வட்டி ஒரு இஸ்லாமியப் பார்வை.

வட்டி ஒரு சமூகக் கொடுமை!

வட்டி… வட்டி… வட்டி…

தமிழில் ஒரு பிரபலமான கூற்று உண்டு!

அட்டிகை செய்வதற்கு வட்டிக்கு வாங்கினேன். வட்டியைக் கட்ட முடியாமல் அட்டிகையை விற்று வட்டியைக் கட்டினேன். – பழமொழி.

அட்டிகையை விற்றும் வட்டிக் கணக்கு முடியாமல் புட்டி விஷத்தில் மொத்தக் கணக்கையும் முடித்துக் கொண்டவர்கள் இன்று எத்தனையோ பேர்.

 உன் அப்பன் செத்தால் என்ன ? நீ வட்டியைக் கட்டு, உன் கணவன் செத்தால் என்ன ? நீ வட்டியைக் கட்டு என்று கல்நெஞ்சர்கள் மனைவிப் பிள்ளைகளை விரட்டுவார்கள் என்பதால் அவர்கள் வாயிலும் விஷத்தை ஊற்றி என்னுடன் அழைத்துச் சென்று விட்டேன் என்று வட்டிக்கடன் அடைக்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டவர்களின் காலுக்கடியில் இருக்கும் கடிதத்தில் மேற்காணும் விதம் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

 வாழ்ந்து கெட்டவர்கள் என்று சொல்வதுண்டு, வட்டியால் அழிந்து கெட்டவர்களே அதிகம்.

 இன்னும்

வட்டிக் கொடுமையால் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு அதன் அதிபர்கள் எஸ்கேப், அல்லது தற்கொலை.

 இன்னும்

வட்டிக் கொடுமையால் சின்னஞ்சிறு நாடுகள் கடன் பெற்ற நாடுகளின் (திரைமறைவில்) காலனி நாடுகள்.

 இன்னும்

வட்டியின் அடிப்படையில் பொருளாதாரத்தை அமைத்துக்கொண்ட ஆஹா, ஓஹோ நாடுகளின் அடித்தளம் இன்று காலி.

1400 வருடங்களுக்கு முன்னரே, வட்டி எனும் தீமை வளர்வது போல் தெரிந்தாலும் அதன் இறுதிப் பலன் அழிவையேத் தரும் என்று அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறிச் சென்றார்கள். வட்டிப்பொருள் வளர்ந்த போதிலும் உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம் தான். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்னுமஸ்ஊத் (ரழி). திர்மிதி, நஸயீ

 திருக்குர்ஆன் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதற்கு 1400வருடங்களுக்கு முன்பு இறக்கி அருளிய,திருக்குர்ஆன் முழங்கிய வட்டியின் தீமைகள் பற்றிய எச்சரிக்கைகள் இன்று நம் கண் முன் நிகழும் பேரழிவுகள் பெரிய எடுத்துக் காட்டாகும்.

 மனித குலத்தைப் பெரும் அழிவில் ஆழ்த்தும் வட்டி எனும் தீமையை தடுத்து நிறுத்துவதற்காக அதை பெரும் பாவங்களின் பட்டியலில் இஸ்லாம் சேர்த்து. அந்தப் பெரும் பாவத்தை செய்பவர்களுக்கு ரைட் அன்ட் லெஃப்டாக துணை நிற்பவர்கள், அதில் ஊழியம் செய்து கூலி பெறுபவர்கள்அனைவரையும் பாவத்தில் இழுத்துப்போட்டது இஸ்லாம். வட்டியைப் புசிப்பவன், அதனைப் புசிக்கச் செய்பவன், அதற்காக கணக்கு எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறுபவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு அத்தனை பேரும் குற்றத்தில் சமமானவர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்.

 இன்று வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தொழில்களில் பணிபுரிவதற்கு மறு உலக வாழ்வை நம்பி வாழும் முஸ்லீம்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு, இஸ்லாம் தடுத்த வழியில் பொருளீட்டுவதற்கு ஆர்வம் காட்டும் மக்கள் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் முன்கூட்டியே முன்னறிவிப்பு செய்து விட்டார்கள். மக்களுக்கு ஒரு காலம் வரும் அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா ? ஹராமானதா ? முறையானதா ? முறையற்றதா ? என்பனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபூஹுரைரா (ரழி) புகாரி.

வட்டியைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடும் போது:

*வட்டியை உண்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது(ஹராமாக்கப்பட்டுள்ளது).

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُضَاعَفَةً وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُوَ (130) وَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ لِلْكَافِرِينَ (3:131)

நம்பிக்கை கொண்டோரே ! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்.அல்லாஹ்வை அஞ்சுங்கள் ! இதனால் வெற்றி பெறுவீர்கள். ஏக இறைவனை மறுப்போருக்காகத் தயாரிக்கப் பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்(3:130,131)

*வட்டி உண்பவன் மறுமையில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் எழுப்பப்படுவான்.

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ(2:275)

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)

*வட்டி அழிக்கப்பட்டு, தர்மம் வளர்க்கப்படுகிறது.

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ (2:276)

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான் நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.(2:276)

*வட்டியை விடுபவருக்கு அதற்கு முன் சென்றவைகள் ஹலாலானதாகும்.

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ(2:275)

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)

*வர வேண்டிய வட்டியை விடுபவரே முஃமினாவார்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (2:278)

நம்பிக்கை கொண்டோரே ! அல்லாஹ்வை அஞ்சுங்கள் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.(2:278)

*வட்டியை விடாதவருடன் இறைவன் போர் பிரகடனம் செய்கிறான்.

فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ (2:279)

அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.(2:279)

*நபி(ஸல்)அவர்களின் வருகைக்கு முன்பே வட்டி தடை செய்யப்பட்டிருந்தது.

فَبِظُلْمٍ مِنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيلِ اللَّهِ كَثِيرًا (160) وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا (4:160.161)

யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததின் காரணமாகவும், வட்டியை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களை தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்குத் தடை செய்தோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்கு துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.(4:160,161)

*வட்டி செல்வத்தை பெருக்காது, ஸக்காத் செல்வத்தைப் பெருக்கும்.

وَمَا آتَيْتُمْ مِنْ رِبًا لِيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِنْدَ اللَّهِ وَمَا آتَيْتُمْ مِنْ زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الْمُضْعِفُونَ (30:39)

மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸக்காத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.(30:39)

வட்டி குறித்து நபிகள்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள் வட்டியை உண்பவன், உண்ணக் கொடுப்பவன், எழுதுபவன், சாட்சிக் கையெழுத்துப் போடும் இருவர் ஆகிய அனைவரையும் நபியவர்கள் சபித்தார்கள்.அவர்கள் அனைவரும் (பாவத்தில்)சமனானவர்கள் என்றும் கூறினார்கள். (முஸ்லிம் – 2995)

பெரும்பாவங்களில் ஒன்று.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள், பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது,வட்டியைப் புசிப்பது,அநாதைகளின் செல்வத்தை உண்பது,போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது,இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்) என்று கூறினார்கள்.( புகாரி – 6857)

ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவர்கள் மிகைத்திருப்பார்கள் வட்டி உண்ணாதிருப்பவர் மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத்இ நஸயீ

வட்டியின் சில வகைகள்:

இன்று நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்னே பார்க்கின்றோம் வங்கிகளுக்கு சவால் விடும் அளவுக்கு வட்டிப் பல பெயர்களில் வங்கிகளுக்கு வெளியில் பவனி வருகின்றது.

*இன்ஷூரன்ஸ்      அறிமுகப்படுத்தும் போனஸ் என்றப் பெயரில் வட்டி.

*கன ரக      வாகனங்கள் முதல் மித ரக வாகனங்கள் வரை, பாத்திரம் பண்டங்கள் வரை தவனை முறையில் பணம் செலுத்தும்      இன்ஸ்டால்மென்ட் என்ற பெயரில் வட்டி.

*ஏலச்      சீட்டு என்றப் பெயரில் கர்ண கொடூரமான வட்டி.

*சாதாரண      மளிகைக் கடையில் தினந்தோறும் காசு கொடுத்து வாங்குபவருக்கு ஒரு ரேட் மாதம்      முடிந்து காசுக் கொடுப்பவருக்கு ஒரு ரேட் என்று பகிரங்க வட்டி.

*இது மட்டுமில்லாமல்
முஸ்லீம்கள் மிகுதியாக வாழும் பகுதிகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்ற பெயரில் அரசு,தனியார் வங்கிகள் நடத்தும் வட்டிக் குழுக்கள்.

இதில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்பது முழுக்க,முழுக்க பெண்களை மையப்படுத்தி செய்யப்படும் வட்டிமுறையாகும்.
இன்று நம் சமூகத்தில் பெண்களிடையே மகளிர் சுயஉதவிக்  குழுவில் இருந்து பணம் கொடுக்கல் வாங்கல் மிகத் தாராளமாக நடக்கிறது.இதைக் கட்டுப்படுத்தி சமூகத்தில் தீமையைப் பரவச்செய்யாமல் காப்பது நம் அனைவரின் மீதும் கட்டாயக் கடைமை.

இது மட்டும் அல்லாமல்,கந்துவட்டி,மீட்டர்வட்டி,மணிநேர வட்டி என்று வட்டியின் வகைகள் நீண்டு கொண்டே செல்கிறது.

வட்டியினால் ஏற்படும் தீமைகள்:

*சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்துவது.

*குடும்பங்களில் குழப்பம் ஏற்படுவது.

*செய்யும் தொழில்களில் நஷ்டத்தை உண்டுபண்ணுவது.

*வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி அடைக்க வழியில்லாமல் தற்கொலை செய்வது.

*மக்களை கொத்தடிமைகளாக மாற்றுவது.
என்று இதன் தீமைகள் நீண்டு கொண்டே செல்கிறது!!.

எனவே மக்கள் அனைவரும் வட்டியின் தீமையினையும்,கொடுமைகளையும் உணர்ந்து இறைவன் கூறும் பெரும்பாவங்களில் ஒன்றான வட்டியிலிருந்து விலகி இருக்க இறைவன் அருள் புரிவானாக!!


வட்டி வாங்கும் கொடுக்கும் மனித சமுதாயமே! சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வின் தண்டனைகளுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்! துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கும் நம் சகோதரர்களுக்கு அழகிய கடன் கொடுப்போம்! நம் தகுதியை விட கூடுதலாக ஏற்படும் தேவைகளை தவிர்ப்போம்! "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" எனும் முது மொழியை மனதிற் கொண்டு உள்ளதைக் கொண்டு போதுமாக்கும் மனப் பக்குவத்தை உண்டாக்குவோம்! அதுவே! இன்பத்தின் திறவு கோல் என உள்ளத்திற்கு கூறுவோம்!

வட்டியை ஒழிப்போம். வட்டி இல்லாத ஓர் உலகு படைப்போம். அல்லாஹ் அதற்கு துணைச் செய்யப் போதுமானவன்.

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.