் கண்கூடாக கண்டனர்.

" இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறு இல்லை.இன்னும் நிச்சயமாக மறுமை கூறிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும்.இவர்கள் இதை அறிந்திருந்தால்...."

(அல்குர்ஆன் 29:64)
 
இதுபோன்ற இறைவசனங்கள் அவர்களின் இலக்கை நிர்ணயித்தன.அவர்கள் தம் பொறுப்புகளை நிறைவேற்றினர்.பாவங்களை விட்டும் விலகி இருந்தனர்.நேர்ந்துவிட்ட தவறுகளுக்காக பிழை பொறுக்க வருந்தினர்.அல்லாஹ்வுடனான நேர்காணலுக்காக பேராவல் கொண்டனர்.


ஆம்.அவர்கள்தான் நபித்தோழர்கள்.அவர்கள் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர்.அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான்.


Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.