ஹலால் தரச்சான்றும் இஸ்லாமோஃபோபியாவும்.....

ஹலால் தரச்சான்றிதழ்!

ஹலால் என்ற சொல் இன்று முஸ்லிம் அல்லாதவர்களின் நாவுகளிலும் கூட அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தையாக மாறிவிட்டது. 'ஹலால்' என்ற சொல் ஆகுமாக்கப்பட்டது, அனுமதிக்கப்பட்டது என்ற அர்த்தத்தை கொண்டிருப்பதோடு, ‘ஹராம்’ தடுக்கப்பட்டது, அனுமதிக்கப்படாதது என்ற சொல்லை எதிர்ப்பதமாகவும் கொண்ட ஒரு சொல்லாகும்.

ஹலால் என்பதை ஒரு வார்த்தையால் விளங்கப்படுத்த முடியாத அளவு விசாலமான கருத்தைக் கொண்ட ஒரு சொல்லாகும். சுருக்கமாக சொல்வதானால் இஸ்லாமிய மார்க்கப்படி “ஒரு மனிதனின் நன்மைக்காக எதுவெல்லாம் இறைவனால் உபயோகிக்க அனுமதிக்கப்பட்டதோ அது ஹலால் (நல்லது)” என்றும், “இறைவனால் உபயோகிக்க தடுக்கப்பட்டவை ஹராம்” என்றும் கூறமுடியும்.அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

" எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ – அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள். அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார். பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்."

(அல்குர்ஆன் - 7:157)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். " அனுமதிக்கப் பட்டவையும் (ஹலால்) மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் (ஹராம்) தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலானோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும், தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்படடவையாகும். எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர்பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம் "
(புஹாரி: 52, முஸ்லிம்)

ஒரு இஸ்லாமியன் என்பவனுக்கு அவன் இந்த பூமியில் பிறந்ததில் இருந்து மரணிக்கும் வரை அவனுக்கான ஹலால், ஹராம் என்ற காரியங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. தன்னுடைய வாழ்வியலின் அனைத்து பகுதிகளிலும் அனுமதிக்கப்பட்டது, தடை செய்யப்பட்டது என்ற இரண்டை சுதந்திரமான முறையில் மேற்கொள்வதற்கு அவனுக்கு உரிமை இருக்கிறது. இன்றையச் சூழ்நிலையில் ஹலால், ஹராம் பேணுதல் என்பது மிகவும் இன்றியமையாதது.மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான உணவு முறைகளைப் பேணுதலில் இஸ்லாம் ஹலால் ஹராமிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. அந்த அடிப்படையில் உலகம் முழுக்க உள்ள இஸ்லாமிய மக்களின் உணவுத் தரத்தை ஆய்வு செய்ய ஹலால் துறை என்ற ஒரு துறையே இருக்கிறது.

ஹலால் துறை என்பது இஸ்லாமிய சட்டத்தின்படி விலங்குகளை அறுப்பது மட்டுமல்லாமல், ஹலால் உணவு, ஹலால் வாழ்க்கை முறை மற்றும் ஹலால் சேவைகளையும் உள்ளடக்கியது. இஸ்லாமிய அடிப்படையில், ஹலால் என்றால் சட்டபூர்வமான அல்லது அனுமதிக்கப்பட்டதாகும்.

ஹலால் என்ற கருத்து உணவு மற்றும் பானங்கள் முதல் வங்கி மற்றும் நிதி, சுற்றுலா, அழகுசாதன பொருட்கள், மருந்துகள், வணிகம், பயணம், தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து வரை நீண்டுள்ளது. சுருக்கமாக, ஒரு தயாரிப்பு அதன் இஸ்லாமிய தேவைகளை அதன் மூலத்தில் பூர்த்தி செய்கிறது என்ற கொள்கையின் அடிப்படையில் ஹலால் என்ற வாக்கியத்தின் அர்த்தமாக உள்ளது. இதற்கான மூலங்களாக இஸ்லாமிய விதிகளின் இரண்டு மிக முக்கியமான ஆதாரங்களான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் விளங்குகின்றன.

உணவுப் பாதுகாப்பு மற்றும் நோய் அச்சுறுத்தல் போன்ற உலகெங்கிலும் பரவலான பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக, முஸ்லிமல்லாதவர்களும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தர உறுதி ஆகியவற்றிற்காக ஹலால் உணவுகளை விரும்புகிறார்கள். ஹலால் உணவு உற்பத்திக்கு திடமான கூறுகள் தேவைப்படுவதால் மாசுபடுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே, ஹலால் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

" நம்பிக்கை கொண்டோரே, நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள் " என்று திருக்குர்ஆன் (2:172) சுட்டிக்காட்டுகிறது.

