ஹஜ்.

ஹஜ்!
************************
நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் கொண்டாடப்பட வேண்டிய சிந்தனை...
***************************************
ஹஜ் முஸ்லிம் சமூகத்தின் சர்வதேச மாநாடு. இன்னொரு வகையில், நபி இப்ராஹீம்(அலை) அவர்களினதும், அவரின் குடும்பத்தினரினதும் தியாகங்களை ஆண்டுதோரும் நினைவூட்டும் ஒரு நிகழ்வு. ஹாஜரா(அலை) தனது குழந்தை இஸ்மாயீல்(அலை) அவர்களுக்கு தண்ணீர் தேடி ஸபா - மர்வாவிற்கிடையில் ஓடியது தொடங்கி, இப்ராஹீம்(அலை) அவர்கள் தனது மகன் இஸ்மாயீலை(அலை) குர்பான் கொடுக்க செல்லும் வழியில் குறுக்கிட்ட ஷைத்தானுக்கு கல் எறியும் நிகழ்வு என அனைத்தையும் ஹாஜிகள் இங்கு மீட்டு செயல் வடிவில் நினைவூட்டுகின்றனர். அதாவது, நபி இப்ராஹீம்(அலை) அவர்களினதும், அவரின் குடும்பத்தினரினதும் தியாகங்களை ஹஜ்ஜில் பங்கெடுக்கும் ஒவ்வொரு நபரும் 'சடங்கு ரீதியில்' மீண்டும் மீண்டும் நிகழ்த்துகின்றனர். நபி இப்ராஹீம்(அலை) அவர்களினதும், அவரின் குடும்பத்தினரினதும் தியாகங்களை இன்று வரையில் முஸ்லிம்கள் ஏன் நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டும்?! ஏன் இதனை (ஹஜ்ஜை) வசதிபடைத்த ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய 'கடமையாக' இஸ்லாம் ஏற்படுத்தியது?! ஒரு இறைத்தூதரும், அவரின் குடும்பத்தினரும் செய்த தியாகங்கள், முஸ்லிம் சமூகம் மறுமை வரையில் நினைவுபடுத்திக் கொண்டிருக்குமளவு முக்கியத்துவம் வாய்ந்ததா?!

இக்கேள்விகளுக்கான பதிலை அல்குர்ஆனில் தேடுவதே இக்கட்டுரை. நபித்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக நபி இப்ராஹீம்(அலை) கருத்தப்படுகிறார்கள். தூதுத்துவப் பணியில் புதியதொரு திருப்பு முனை இப்ராஹீம்(அலை) அவர்களிலிருந்தே தொடங்குகிறது. நபி இப்ராஹீம்(அலை) அவர்களுக்குப் பிறகான அல்குர்ஆன் கூறும் நபிமார்களில் அதிகமானவர்கள், இப்ராஹீம்(அலை) அவர்களின் சந்ததியினரே. இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு முற்பட்ட நபித்துவ வரலாறென்பது பெரும்பாலும், சமூகங்களின் அழிவுடன் இணைந்தே காணப்படுகிறது. ஒரு இறைத்தூதர் அனுப்பப்படுவார், அவர் தனது சமூகத்துக்கு இறைத்தூதினை எத்திவைப்பார். அவர்களில் சிறு தொகையினர் அத்தூதருக்கு செவி தாழ்த்தி, தூதினை ஏற்றுக் கொள்வர்; மற்றவர்கள் அழிவுக்குட்பட்டனர். எஞ்சிய சிறு தொகையினரிலிருந்து அடுத்த தலைமுறை தோற்றம் பெறும்... இவ்வாறாக சென்று கொண்டிருந்த நபித்துவ வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைகிறார், நபி இப்ராஹீம்(அலை) அவர்கள். 'தனிமனிதர்களில்' (அதாவது, நபிமார்களில்) தங்கியிருந்த இறைத்தூதினை சுமந்து செல்லும் பொறுப்பினை, 'சமூகங்களுக்கு' மாற்றியமைப்பது பற்றி முதலில் சிந்தித்த மனிதர் நபி இப்ராஹீம்(அலை) அவர்கள். அவருக்கு முன்னைய இறைத்தூதர்களின் வரலாற்றில் நிகழ்ந்ததைப் போன்ற, சமூகங்களின் அழிவினை அவர் விரும்பவில்லை. இவ்வகையில், தூதுத்துவப் பணிக்கு புதிதொரு பரிமாணத்தை இப்ராஹீம்(அலை) வழங்குகிறார்கள்.

