தன்னம்பிக்கை!!

இஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ பெரிய சமூகங்களை சிறிய குழுக்களாகவும்,அதிகாரத்திற்கு வந்தபின்  சிறிய படைகளாகவும் இருந்து கொண்டு பெரிய வல்லரசுகளையும் வீழ்த்தியவர்கள் முஸ்லீம்கள்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் உலகம் முழுக்க இஸ்லாமிய உம்மத்தை சிதறடித்துக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய எதிரிகள்.உலகம் முழுக்க மிகப் பெரிய மக்கள் கூட்டங்களில் ஒன்றாக இருக்கக் கூடிய முஸ்லீம் சமூகத்தின் தற்போதைய நிலைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தங்களின் தன்னம்பிக்கையை இழந்ததுதான்.

தன்னம்பிக்கை என்பது மிக முக்கியமான ஒரு தூண்டல் காரணி.ஒரு தனி மனிதருக்கோ அல்லது சமூகத்திற்கோ மாற்றம் வேண்டும் என்ற சிந்தனை வரும் பொழுது அங்கு இடம் பெற வேண்டிய முதல் அம்சமே தன்னம்பிக்கைதான்.எனவே இன்று இஸ்லாமிய உம்மத் மீளெழுச்சி பெறுவதற்கு முக்கியமான உந்துசக்தி தன்னம்பிக்கைதான்.

அதே நேரம் முஸ்லீம்கள் தங்களின் அனைத்துக் காரியங்களுக்கும் வழிகாட்டுதலாகக் கொண்டு பின்பற்றும் குர்ஆனில் பின்வருமா று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.َ‏ 
      
"(இதற்கு முன்பு) எத்தனையோ இறைத்தூதர்(களும் அவர்)களோடு சேர்ந்து இறை அன்பர்கள் பலரும் போர் புரிந்துள்ளார்கள். அல்லாஹ்வின் வழியில், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களினால் அவர்கள் மனந்தளர்ந்து விடவில்லை; ஊக்கம் குன்றிவிடவுமில்லை. (அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணிந்திடவுமில்லை. நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்."
(அல்குர்ஆன் : 3:146)

இந்த வசனத்தில் இடம் பெறும் நிலைகுலையாத பொறுமை என்பது தன்னம்பிக்கையையே குறிக்கிறது.

இந்த வசனத்தின் தொடர்ச்சியாக வரும் அடுத்த வசனத்தில் அந்த தன்னம்பிக்கையாளர்களின் பிரார்த்தனைகள் இவ்வாறு இருந்தது என்று குறிப்பிடுகிறான்.

"அவர்களுடைய பிரார்த்தனை இதுவாகத்தான் இருந்தது: “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் பிழைகளையும் நீ மன்னித்தருள்வாயாக! எங்கள் பணிகளில் உன் வரம்பை மீறி நாங்கள் செய்தவற்றை நீ மன்னிப்பாயாக! மேலும் எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! சத்தியத்தை நிராகரிப்பவர்களை வெற்றிகொள்ள எங்களுக்கு நீ உதவி செய்வாயாக!”
(அல்குர்ஆன் : 3:147).

தன்னம்பிக்கை குறித்து இன்னும் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உண்டு.அதில் இரண்டை மட்டுமே குறிப்பிட்டுளேன். இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரை தன்னம்பிக்கை என்பது ஈமானின் ஒரு பகுதி!!

இந்த தன்னம்பிக்கை என்ற பண்பு முஸ்லீம் சமூகத்திடம் இருந்து விலகிப் போனதற்கு நான்கு முக்கிய அம்சங்கள் காரணிகளாகும்.அவையாவன:

1.பயம்:
     உம்மத்தின் தலையாய பிரச்சினை இது.இறைவன் மேலிருந்த பயம் அகன்று எதிரிகளின் வலிமையையும்,அதிகாரத்தையும் கண்டு இஸ்லாமிய சமூகம் எப்பொழுது அச்சமடைய ஆரம்பித்ததோ அன்றிலிருந்து இன்று வரை தோற்கடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.ஆனால் அல்லாஹ்வை பின்பற்றக் கூடிய நம்பிக்கையாளர்கள் கூட்டம் எதிரிகளைக் கண்டு ஒரு போதும் பயப்பட மாட்டார்கள்.இது குறித்து அல்லாஹ் தன் திருமறையில் இப்படிக் கூறுகிறான்:
ُ‏ 
“உங்களுக்கு எதிராகப் பகைவர்கள் (பெரும்படையாகத்) திரண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு அஞ்சுங்கள்!” என்று மக்கள் அவர்களிடம் கூறினார்கள். அதனைக் கேட்டு அவர்களின் இறைநம்பிக்கை இன்னும் அதிகமாகிவிட்டது. அதுமட்டுமல்ல, “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” என்றும் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 3:173)

"இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் பெருங் கொடைகளையும் அருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. இன்னும் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தின்படி நடந்தார்கள் (எனும் சிறப்பும் அவர்களுக்குக் கிடைத்தது). மேலும், அல்லாஹ் மகத்தான கொடையாளனாக இருக்கின்றான்."
(அல்குர்ஆன் : 3:174)
َ‏ 
"தன் நண்பர்களைக் கொண்டு உங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஷைத்தானே அவ்வாறு கூறியவன் (என்பது இப்போது உங்களுக்குப் புரிந்துவிட்டது). எனவே நீங்கள் உண்மையிலேயே இறைநம்பிக்கையுடையோராயின் (இனி) அம்மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்!"
(அல்குர்ஆன் : 3:175)

2.நிராசை:
    தங்களின் காரியங்களோ,செயல்களோ நடக்கவில்லை என்றாலும்,தங்களின் செயல்கள் சுதந்திரமாக அமையவில்லை என்றாலும் இன்று இஸ்லாமிய சமூகம் நிராசை அடைந்து விடுகிறது.ஆனால் அல்லாஹ் தன் வேதத்தில் குறிப்பிடுவதைப் பாருங்கள்:

"அல்லாஹ்வின் கருணையைக் குறித்து நிராசை அடையாதீர்கள்! நிராகரிக்கும் மக்கள்தாம் அவனுடைய கருணையைக் குறித்து நிராசை அடைகின்றார்கள்."
(அல்குர்ஆன் : 12:87).

3.ஈமானை தவறாக புரிந்து கொள்வது:
  இந்தப் பிரச்சினை இன்று மிக முக்கிய ஒன்றாகும்.ஏனென்றால் இதைக் காரணமாக வைத்து முஸ்லீம்கள் எளிதாக தங்களின் உன்னதமான பணிகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கிறார்கள்.உலகில் ஏதாவது ஒரு இடத்தில் முஸ்லீம்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால் இங்கிருப்பவர்கள் அந்த மக்களை நோக்கி அவர்களின் ஈமானை உரசிப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.மற்றவர்களின் உள்ளங்களை பிளந்து பார்த்தது போல் ஈமானுக்கு விளக்கம் கொடுத்து விடுகிறார்கள்.இது எவ்வளவு மோசமாக இப்பொழுது சென்று கொண்டிருக்கிறது.சக இஸ்லாமிய சகோதரனை முர்தத் என்று கூறுமளவிற்குச் சென்று விட்டது(இத்தகைய பாவத்திலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!).

4.சோதனைகள் அல்லாஹ்வின் நியதி என்ற எண்ணம் இல்லாமல் இருத்தல்:
       தமக்கு வரும் சோதனைகள் அனைத்தும் இறைவன் தன் புறத்திலிருந்து மனிதர்களை சீர்படுத்த,தன்னுடைய அத்தாட்சியை மனிதர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் என்ற சிந்தனை இல்லாமல் உலகாதாயத்தில் இன்பம் காண்பது.
இதுபற்றி அல்லாஹ்வின் வார்த்தையை பாருங்கள்:
       "உங்களுக்கு முன் சென்றுவிட்ட (நம்பிக்கையுடைய)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? இன்னல்களும் இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன. (அன்றைய) இறைத்தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் “அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வரும்?” என்று (புலம்பிக்) கேட்கும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். (அப்பொழுது அவர்களுக்கு இவ்வாறு ஆறுதல் கூறப்பட்டது:) “இதோ! அல்லாஹ்வுடைய உதவி அண்மையில் இருக்கிறது.”
(அல்குர்ஆன் : 2:214).

ஆகவே இன்றை காலகட்டத்தில் இந்த உம்மத்திற்கு மிக அவசியமான தன்னம்பிக்கையை அதிகமாக ஊட்டக்கூடிய வகுப்புகள்,செயற்களங்கள்,முன்மாதிரிகள் போன்றவற்றை அதிகமாக்க வேண்டும்.இந்த சமூகம் மீண்டும் மீளெழுச்சி பெற்று இந்த உலகத்திற்கு வழிகாட்டியாய் ஒளிரும் என்ற நேர்மறையான எண்ணத்தில் செயல்படுவதற்கும்,அதற்கான அனைத்து தயாரிப்புகளையும் செய்வதற்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!!!

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.