நபிகளார் நம்மோடு இருந்தால்.....

அடிமை விலங்கை உடைத்தெறிந்த உன்னத தூதர்!

நபி தோழர்களில் ஒருவரான அபூ மஸ்ஊத் என்பவர் ஒருமுறை தனது வேலைக்கார சிறுவனை ஏதோ காரணத்தால் சாட்டையால் அடித்தார்.அப்போது பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது:

"அபு மஸ்ஊதே! நன்றாக தெரிந்து கொள்ளும்!"

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு) அவர்கள்தான் உரத்த குரலில் கூவி அழைத்துக் கூறுகின்றார்கள்.எனினும் இது இன்னாரின் குரல் என சட்டென்று இனங்காண முடியாத அளவிற்கு அண்ணலார்(ஸல்) அவர்கள் கடும் கோபம் கொண்டவராக இருந்தார்கள்.அருகே நெருங்கிச் சென்ற,
நபிகளார் (ஸல்லல்லாஹு):

" அபுமஸ்ஊதே!  இந்த அடிமையின் மீது உமக்குள்ள அதிகாரத்தை விட உன் மீது அல்லாஹ்வுக்கு அதிகமான அதிகாரம் உள்ளது என்பதை நீ தெரிந்து கொள்ளும்! " என்று மேலும் கூறினார்கள்.

நபிகளாரின் கோபம் கொண்ட நிலையினை கண்ட அபு மஸ்ஊதியின் கையிலிருந்த சாட்டை பிடி தளர்ந்து விலகி கீழே விழுந்தது. தொடர்ந்து அவர், " இனி ஒருபோதும் எந்த அடிமையையும் நான் அடிக்க மாட்டேன். 
யாரசூலுல்லாஹ்! அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை வேண்டி இதோ இவனுக்கு இப்போது விடுதலையளிக்கின்றேன்! " என்று கூறினார்.

இதை கேட்ட நபிகளார்(ஸல்):

" நீர்அவ்வாறு செய்திடவில்லை என்றால் நரகம் உம்மை கரித்துப் பொசுக்கிடக் கூடும் " என்றார்கள்.

சாதி-சமயம்,பட்டம்-பதவி, செல்வாக்கு,இனம்-நிறம் போன்றவற்றின் அடிப்படையில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு காண்பதை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவோ அனுமதிக்கவோ இல்லை.

" உலகில் மிகச் சிறந்தவர் உங்களில் பயபக்தியில் முன்னிலை வகிப்போரேயாவர் ", என்று திருக்குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ளது. 

நபித்தோழர் அபுதர் கிஃபாரி(ரலி) அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அவர்களுடன் ஒரு அவையில் அமர்ந்து இருந்தார்.அப்போது உயரம் குன்றிய ஒருவர் அபூதர்ரின் அருகில் வந்து அமரவும், உடனே அபூதர்(ரலி)அவர்கள் அங்கிருந்து சற்று நகர்ந்து அமர்ந்தார்.

இதனைக் கண்ட நபிகளார்(ஸல்):

" அளவு பாத்திரத்தை நிரப்புங்கள்! அளவு பாத்திரத்தை நிரப்புங்கள்! " என்றார்.

அனைவரையும் சமமாக எண்ண வேண்டும் என்பதே இக்கூற்றின் பொருளாகும்.அதனைத் தொடர்ந்து அம்மனிதரிடம் மன்னிப்பு கோரிய பின்னர்தான் அபூதர் ரலியல்லாஹு அவர்கள் சகஜ நிலைக்கு திரும்பினார்.

மக்களை விட்டும் அகன்று தம்மைத்தாமே பெரிதாக எண்ணிக் கொண்டு கர்வம் காண்பிப்போர் அகங்காரம் திமிர் பிடித்த ஆணவக்காரர்கள் ஆவர். தீட்டுப்படாதிருக்க வேண்டும் என்பதற்காக தாழ்த்தப்பட்டவர்களிடம் தீண்டாமையை கடைப்பிடிப்போர் ஒருபோதும் இறைநேசர்கள் ஆகவே முடியாது.அல்லாஹ்வின் முன்னால் அகம்பாவம் கொள்ள எவருக்கும் அருகதை கிடையாது. 

" எவரேனும் அல்லாஹுவை எண்ணி பணிவு கொண்டால் அல்லாஹ் அவரை உயர்வடைய செய்வான்.அப்போது அவர் தன்னை பொருத்தமட்டில் சிறியோனாகவும்,மக்கள் மத்தியில் மகானாகவும் திகழ்வார்.எவரேனும் அகந்தை கொண்டால் அல்லாஹ் அவரை தாழ்த்து விடுவான்.தன்னைப் பொறுத்த மட்டில் பெரும் புள்ளியாகவும், மக்களிடையே அற்பனாகவும் அவர் திகழ்வார். எந்த அளவிற்கு எனில் மக்கள் மனங்களில் அவர் நாயை விடவும் பன்றியை விடவும் கேவலமாக இருப்பார்! " என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு) அறிவித்துள்ளார்கள்.

-நபிகளார் நம்மோடு இருந்தால்........

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.