இப்ராஹீம்(அலை) அவர்களின் இச்சிந்தனையிலிருந்தே, இன்றைய உலகின் பெரும் மதங்களான யூதம், கிறிஸ்த்தவம், இஸ்லாம் ஆகியன தோற்றம் பெறுகின்றன. இம்மூன்று சமூகங்களினதும் ஆதி பிதாவாக இப்ராஹீம்(அலை) கருதப்படுவதும் இதனால் தான். இப்ராஹீம்(அலை) தனது புதிய சிந்தனைக்கு இரண்டு வகையில் நடைமுறை வடிவம் கொடுத்தார்கள். ஒன்று, ஷாமில் தனது ஒரு மகனான இஸ்ஹாக்(அலை) மூலம். இவரின் வழித்தோன்றலிருந்தே பனூ இஸ்ராயிலரும், யூத - கிறிஸ்த்தவ மதங்களும் தோற்றம் பெறுகின்றன. அடுத்தது, இஸ்மாயீல்(அலை) மூலம். இவரின் வழித்தோன்றலிருந்தே இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும், இஸ்லாமும் தோற்றம் பெறுகிறது. இஸ்மாயீல்(அலை) மூலம் இப்ராஹீம்(அலை) தனது சிந்தனைக்கு நடைமுறை வடிவம் கொடுக்க எடுத்த முயற்சிகளையும், தியாகங்களையுமே நாம் இன்று ஹஜ்ஜில் செயல் வடிவில் மீள நிகழ்த்துகிறோம். இதனை வருடந்தோரும் முஸ்லிம் சமூகத்தின் ஆழ்மனதில் பதிக்கும் ஏற்பாடே ஹஜ்!

தனது சிந்தனையை நடைமுறைப்படுத்தும் ஒரு இடமாக ஷாமினை தேர்ந்தெடுத்தார் இப்ராஹீம்(அலை). அடுத்த இடமாக மனித சஞ்சாரம் அற்ற பாலைவெளியான மக்காவைத் தேர்ந்தெடுத்தார். முதலாவது, இடம் (ஷாம்) பல்வேறு சிக்கல்களைக் கொண்டிருந்தன. முன்னைய சமூக அமைப்பும், கலாச்சாரமும் இங்கு தோற்றம் பெறும் புதிய சமூகத்தின் 'நாட்ட சக்தியை' பாதிக்கும் சாத்தியப்பாடு அதிகம். அடுத்த இடமான (மக்கா) மனித சஞ்சாரம் அற்ற இடம். அங்கு தோற்றம் பெறும் புதிய சமூகத்தின் 'நாட்ட சக்தி' வெளித்தாக்கங்களால் பாதிப்புரும் சாத்தியம் மிகக் குறைவு. ஷாமில் தனது முயற்சி தோல்வியுற்றால், அடுத்த ஏற்பாடாக மக்காவை இப்ராஹீம்(அலை) கண்டார்கள். தனது இரண்டாவது தெரிவான மக்காவில், தனது புதிய சமூகத்துக்கான அடித்தளமான 'கஃபாவை' நிர்மாணித்து விட்டு இவ்வாறு பிராத்தித்ததாக அல்குர்ஆன் குறிப்பிடுகிறது:

“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

“எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (ஸூரா பகரா: 128 - 129)

இங்கு அல்குர்ஆன், 'உம்மதன் முஸ்லிமதன் - முஸ்லிம் சமூகம்' என்று குறிப்பிடுகிறது. 'முஸ்லிம்' என்று இந்த சமூகத்துக்கான பெயரை சூட்டியவரும், இப்ராஹீம்(அலை) தான். புதிய சமூகம் ஸ்திரத் தன்மைவாய்ந்ததாகவும், அடிப்படை வசதிகள் பூர்த்தியானதாகவும் இருக்க வேண்டுமென இப்ராஹீம்(அலை) விரும்பினார்கள். அமையவிருக்கும் புதிய முஸ்லிம் சமூகம் பற்றி எந்தளவு நுணுக்கமாக சிந்தித்தார்கள் என்று பாருங்கள். அல்குர்ஆன் இப்படி இப்ராஹீம்(அலை) பிராத்தித்ததாக குறிப்பிடுகிறது:
“இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” (ஸூரா பகரா: 126)

