பாபரி மஸ்ஜித்.... வீழ்ச்சியின் வேதனை, எழுச்சியின் அடையாளம்.....

பாபரி மஸ்ஜித்! 
என்றும் நம் நினைவில்!!

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதச் செயலான தேசத் தந்தை மகாத்மா காந்தி படுகொலைக்கு பிறகு நடந்த மிகப்பெரிய மற்றொரு பயங்கரவாதம் பாபர் மஸ்ஜித் இடிப்புச் சம்பவம்.இந்திய வரலாற்றில் என்றென்றும் கரும்புள்ளியாக இருக்கக்கூடிய ஒரு முக்கியமான சம்பவம் இது.

பாபரி பள்ளி தகர்ப்பு என்பது 463 ஆண்டுகால முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலதத்தின் இடிப்பு மட்டும் அல்ல மாறாக,  இந்தியாவின் மதிப்பு, கண்ணியம், பல்வேறு உயர்வான கொள்கைகள் என அனைத்தையும் தான் தகர்த்தது  என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு சங்கப்பரிவார தலைமையிலான ஹிந்துத்துவா பாசிச கும்பல்கள் மிக நீண்ட நெடுங்காலமாக திட்டங்களை தீட்டி படிப்படியாக அதை அதிகாரமட்டத்தின் அனைத்து தரப்பினரின் உதவியுடன் அரங்கேற்றினர்.இந்திய தேசத்தில் உலகமயமாக்கலுக்குப் பிறகான காலகட்டங்களில் ஹிந்துத்துவ பாசிசத்தின் அணிதிரட்டலுக்கு பாபர் மசூதி இடிப்பு என்பது மிக சங்பரிவாரங்களுக்கு பேருதவியாக அமைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

உத்திரப்பிரதேசத்தின் அயோத்தி நகரில் பாபரி பள்ளி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற ஆதாரமோ, வரலாற்றுச் சான்றுகளோ இல்லாத ஒரு கதையை பரப்பி, மக்களின் ஆன்மீக நம்பிக்கையைப் பயன்படுத்தி, பாபரி மஸ்ஜிதிற்கு எதிரான வெறுப்பரசியலை மிகத் தெளிவான திட்டங்களுடன் முன்னெடுத்து, அதை மக்கள் மயப்படுத்தி, மிகப் பெரும் சதி வலையை பின்னி பாபரி மஸ்ஜிதை 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் நாள் அன்று இடித்தார்கள் ஹிந்துத்துவ பாசிஸ்ட்டுகள்.அப்பொழுது மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், உத்திரப்பிரதேசத்தில் கல்யாண்சிங் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியும் ஆட்சியில் இருந்தன. பள்ளி வளாகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் இருந்தனர். அந்த சமயத்தில் அயோத்தியில் மஸ்ஜித் அருகே இருந்த  சங்பரிவார தலைவர்களின் வெறியூட்டும் வெறுப்பரசியல் உரைகளால் உத்வேகம் பெற்ற பாசிச குண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் உலகமே பார்க்க பள்ளிவாலை இடித்தனர். இதற்கு அந்த காலகட்டங்களின் அரசு மற்றும் அதிகாரவர்க்கத்தின் அனைத்து இயந்திரங்களும் சங்பரிவார்களுக்கு உதவி புரிந்தனர்.பள்ளிவாசலை இடித்த பிறகு, பள்ளியை அதே இடத்தில் கட்டித் தருவோம் என்ற ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள் காற்றில் கரைந்து போனதை நம் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

டிசம்பர் 6ம் தேதி என்பதற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அன்றுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள். அம்பேத்கர் அவர்கள் ஒடுக்கப்படும் மக்களுக்கான குறியீடுகளில் ஒருவர். ஹிந்துத்துவ சித்தாந்தத்தைப் பொறுத்தவரை பிராமணமயமாக்கலை முன்வைத்து செயல்படும் ஒரு அழிவுச் சித்தாந்தம். பிராமணியத்தின் வர்ணாசிரம தத்துத்துவத்தின் சாதிய அடுக்கில் மிகவும் கீழான கடைசி சமூகத்தை சேர்த்தவர் அம்பேத்கர். அவர் உருவாக்கிய அரசியலலைப்புச் சட்டத்தை மாற்றி மனுதர்மத்தை நோக்கமாகக் கொண்டு ஹிந்து ராஷ்ட்டிராவை உருவாக்க முயல்பவர்களே ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்பரிவார கூட்டத்தினர்.எனவே அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை தேர்ந்தெடுத்து பள்ளிவாசல் இடிப்பை நிறைவேற்றியதின் மூலமாக உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து விட்டனர் சங்பரிவார பாசிஸ்ட்டுகள். 1992ம் ஆண்டு இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதுக்கான நீதி என்பது இந்திய தேசத்தில் இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது.