இஸ்லாமிய பார்வையில், ஹலால் மற்றும் ஹராம் என்ற சொற்கள் ஒரு முஸ்லிமின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்துடனும் தொடர்புடைய  குறிப்பிட்ட, நன்கு வரையறுக்கப்பட்ட சட்டங்கள் ஆகும். ஹலால் மற்றும் ஹராம் விதிமுறைகள் உணவு மற்றும் உணவு விதிகளை ஒழுங்குபடுத்துகின்றன. எதை உட்கொள்ள வேண்டும், எதை உட்கொள்ளக்கூடாது; வர்த்தகம் மற்றும் வணிக நெறிமுறைகள் உள்ளிட்ட பணம் கொடுக்கல்  வாங்கல்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடை சட்டங்கள்,  திருமணம், தத்தெடுப்பு, சொத்துரிமை போன்ற குடும்ப மற்றும் சமூக உறவுகள், சமூக நடத்தை மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றை உட்படுத்தும் ஹலால் (அனுமதிக்கப்பட்ட) மற்றும் ஹராம் (அனுமதிக்கப்படாத) விடயங்கள் முஸ்லிம்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் நிர்வகிப்பதால், அவற்றை மிகக் கவனமாக கடைபிடிக்க முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர்.  அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக உணவு இருப்பதால், உணவு விதிகள் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை.

எவற்றை ஒரு முஸ்லிம் உண்ணக் கூடாது என குர்ஆன் இவ்வாறு பட்டியலிடுகிறது...

" (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன."

(அல்குர்ஆன் - 5:3)

" எதன்மீது, (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் – நிச்சயமாக அது பாவமாகும்."

(அல்குர்ஆன் - 6:121)

தன் வாழ்நாளில் தன்னுடைய வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் ஹலால் ஹராம்களைப் பேணி நடக்கும் ஒவ்வொரு முஸ்லீமிற்கும் அதன் வரையறைகளையும், எல்லைகளையும் இஸ்லாம் தெளிவாக்கி விட்டது.இணைவைப்பு, வட்டி, விபச்சாரம், திருட்டு, புறம் பேசுதல் என ஒவ்வொரு தீய செயல்களுக்கும், அதை விட்டு விலகி இருப்பதற்கும் இஸ்லாம் வரையறை வைத்திருக்கிறது. அதுபோல்தான் உணவுப் பொருட்களை உண்பதிலும் தயாரிப்பதிலும் தனக்கான அனுமதிக்கப்பட்ட முறைகளைக் கொண்டு முஸ்லீம்களை அது நெறிப்படுத்துகிறது.சர்வதேச அளவில் இன்று உலகம் முழுக்க உணவுப் பொருட்களின் சந்தை மிகப் பெரிய அளவில் விரிவடைந்திருக்கிறது.இதில் இஸ்லாமியர்களுக்கான சந்தை என்பது மிகப் பிரதானமானது.
இதில் சர்வதேச அளவில் இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் அவர்களின் மார்க்கம் சொன்ன அடிப்படையில் இருக்கிறதா என்று கண்டறிவது ஒவ்வொரு மனிதனுக்கும் சிரமமான காரியம்.எனவே அவற்றை முறைப்படுத்தும் விதமாக ஹலால் தரச்சான்றிதழ் என்ற ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த தரச்சான்றை இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எவ்வாறு கண்டறிவது, அனுமதிப்பது என இஸ்லாமிய நிபுணர்களைக் கொண்டு உறுதி செய்து மக்களுக்கு வழங்கும் முறையே ஹலால் தரச்சான்று முறை.

இந்த ஹலால் தரச்சான்று என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டும் இருப்பதல்ல.யூதம், கிறிஸ்தவம், இந்து மதம், சீக்கிய மதம் என ஒவ்வொரு மதத்திற்கும் அவரவர்களுக்கான தரச் சான்றுகளைக் கொண்டு செயல்படுகின்றனர்.உதாரணமாக யூதர்களின் உணவுப் பொருட்கள் தரச்சான்றிற்கு " கோஷர் " என்று பெயர்.ஹிந்துக்களுக்கு " ஜட்கா " என்றொரு முறை இருக்கிறது.சீக்கியர்களுக்கு தனியாக ஒன்று என இருக்கின்றது.