இவ்வகையில், 'முஸ்லிம் சமூகத்தின்' தோற்றத்துக்கான வித்தினை இப்ராஹீம்(அலை) இடுகிறார்கள். தூதுத்துவப் பணி புதியதொரு தளத்துக்கு இப்ராஹீம்(அலை) அவர்களுடன் நகர்கிறது. சமூகங்கள் இறைவனின் தூதினை சுமந்து செல்ல தயார்படுத்தப்படுகிறது. இதனால் தான் என்னவோ, இப்ராஹீம்(அலை) அவர்களை அல்குர்ஆன் 'சமூகம்' என வர்ணிக்கிறது.

முஸ்லிம் சமூகம், தனது தோற்றத்துக்கு காரணமான சிந்தனையை மறந்து விடக்கூடாது என்பது இறைநாட்டம். ஒரு சிந்தனையை சமூகத்தின் கீழ்த்தளம் வரை ஆழப்பதிப்பதற்கான இலகுவான வழிமுறை, அச்சிந்தனையுடன் தொடர்புடைய நிகழ்வினை 'சடங்கு ரீதியில்' மீள நிகழ்த்துவது. அந்நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கு நேரடியாக பிரசன்னமாகி, பாரிய மக்கள் திரளுடன் அந்நிகழ்வினை சடங்காக மீட்டுச் செய்யும் போது அதன் தாக்கம் ஆழமானது. இதனையே முஸ்லிம் சமூகம், தனது தோற்றத்துக்கு மூலமாக அமைந்த இப்ராஹீம்(அலை) அவர்களினதும், அவரின் குடும்பத்தினரினதும் தியாகங்களை 'செயல் வடிவில்' மீளச் செய்வதன் மூலம் தனது ஆன்மாவினுள் ஆழப்பதித்துக் கொள்கிறது. 'ஹலீலுல்லாஹ் - அல்லாஹ்வின் நண்பன்' என அழைக்கப்படும் நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் உயர்ந்த சிந்தனையை மறுமை வரையில் மனித சமூகம் நினைவு கொள்வதற்கான இறைவனின் ஏற்பாடே ஹஜ்!

அல்குர் ஆனைப் பெற்றதற்காக ரமழானில் நோன்பு நோற்று, அதனை கொண்டாட்டமாக - 'ஈதுல் பித்ராக' முஸ்லிம் சமூகம் கொண்டாடுவதினைப் போன்று, தனது தோற்றத்துக்கு அடிப்படையாக அமைந்த இப்ராஹீம்(அலை) அவர்களின் சிந்தனையை 'ஈதுல் அல்ஹாவாக' கொண்டாடி மகிழ்கிறது. 'ஹலீலுல்லாஹ்' நபி இப்ராஹீம் (அலை) மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் இறைவன் சொறிந்த அருள் மிக உயர்ந்தது. உலகின் நாற்திசைகளிலும் வாழும் முஸ்லிம்கள் மக்காவில் ஒன்றுதிரண்டு, அதனை ஆண்டுதோறும் உலகுக்கு அறிவிக்கின்றனர். நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் செயலை இறைவன் ஏற்றுக்கொண்டான், பொருந்திக் கொண்டான். உன்னதமிக்க பேரிறைவனின் மகத்தான அருள்!

“அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்; அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.” (ஸூரா ஆல இம்ரான்: 95).
***
நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் ஏன் இவ்வாறு சிந்தித்தார்கள்?!

“நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்.” (ஸூரா பகரா : 143)

நபித்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் இப்ராஹீம்(அலை) என்று பார்த்தோம். தூதுத்துவப் பணியை புதியதொரு தளத்துக்கு நகர்த்துவது பற்றி முதலில் சிந்தித்த இறைத்தூதர் இப்ராஹீம்(அலை) என்று சொன்னோம். அதுவரையில் 'தனிமனிதர்களில்' (அதாவது, நபிமார்களில்) தங்கியிருந்த இறைத்தூதினை சுமந்து செல்லும் பொறுப்பினை, 'சமூகங்களுக்கு' மாற்றியமைப்பது பற்றி இப்ராஹீம்(அலை) சிந்திக்கிறார்கள்... இப்ராஹீம்(அலை) அவர்கள் வாழ்ந்த காலகட்ட உலகின் சூழல் பின்னனியில் வைத்து இதனை ஆராய முனைகிறது இவ்வாக்கம். இன்னொரு வகையில், மனித சமூகத்தின் வளர்ச்சியில் நிகழ்ந்த முக்கிய ஒரு 'கட்டமைப்பு மாற்றத்தின்' பின்னனியில் இதனை ஆராய முனைகிறது இக்கட்டுரை. (முடிந்த முடிவுகளாக எதனையும் முன்வைக்காமல், உரையாடலுக்குரிய விடயமாக இக்கருத்துக்கள் பகிரப்படுகிறது - அல்லாஹ்வே நன்கறிந்தவன்!).

அல்குர்ஆன் கூறும் நபிமார்களின் வரலாற்றில், முதன் முதலில் ஒரு ஆட்சியாளனை நபி இப்ராஹீம்(அலை) அவர்களே எதிர்கொள்கிறார்கள். இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு முற்பட்ட இறைத்தூதர்கள் ஒரு ஆட்சியாளனை விழித்துப் பேசியதை அல்குர்ஆனில் அவதானிக்க முடியாதுள்ளது; இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு முற்பட்ட அனைத்து நபிமார்களும், தங்களது சமூகத்தை நோக்கியே பேசுகின்றனர். "யா கவ்மி - எனது சமூகத்தினரே" என்று மட்டுமே அவர்களின் அழைப்புப் பணி அமைகிறது; ஒரு 'ஆட்சியாளனை' நோக்கி அவர்கள் விழித்துப் பேசவில்லை. இவ்வகையில், இப்ராஹீம்(அலை) அவர்களே முதன் முதலில் ஒரு ஆட்சியாளரை எதிர்கொள்கிறார்கள்.

“அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா?”
(ஸூரா பகரா : 258)

என்று இப்ராஹீம்(அலை) எதிர்கொண்ட ஆட்சியாளனைப் பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. இப்ராஹீம்(அலை) அவர்களின் சமகாலத்தவரான இறைத்தூதர் லூத்(அலை) கூட எந்தவொரு ஆட்சியாளரையும் எதிர்கொள்ளவில்லை; அவரும் தனது சமூகத்தை நோக்கியே பேசுகிறார்.

ஆனால், இப்ராஹீம்(அலை) எதிர்கொண்ட ஆட்சியாளன், ஒரு பலம் வாய்ந்த ஆட்சியாளனாக தோற்றமளிக்கவில்லை. அவர் விடயத்தில் 'நெருப்பில் இப்ராஹீம்(அலை) அவர்களை எறியும்’ தீர்மானத்தை அவரின் சமூகமே எடுக்கிறது: “(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” (ஸூரா அன்பியா : 68) என்று அவர்கள் தீர்மானம் மேற்கொண்டதாக அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. இவ்விடயங்களினை தொகுத்து நோக்குகையில், இப்ராஹீம்(அலை) வாழ்ந்த காலகட்டம் என்பது 'அரசாட்சி'யின் தோற்றக் காலகட்டமென்றும், 'இனக்குழு' வாழ்விலிருந்து மனித சமூகம் 'மையப்படுத்தப்பட்ட ஆட்சியினை' நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலம் என்றும் கொள்ள முடிகிறது. இதனை மனித வரலாறு பற்றிய ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. வரலாற்றில் 'அரசாட்சி'யின் தோற்றம் என்பது 'ஷாம்', அதனை சூழவுள்ள பகுதிகளிலேயே தொடங்கியதாக வரலாற்றுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. சுமேரிய - மொசமதேமிய - பாபிலோனிய, எகிப்திய போன்ற பண்டைய நாகரீகங்களும் இப்பகுதிக்குரியவைதான்.

இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு பின்னர் வந்த இறைத்தூதர்களே, பாரிய சாம்ராஜ்யங்களையும் ஆட்சியாளனை மையப்படுத்திய சமூகங்களையும் சந்திக்கின்றனர். ஒருவகையில் இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு பிற்பட்ட நபிமார்களின் போராட்டம் என்பது ஆட்சியாளர்களுக்கெதிரான போராட்டமாகவே அமைகிறது. இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு பிற்பட்ட அனைத்து நபிமார்களும் 'அரசாட்சி' தோற்றம் பெற்ற காலத்திலேயே வாழ்கின்றனர். இவர்களில் பலர் நேரடியாகவே ஆட்சியாளர்களை எதிர்கொண்டுள்ளனர். இன்னும் சிலர் ஆட்சியாளராகவும் இருந்துள்ளனர். யூஸுப்(அலை) அவர்கள் 'அமைச்சுகளாக' நிர்வாகத் துறை பிரிக்கப்பட்டு, தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எகிப்திய ஆட்சியாளரை சந்திக்கிறார். அவ்வாட்சியில் பொருளாதாரத் திட்டமிடலுக்கான பொறுப்பினையும் வகிக்கிறார். அவருக்கு பிற்பட்ட மூஸா(அலை) அவர்கள் கடுமையாக மையப்படுத்தப்பட்ட, பலம்வாய்ந்த 'பிர்அன்களின்'('பிர்அவ்ன்' என்பது ஒரு பரம்பரையின் பெயர்) ஆட்சியை எதிர்கொள்கிறார்கள். தாவூத் மற்றும் ஸுலைமான்(அலை) ஆகியோர் பலஸ்தீனின் ஒரு பகுதிக்கு ஆட்சியாளராக இருக்கிறார்கள். இறுதியாக, ஈஸா(அலை) அவர்கள் தனது சமூகம் ரோம சாம்ராஜ்யத்தினால் அடிமைபடுத்தப்பட்ட சூழலில் பிறந்து வளர்கிறார்கள். ஈஸா(அலை) அவர்களின் காலகட்டமென்பது, அரசாட்சியானது தனது நிலத்தையும் தாண்டி, பிற நிலங்களையும், சமூகங்களையும் அடிமைப்படுத்தும் 'சாம்ராஜ்ய' ஒழுங்கைப் பெற்ற காலகட்டம். அவர்களின் போராட்ட வியூகமும் 'சாம்ராஜ்யங்களை' எதிர்கொள்வதாக அமைகிறது. (ஈஸா(அலை) அவர்களின் போராட்ட வியூகம் தனியாக நோக்கப்பட வேண்டிய ஒன்று). நபி முஹம்மத்(ஸல்) அவர்களின் பிறப்பின் போதும், உலகில் சாம்ராஜ்ய ஒழுங்கே நிலவுகிறது.

நிற்க...விடயத்துக்கு வருவோம்!
ஏன் இப்ராஹீம்(அலை) அவர்கள் இவ்வாறு சிந்தித்தார்கள்?!
'அரசுகளின் தோற்றம்' என்பது மனித வரலாற்றின் ஒரு முக்கிய 'கட்டமைப்பு மாற்றம்'. அரசுகளின் தோற்றம் அதுவரையிலான மனிதனின் 'இனக்குழு' வாழ்வினை விளிம்புக்குத் தள்ளியது. அரசுகளின் தோற்றத்துக்குப் பிறகான மனித வரலாறென்பது, ஆட்சிகளின் வரலாறாகவே மாறிப்போயின. அரசுகள், அதற்கு முன்னரான இனக்குழுக்களை தன்னுள் உள்ளீர்த்தன; அல்லது அடக்கி, ஒடுக்கி, அழித்தன. மனித வரலாறென்பது பின்னகரக் கூடிய ஒன்றல்ல. மனிதனை சீர்திருத்துவதனை இலக்காகக் கொண்டது, இறைத்தூது. அது உலகில் நீதியினை, சமத்துவத்தினை நிலைநிறுத்த முனைகின்றன. ஒருவகையில் அது பலவீனமானவர்களின் மார்க்கம். அரசுகளின் தோற்றம், தூதுத்துவப் பணிக்கு புதியதொரு சவாலை ஏற்படுத்துகிறது. அதுவரையில் நபிமார்கள், 'ஒழுங்குபடுத்தப்பட்ட' அதிகாரங்களை எதிர்கொள்ளவில்லை. நபிமார்களில் இதனை முதலில் எதிர்கொண்டவர், நபி இப்ராஹீம்(அலை) அவர்கள். எனவே, புதிய சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முன்னைய போராட்ட ஒழுங்கிலிருந்து மாறுபட்டு சிந்திக்கிறார் இப்ராஹீம்(அலை).