இரண்டாவது முறையாக பெரும்பான்மையாக ஆட்சியில் அமர்ந்த பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ்ஸின் ஹிந்துத்துவ ராஷ்ட்டிரத்திற்கான அஜென்டாக்களை வேகமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றான பாபரி மஸ்ஜித் மீதான தீர்ப்பும் ஒன்று. முழுக்க முழுக்க பள்ளிவாசலின் அனைத்து ஆவணங்களும் சட்டப்பூர்வமாக இருக்க, பள்ளியின் மீதான அனைத்து உரிமைகளும் முஸ்லீம்களுக்கு இருக்க அவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் இந்திய தேசத்தின் உச்சபட்ச சட்ட பீடமான உச்சநீதிமன்றம் பள்ளிவாசல் இடத்தை முதலில் மூன்றாக பிரித்துக் கொடுத்தது.பிறகு அதனையும் பறித்து 2019ம் ஆண்டு நவம்பர் 9ம் நாள் அன்று தேசத்தின் பெரும்பான்மையின் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் பள்ளி மீதான முஸ்லீம்களின் நீதிக்கான போராட்டத்தின் உரிமையை முற்றிலுமாக இல்லாமலாக்கி சங்பரிவார்களின் கையில் மஸ்ஜித் நிலத்தை அநீதமான முறையில் சட்டப்பூர்வமாக ஒப்படைத்தது.

பள்ளி இடிப்பிற்கு பிறகான காலங்கள்.....

பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகான காலகட்டம் என்பது இந்திய முஸ்லீம்களுக்கு நிராசையான ஒன்றாக இன்று வரை தொடர்கிறது.பள்ளிவாசல் தகர்க்கப்பட்ட தினமான டிசம்பர் 6ஐ கருப்பு தினமாக நெஞ்சில் ஏந்தி ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை மேற்கொண்ட முஸ்லீம்கள் நவம்பர் 9ம் நாள் அநீதி தீர்ப்பிற்கு பிறகு ஜனநாயக உரிமைப் போராட்டங்களிலும் பெரிதாக கவனம் செலுத்தாமல் சுருங்கிப் போய் நிற்கிறார்கள்.தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதத்திற்கெதிராக எந்த வித குரல்களையும் உயர்த்த முடியாமல் போகும் அளவிற்கு சங்பரிவார்களால் முற்றுகையிடப்பட்டிருக்கின்றார்கள். எங்கோ இடிக்கப்பட்ட பள்ளிவாசலுக்காக நாம் ஏன் போராட வேண்டும் என்ற எண்ணம் இஸ்லாமியர்களின் உள்ளங்களில் விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாபரி மஸ்ஜிதின் இடிப்பு என்பது இஸ்லாம் மார்க்கத்தின் மீதும், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்.பாபரி மஸ்ஜித் இருந்த வரைக்கும் அது இது இந்திய முஸ்லீம்களின் இருப்பிற்கான குறீயீடாக இருந்தது. சட்டப்பூர்வமான உரிமைக்கான போராட்டங்களுக்கு அந்த பள்ளி தொடர்ந்து உத்வேகத்தையும், உற்சாகத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தது. எம்மைப் பொறுத்தவரையில் பாபரி மஸ்ஜித் என்பது ஷஹாதத்தின் சாட்சியாக இருக்கின்றது. ஒவ்வொரு சித்தாந்தத்திற்கும் ஒரு பொற்காலம் இருக்கும். அந்த வகையில் சங்பரிவார்களுக்கு இனி வரக் கூடிய காலங்கள் பொற்காலமாக இருக்கலாம். தங்களுடைய அழிவுக் கொள்கையை மக்கள் மீது அடக்குமுறை கொண்டு திணிக்கலாம்.ஆனால் வரலாறுகள் எப்பொழுதும் ஒரே போல் இருப்பதில்லை.

ஆம், தலைமுறை தலைமுறைகளாக பாபரி மஸ்ஜிதின் வரலாற்றை எடுத்துச் செல்வோம்.வாய்ப்புக் கிடைக்கும் போது பாபரி பள்ளி இருந்த அதே  இடத்தில்  புணர்நிர்மானம் செய்வோம்.

இன்ஷா அல்லாஹ்....

எங்களைப் பொறுத்தவரை பாபரி மஸ்ஜித் என்பது...

வீழ்ச்சியின் வேதனை.....

எழுச்சியின் அடையாளம்....

பாபரியை மறக்காமல் நினைவில் வைப்பதே பாசிச எதிர்ப்பின் முதல் நிலை.....

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.