உலக அளவில் இரண்டாவது பெரிய மதமான இஸ்லாமிய உலகில் ஹலால் தரச்சான்று மிக முக்கியமானதாக கருதப்படுகின்றனது.இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளுக்கு பிற நாடுகளில் இருந்து உணவுப் பொருட்கள் ஏற்றுமதியும், அதை இஸ்லாமிய நாடுகள் இறக்குமதியும் செய்வதற்கு ஹலால் தரச்சான்றிதழ்கள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. உணவுப் பொருட்களை ஆய்வு செய்து தரச்சான்றுகள் கொடுப்பதற்கு அந்தந்த நாடுகளின் அரசு நிறுவனங்களும், அரசின் அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களும் இயங்குகின்றன.அதேபோல் மத்திய கிழக்கின் இஸ்லாமிய நாடுகளிலும் உணவுச் சட்டங்கள் மிகக் கடினமானவை.எனவே உணவுப் பொருட்கள் தரச்சான்றுகள் பெற்று சுகாதாரமானது, பாதுகாப்பானது என உறுதி செய்த பின்னரே அனுமதிக்கப்படும்.இஸ்லாமிய அடிப்படையிலான தரச்சான்றிதழ் அனைத்து மக்களுக்குமானது.அதனால் அனைவருக்கும் நன்மையே.

இந்த வழிமுறையிலேயே உலகமெங்கும் ஹலால் அடிப்படையிலான தரச்சான்று வழங்கும் முறைகள் இயங்குகின்றன. சமீபகாலங்களாக உலகம் முழுக்க ஹலால் என்ற வார்த்தையைக் கொண்டு இஸ்லாமியர்களின் உணவு முறைக்கு எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஹலால் சான்றிதழ் ஒரு தரச்சான்று முறை என்பதைத் தாண்டி அது அரபு வார்த்தையை அடிப்படையாக கொண்டிருப்பதால் இஸ்லாமிய வெறுப்புத் தொழிலின்(இஸ்லாமோஃபோபியா) வன்மத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படையைப் பொறுத்தவரை எந்த ஒரு மனிதன் மீது எதையும் திணிக்க விரும்புவதில்லை.தேர்ந்தெடுக்கும் முறையை வழங்கி இருக்கிறது.

ஹலால் தரச்சான்றைப் பொறுத்தவரை அது யாரையும் நிர்ப்பந்தப்படுத்துவதில்லை. ஹலால் சான்றைப் போலவே பிற மதங்களின் உணவுத் தரச்சான்றுகளையும் கொண்டு வந்தால் யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை.மக்கள் தங்களுக்குத் தேவையானதை வாங்கி சாப்பிட்டுக் கொள்வார்கள். ஆனால் இஸ்லாமோஃபோபியாவின் காரணமாக ஹலால் என்பதின் மீது வெறுப்பரசியலை தற்போது மேற்கொள்கிறார்கள். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தற்போது தலை தூக்கி இருக்கும் பெரும்பான்மைவாதம் ஹலால் முத்திரை மீது முற்றுகையை செலுத்துகிறது.ஒரே காரணம் அதன் அரபுத் தோற்றத்தினால் மட்டுமே.

இறுதியாக, ஹலால் முத்திரை என்பது உணவின் அதன் தயாரிப்பின் மீதான பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றை மேற்கொள்ளும் ஒரு ஆய்வு முறை.அது இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல கடமையானதும் கூட. அதேநேரம் அதை முஸ்லீமல்லாத பிற மக்களின் மீது திணிப்பதை இஸ்லாமிய மார்க்கமே விரும்புவதில்லை. அதைப் போலவே ஹலால் தரச்சான்றின் உணவுகளின் மீதான பாதுகாப்பு காரணத்தினாலேயே அது உலகம் முழுக்க பிரபலமாக இருக்கின்றது. அதை எதிர்ப்பவர்களுக்கு மத்தியிலும் ஹலால் தரச்சான்றுக்கான தேவை அதிகமாகவே இருக்கின்றது.வெறுப்பரசியல் செய்பவர்கள் எல்லாம் தங்களின் தரச்சான்று முறைக்கான பாதுகாப்பு அம்சங்களை வெளிப்படையாக மக்களிடம் காட்டி விட்டு பிரபலப்படுத்தட்டும். அதை யார் தடுக்கப் போகிறார்கள். மக்கள் விரும்பியதை வாங்கி பயன்படுத்திக் கொள்வார்கள்.

குறித்த ஒன்றை மோசமானதாக சித்தரித்து தங்களுடையதை விளம்பரப்படுத்துவதென்பது பாசிசக் கூறுகளில் ஒன்று.ஹலால் தரச்சான்று விவகாரத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.