நிறுவனமயப்பட்ட / ஒழுங்குபடுத்தப்பட்ட அதிகாரங்களை நபிமார்களால் தனிமனிதர்களாக நின்று எதிர்கொள்ள முடியாது. 'முடியாது' என்பது மட்டுமல்ல, இறைத்தூதினை பூமியில் நிலைநிறுத்தும் பொறுப்பும் அவர்களுக்குரியது. இதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பதற்கு இப்ராஹீம்(அலை) அவர்கள் கண்டடைந்த ஒழுங்கே 'சமூகம்'. 'தனிமர்களை' முறியடிப்பது / எதிர்கொள்வது போன்று 'சமூகங்களை' அரசுகளால் எதிர்கொள்ள முடியாது. தான் ஆட்சி செய்யும் சமூகத்திடமிருந்தே, ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பெறுகின்றனர். சமூகத்தில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் ஆட்சியதிகாரத்தில் - நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ - தாக்கம் செலுத்துகின்றன. சமூகங்கள் தூதினை சுமந்து செல்லும் போது பேரரசுகள் கூட ஆட்டங்கண்டுள்ளன, வீழ்ந்துள்ளன. இரு உதாரணங்களை கொண்டு இதனை நோக்குவோம்.

முதலாவது, ரோம சாம்ராஜ்யம் கிறிஸ்த்தவத்திடம் விழுதல்... ஈஸா(அலை) உயர்த்தப்படும் பொழுது, ஈஸா(அலை) அவர்களின் கொள்கையினை ஏற்றுக் கொண்டவர்கள் மிகச் சொற்பத்தொகையினர். ஈஸா(அலை) அவர்களின் சமூகத்தை அடிமைப்படுத்தியிருந்த ரோம சாம்ராஜ்யம், ஈஸா(அலை) அவர்களுக்குப் பிறகான சில நூற்றாண்டுகளில் கிறிஸ்த்தவத்திடம் வீழ்கிறது. அதன் ஆட்சியாளரை தீர்மானிக்கும் சக்தியாக கிறிஸ்த்தவம் மாறுகிறது. கிறிஸ்த்தவத்தினை ஏற்காமல், தனது ஆட்சியதிகாரத்தினை தக்கவைக்க முடியாது என்ற நிலைக்கு அதன் ஆட்சியாளர்கள் வருகின்றனர் - அதன் மக்களின் மதமாக கிறிஸ்த்தவம் மாறியதன் விளைவாக. அடுத்தது, இஸ்லாத்தின் தோற்றம்... இஸ்லாத்தின் தோற்றத்துடன், ஒரு நூற்றாண்டுக்குள் ரோம சாம்ராஜ்யம் கீழைத்தேய உலகில் அடிமைப்படுத்தியிருந்த நிலங்களை முஸ்லிம்களிடம் இழக்கிறது; பாராசீக சாம்ராஜ்யம், இஸ்லாத்தின் முன்னிலையில் முழுமையாக மண்டியிடுகிறது. இஸ்லாம் வெறும் நிலங்களை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அதன் மக்களின் உள்ளங்களையும் வெற்றி கொள்கிறது. அடிமைப்படுத்தப்பட்ட இந்நிலங்களின் மக்கள், விடுதலையின் காற்றை சுவாசிக்கின்றனர். ('சாம்ராஜ்ய ஒழுங்கு' தன்னுள் அடிமைப்படுத்தலையும் கொண்டே தொழிற்படுகிறது. இதற்கான மாற்று ஒழுங்கையே 'குலபாவுர் ராஸிதூன்கள்' கண்டடைய முனைந்தனர்). மனித சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் ஆற்றலை, இப்ராஹீம்(அலை) அவர்களின் சிந்தனை பெறுகின்றது. மனித வரலாறு புதிய திசையில் பயணிக்கத் தொடங்குகிறது.

“ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!” (37: 109).
***

பிற்குறிப்பு - 01 : ஷாமில் இப்ராஹீம்(அலை) மேற்கொண்ட முயற்சி, இஸ்ஹாக்(அலை) அவர்களில் தொடங்கி ஈஸா(அலை) அவர்கள் வரையில் தொடர்கிறது. பனூ இஸ்ராயிலர்கள் அவர்களின் இறைத்தூதர்களுடன் நடந்து கொண்ட முறையினை அல்குர்ஆன் விரிவாக விளக்குகிறது. பனூ இஸ்ராயிலர்களின் தோற்றம் பெற்ற இறுதி இறைத்தூதர் நபி ஈஸா(அலை) அவர்களின் வருகைக்குப் பின்னர் சில நூற்றாண்டுகளில், அவர் கொண்டு வந்த தூது அதன் தூய்மை வடிவினை இழக்கிறது. அதுவரையில் இஸ்மாயீல்(அலை) அவர்களின் வழித்தோன்றல்கள் வாழ்ந்த மக்காவில் எந்தவொரு இறைத்தூதரும் தோன்றவில்லை. ஈஸா(அலை) அவர்களுக்கு சுமார் 500 வருடங்களுக்குப் பிறகு முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்காவில் பிறக்கிறார்கள். முஹம்மத்(ஸல்) அவர்களின் வருகையுடன் தூதை சுமக்கும் பொறுப்பு பனூ இஸ்ராயிலர்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்துக்கு கைமாறுகிறது. இதனை குறியீட்டு வடிவில் உணர்த்தும் நிகழ்வாக பைத்துல் முகத்திஸில் இருந்து கஃபாவுக்கான 'கிப்லா' மாற்றம் நிகழ்கிறது. (பனூ இஸ்ராயிலர்களின் 'நாட்ட சக்தி'யிலிருந்த சிக்கல்களை, அவர்கள் இறைத்தூதுடன் நடந்து கொண்ட வரலாற்றினூடே - முஸ்லிம் சமூகத்துக்குப் படிப்பினையாக - பல ஸூராக்களில் விளக்குகிறது அல்குர்ஆன்).

பிற்குறிப்பு - 02: 'கவ்ம்' என்பதையும், 'உம்மத்' என்பதையும் நாம் தமிழில் 'சமூகம் / சமுதாயம்' என்றே மொழியாக்கம் செய்கிறோம். இச்சொற்களை அல்குர்ஆன் பயன்படுத்திய விதத்தில் நுண்ணிய வேறுபாடுகள் இருக்கின்றன. இப்ராஹீம்(அலை) தான் உருவாக்க முனைந்த 'சமூகம்' என்பதை 'உம்மத்' என்றே அழைக்கிறார்.

(படம் - 02: "பெர்டைல் கிரசன்ட்"(Fertile Crescent) எனும் பகுதி இது. முதன் முதலில் தாவரங்கள், மிருகங்களை பழக்குவது தொடங்கி அரசுகளின் தோற்றம் வரை நிகழ்ந்ததாக வரலாற்றாய்வாளர்களால் கருதப்படும் பகுதி. இது ஷாமின் ஒரு பகுதி என்பதை கவனிக்கவும்).

முகநூல் நண்பர் இலங்கையைச் சேர்ந்த சகோதரர் மனாஸிர்(Manazir zarook) அவர்கள் தன்னுடைய முகநூலில் பதிந்த கட்டுரை இது.இங்கு அவரின் அனுமதியுடன் இதை நான் பதிவேற்றி உள்ளேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்த் தஆலா தன்புறத்திலான ரஹ்மத்துகளையும்,பரக்கத்துகளையும் அவருக்கு அதிகமதிகம் தந்தருள்வானாக!!!!
ஆமீன்.

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா